பட்ஜெட் 2022: மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்டா இது? - ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலோக் ஜோஷி
- பதவி, மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக
எந்த ஒரு தரப்பும் எதிர்தரப்பைக் குற்றம் சொல்ல முடியாத வகையில் அமைந்துள்ளது இந்த பட்ஜெட். உருவமற்ற பிரும்மத்தைப் போல. யாருக்கு இதை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படிப் பார்த்துக்கொள்ளலாம். எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லை என்பது தான் இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம்.
அதாவது இது ஒரு தலைப்புச் செய்தி இல்லை. கட்சி சார்புள்ளவர்களுக்கும் இது எளிதானது. அவர்கள் விருப்பப்படி பாராட்டிக்கொள்ளலாம். கட்சி சார்பில்லாதவர்களும் பாராட்டவோ விமர்சிக்கவோ செய்யலாம். ஆனால், உற்று நோக்கினால், இந்த பட்ஜெட்டில் அரசின் திசையைக் கோடிட்டுக்காட்டும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில சிறப்பம்சங்கள் இருக்கவே செய்கின்றன.
எதையோ எதிர்பார்த்து இருந்த பெரும்பாலானோருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது உண்மை தான். அவர்களில் பெரும் பகுதியினர் வருமான வரி செலுத்துவோர். மற்றொரு பகுதியினர், அரசின் திட்டங்கள் மூலம் நிதியுதவி, உணவுப் பொருள் அல்லது வேலை பெற்று வருபவர்கள்.
அரசின் வருமானம் இப்போது அதிகரித்துப் பழைய நிலைக்கு வந்துள்ளதால், அதைக் கொண்டு, தங்களுக்கும் பழைய நிலையை அடையும் வகையில் ஏதாவது உதவி இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர் இதை பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறார்கள்.
நேரடி வரி விஷயத்தில், குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருக்காது என்பது பெரும்பாலானோர் அறிந்ததே, அது தான் நடந்தது. சிறு வரி செலுத்துவோரைத் தவிர, பெரும்பாலானவர்களுக்குப் புதிய சுமை எதுவும் இல்லை என்பது நிம்மதியளிக்கும் அம்சமாகும். அரசு பெரிய திட்டங்களுக்கு நிறைய செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான வரைபடத்தையும் வரைந்துள்ளதால் பங்குச்சந்தை மகிழ்ச்சியடைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
நிதியமைச்சர் உரையின் முதல் பகுதியில் பட்டியலிட்ட நான்கு தூண்களில் முதலாவது, அதாவது 'ஆபரேஷன் கதி சக்தி' என்பது ஒரு வறண்ட அறிவிப்பாகத் தோன்றினாலும், அதற்குள் பல விஷயங்கள் மறைந்திருக்கின்றன. பல சிறிய மற்றும் பெரிய தொழில்முனைவோர் இந்தத் திட்டம் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை.
பட்ஜெட்டுக்கு முன், பணவீக்கம் மற்றும் வேலையின்மையைச் சமாளிக்க பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறித்து விவாதம் எழுந்த நிலையில், இதில் ஆறுதல் அளிக்கும் வகையில், குறிப்பாக விலை உயர்வு விவகாரத்தில், எதுவும் இல்லை. நிதியமைச்சர் தனது உரையின் துவக்கத்தில், 60 லட்சம் வேலை வாய்ப்புகள் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் இந்த எண்ணிக்கையை அடைவது என்பது ஒரே இரவில் நடக்கக்கூடிய விஷயமன்று. இது நீண்ட காலத் திட்டமாகும்.
தேர்தல் வரும் சூழலில், தேர்தலுக்காக என்று விமர்சிக்கக்கூடிய அளவில் எந்தப் பெரிய அறிவிப்பும் இல்லை. இது அரசின் துணிச்சலைக் காட்டுகிறது. ஆனால் இந்த நேரத்தில் வளர்ச்சியை விரைவுபடுத்த, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே பணப்புழக்கத்தை அதிகரித்து, அதன் மூலம் செலவு செய்யும் சக்தியளித்துச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட் துணியவில்லை என்பதும் உண்மை.

பட மூலாதாரம், Mayur Kakade/ Getty Images
சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவில், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் நாட்டின் வரைபடத்தையும் அதன் விதியையும் மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
அரசு நீண்டகால அடிப்படையில் சிந்திப்பது சிறப்பான அம்சம். ஆனால் மக்கள் அமிர்தம் குடித்துக்கொண்டிருக்கவில்லை என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும். இன்று அவர்களுக்குச் சோறும் நீரும் தேவைப்பட்டால் அதை இன்றே கொடுக்க வேண்டும். எதிர்கால கனவுகள் அவர்களுக்குப் பயனளிக்காது.
பிற செய்திகள்:
- தேர்தலில் களமிறங்காமல் முதல்வர் பதவிக்கு வரும் உத்தர பிரதேச அரசியல்வாதிகள்
- அயோத்தியில் 251 மீட்டர் ராமர் சிலை: நிலம் வழங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார்
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












