நீட் விலக்கு மசோதா: "சுயாட்சி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், TNDIPR
"நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய செயல், மாநில சுயாட்சியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்'' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பியது பற்றி விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 8) கூடியது.
இதையடுத்து அவை நடவடிக்கை தொடங்கியதும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், "நீட் தேர்வு தொடர்பாக வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்த பிறகே நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தயார் செய்தது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன," என்று கூறினார்.
"அரசின் கொள்கை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சரியல்ல'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TNDIPR
மேலும், ஆளுநரின் கடிதத்தில் வேலூர் சி.எம்.சி மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீட் தேர்வை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்,
இதைத்தொடர்ந்து பேசிய பா.ஜ.க சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், "ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவிக்கவில்லை" எனக் கூறிவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பட மூலாதாரம், TNDIPR
இதன்பிறகு, நீட் விலக்கு சட்ட முன்வடிவு குறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வு ஒரு பலிபீடம். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளது நீட் தேர்வு," என்று குறிப்பிட்டார்.
பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஏ.கே.ராஜன் குழு தெரிவிக்கிறது. இதனை மறுப்பவர்களின் கருத்தும் குழுவில் இடம்பெற்றுள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம்பெற்றவர்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு குறிப்பிடவில்லை என்று ஆளுநர் சொல்கிறார். 12 ஆம் வகுப்பில் இந்தப் பாடங்களைப் படித்தவர்கள்தான் மருத்துவப் படிப்பை தேர்வு செய்கின்றனர். அதனால்தான் பிளஸ் 2 பாடங்களே போதும் என்கிறோம். நீட் தேர்வு வருவதற்கு முன்னதாக மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்தான் அதிகளவில் தேர்வாகி வந்தனர். நீட் தேர்வு வந்த பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. 'கறுப்பாக உள்ளவர்கள் உள்ளே வரக் கூடாது' என்பது எத்தகைய பாகுபாடோ, அதேபோல், மாநிலப் பாடத்திட்டத்தைப் புறக்கணிப்பதும் பாகுபாடுதான். நீட் தேர்வானது தனியார் பயிற்சி மையங்களைத்தான் ஊக்குவிக்கிறது'' என்றார்.
"ஒரு மாணவர் 2, 3 ஆண்டுகள் நீட் தேர்வு தனிப்பயிற்சிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இதனை ஏழை மாணவர்களால் எப்படிச் சமாளிக்க முடியும். கட்டணம் செலுத்தி பயிற்சி எடுக்க முடிந்தவர்களால் மட்டுமே நுழைவு முடியும் என்பது தீண்டாமை. அந்தத் தீண்டாமையை ஒழிப்பதற்காகத்தான் இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறோம்'' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TNDIPR
"வேலூர் கிறிஸ்துவ கல்லூரி வழக்கை, ஆளுநர் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த வழக்கின் தன்மை என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதற்கும் நாம் கொண்டு வரும் நீட் விலக்கு மசோதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே வழக்கில் நீதியரசர் பானுமதி வழங்கிய தனித் தீர்ப்பில், மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்'' என்றார்.
சமூகத்தில் பின்தங்கியவர்களின் நலனுக்காக எந்த வசதியையும் செய்து கொள்ளலாம் என அரசியலமைப்புச் சட்டம் சொல்வதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், "நீட் தேர்வு பாகுபாட்டைக் காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் நீதியைப் பேசுகிறது. ஆனால், நீட் தேர்வு பணக்காரர்களுக்கானதைப் பற்றிப் பேசுகிறது. அதனால்தான் விலக்கு கேட்கிறோம். ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் மோசமான ஒன்று என நீண்டநேரம் வாதாடவேண்டிய அவசியம் உள்ளதே என்பதே என்பதுதான் எனக்கு வேதனையைத் தருகிறது.
கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அண்ணா பேசியபோது, அந்தப் பெயரைப் புரிந்து கொள்ளவே அங்குள்ளவருக்கு நீண்ட நேரம் ஆகியுள்ளது. எனவே, நீட் விலக்கு பெறும் வரையில் ஓய மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

பட மூலாதாரம், TNDIPR
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், "இது ஏதோ நீட் விவகாரம் மட்டுமல்ல, நாம் சட்டமசோதாவை நிறைவேற்றினோம்; அதை ஆளுநர் திருப்பியனுப்பியதாக மட்டும் இதை பார்க்கவில்லை. நமது மாநிலத்தின் உரிமையும் சட்டமன்றத்தின் இறையாண்மையும் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவம் தலைகுனிந்து நிற்கிறது. இந்திய மாநில சட்டமன்றங்களுக்கு முன்னுதாரணமாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உதாசீனப்படுத்த முடியும் என்றால், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்களின் நிலை என்ன?
பல்வேறு இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் கொண்ட மக்களின் நிலை என்ன? மக்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதவை நியமனப் பதவில் உள்ளவர் மதிக்காமல் திருப்பி அனுப்புகிறார் என்றால், இது மக்களாட்சி தத்துவத்துக்கே எதிரானது. பிறகு யாரை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதுதான் நமது கேள்வி. வேற்றுமையில் ஒற்றுமையை சிதைக்கலாமா?'' என்றார்.
"வலிமையான அரசா நேர்மையான அரசா என்றால், நேர்மையான அரசுதான் மக்களால் நேசிக்கப்படும். பலதரப்பட்ட மக்களைக் கொண்ட கூட்டாட்சிக்கு சவால்விடும் வகையில் சமீபகாலக் காட்சிகள் நடந்து வருகின்றன. சமூகநீதி மட்டும் திராவிட இயக்ககத்தின் கொடை என நினைக்கிறார்கள். மாநில சுயாட்சியும் திராவிட இயக்கத்தின் கொடைதான்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேராத வண்ணம், மத்திய, மாநில உறவுகளை ஆராய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜமன்னார் தலைமையில் 1969-ல் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் குழு அமைத்தார். 71 ஆம் ஆண்டில் அந்தக் குழுவின் பரிந்துரைகளை இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தோம். அதனைப் புரட்டிப் பார்ப்பதில் பெருமிதம் அடைகிறோம். இந்த சட்டமன்றத்தின் நீண்ட நெடிய வரலாற்றை எண்ணிப் பெருமைப்படுகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TNDIPR
"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என சபையில் பேசியவர் கலைஞர். நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பி வைப்பதன் மூலம் இந்தியாவுக்கே ஒளிவிளக்கை ஏற்றி வைக்கிறோம். நாம் ஒன்றாக நின்று இதே அவையில் நிறைவேற்றினோம். அதனை 27 மாதங்கள் கிடப்பில் போட்டு திருப்பியனுப்பப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஏ.கே.ராஜன் குழுவை நியமித்தோம். 13.9.22 அன்று சபையில் சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பினோம்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநில அரசு முடிவெடுத்தால் ஆளுநர் கட்டுப்பட்டே நடக்க வேண்டும். அதாவது, அமைச்சரவையின் அறிவுரையின்படி நடக்க வேண்டும். அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டியது ஆளுநரின் கடமை. இனியாவது அதனைச் செய்வார் என நினைக்கிறேன். அந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்பதால் நானே நேரடியாக ஆளுநரை சந்தித்தேன். அவை முன்னவர் துரைமுருகனும் நேரில் சென்று வலியுறுத்தினார். நமது மாநில எம்.பிக்கள் எல்லாம் குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்றனர். உள்துறை அமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில்தான், 142 நாள்கள் கழித்து நீட் விலக்கு சட்ட முன்வடிவை திருப்பியனுப்பியுள்ளார்.
சட்டமன்றத்துக்கு என உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை கேள்வியெழுப்பும் வகையில் ஆளுநரின் செயல் உள்ளது. இந்த அவையில் மீண்டும் முன்மொழிகிறேன். ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற ஒரே கண்ணோட்டம் தற்போது உருவாகி வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மீண்டும் குடியரசு தலைவருக்கு இந்த மசோதாவை ஆளுநர் அனுப்பி வைப்பார் என நம்புகிறேன். பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக இந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிற செய்திகள்:
- திருச்சியின் முதல் 'மாநகரத் தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு
- டிராக்டர், அறுவடை, நடவு இயந்திரங்களை வாடகைக்கு விடும் இ-வாடகை திட்டத்தில் பயன் பெறுவது எப்படி?
- 'தமிழ்நாட்டு மக்களுக்கு தலை வணங்குகிறேன்' - நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி
- காலநிலை மாற்றம்: 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை
- ஹுண்டாய் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் ஏன் திடீரென்று வைரலாகின்றன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












