"நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை
படக்குறிப்பு, கே. அண்ணாமலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணமலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வது, கட்சியினரையும் பிரமுகர்களையும் சந்திப்பது, நிர்வாகிகள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கான யோசனைகளைச் சொல்வது என பரபரப்பாக இருந்த கே. அண்ணாமலை, பல்வேறு விவகாரங்கள் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியின் முதல் பகுதி இது. அடுத்த பகுதி நாளை வெளியாகும்.

பேட்டியிலிருந்து:

கே. நீங்கள் மாநிலத் தலைவராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. உங்களுடைய அனுபவம் எப்படி இருக்கிறது. நீங்கள் நினைத்த வேகத்தில் கட்சியை வளர்க்க முடிந்திருக்கிறதா?

ப. இந்த ஆறு மாத காலத்தில் எங்கே இருக்க வேண்டுமென்று நினைத்தோமோ அங்கே இருக்கிறோம். எங்களுக்கென என்ன இலக்குகளை வைத்திருந்தோமோ அந்த இலக்குகளை அடைந்திருக்கிறோம். வேகமாக கட்சியை வளர்ப்பதைவிட, அடிப்படையை வலுவாக்க வேண்டுமென நினைக்கிறோம். சற்று மெதுவாகச் சென்றாலும்கூட நல்ல தலைமைப் பண்பு கொண்டவர்களை மாவட்ட மட்டத்திலும் மாநில மட்டத்திலும் உருவாக்க நினைக்கிறோம். ஆனால், விவாதங்களை உருவாக்குவதிலும் சித்தாந்த ரீதியிலும் கட்சி எங்கே இருக்க வேண்டுமென நினைத்தோமோ அங்கே இருக்கிறோம்.

கே. கடந்த காலத்தில் கட்சி நடத்தப்பட்ட விதத்திற்கும் இப்போதும் என்ன வித்தியாசம்? என்ன மாறுதலை நீங்கள் கட்சிக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?

ப. கட்சியில் முடிவுகளை ஒன்றாகச் சேர்ந்துதான் எடுக்கிறோம். மாநிலத்தில் முக்கியத் தலைவர்களாக பலர் இருக்கிறார்கள். ஆளுநர்களாக சிலர் வெளியில் இருக்கிறார்கள். அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆகவே, எல்லோருடைய கருத்துக்களையும் பெற்று கட்சியை முன்னெடுத்துச் செல்வதைத்தான் என்னுடைய முக்கியமான தலைமைப் பண்பாகப் பார்க்கிறேன்.

அடுத்ததாக, இளைஞர்களை முன்னிறுத்த வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு. எல்லா மட்டங்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அதை இப்போதுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். எல்லோருமே இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும் இதைக் கொஞ்சம் பெரிய அளவில் செய்ய வேண்டுமென்று நினைத்துச் செய்துகொண்டிருக்கிறேன்.

மூன்றாவதாக, சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பேச வேண்டும் ஆனால், நாகரீகமாகப் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறோம்.

கே. மதம் சார்ந்த பிரச்சனைகளையே பாரதிய ஜனதா கட்சி அதிகம் கையில் எடுப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறது. நீங்கள் அதை மாற்ற நினைக்கிறீர்களா?

ப. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் அதிகம் பேச வேண்டும் என நினைக்கிறேன். மதம் முக்கியம்தான். எல்லா மத பிரச்னைகளும் முக்கியம்தான். ஆனால், மக்களுக்கான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. தண்ணீர், விவசாயம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும்.

பாரதிய ஜனதா என்றால் இந்துக் கட்சி என்கிறார்கள். உண்மையில் அப்படிப்பட்ட கட்சி அல்ல அது. இந்துக்கள் நிறைய இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். வெளியிலிருந்து ஒருவர் எங்களை இந்துக் கட்சி என்று முத்திரை குத்தக்கூடாது. அதுபோல எங்கள் வெளிப்பாடு இருக்கக்கூடாது என நினைக்கிறேன்.

கே. பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய அளவில் தன்னை இந்துக்களுக்கான கட்சியாக முன்னிறுத்திக்கொள்ளும்போது நீங்கள் இங்கே அதற்கு வேறுவிதமான அடையாளத்தைக் கொடுத்துவிட முடியுமென நினைக்கிறீர்களா?

ப. அகில இந்திய அளவில் நாங்கள் அப்படி எங்களை முன்னிறுத்தவில்லை.

கே. உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் அப்படித்தானே இருக்கிறது...

ப. இல்லை. மத்திய அமைச்சரவையில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை முக்கியமான மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுக்கிறோம். அதேபோல ஹஜ் போன்ற விஷயங்களையும் கையில் எடுக்கிறோம். பிரதமரைப் பொறுத்தவரை உத்தராகண்ட், வாரணாசி போன்ற இடங்களில் சில விஷயங்களைச் செய்ய நினைக்கிறார். இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டு காலத்தில் செய்யாமல் விட்டவற்றைச் செய்ய வேண்டுமென நினைக்கிறார். அவ்வளவுதான். அதைச் செய்தோம் என்பதற்காக இந்துக்கள் சார்ந்த கட்சியாக எங்களைப் பார்க்கக்கூடாது. கட்சியும் அப்படிக் கிடையாது.

அண்ணாமலை

பட மூலாதாரம், ANNAMALAI

கே. கடந்த ஏழு மாத கால தி.மு.க. அரசை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ப. முதலமைச்சரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள் செயல்படவில்லை என்பது என் முதல் குற்றச்சாட்டு. அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இல்லையெனத் தோன்றுகிறது. தமிழ்நாட்டிற்கென ஒரு விஷனை அவர்களிடம் நான் பார்க்கவில்லை. எந்தத் தொழில்துறையை நோக்கி நாம் செல்லப்போகிறோம் என்பதில் தெளிவில்லை. தினப் பிரச்சனைகளிலேயே போராடிக்கொண்டிருப்பதாகத்தான் பார்க்கிறேன். தவிர, ஊழலும் ஆங்காங்கே தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

முதலமைச்சர் சில விஷயங்களைச் சொன்னாலும் அவருடைய அமைச்சரவையில் இருப்பவர்கள், அதைப் பேசாமல் வேறு எது எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் மோடி எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கே. தி.மு.கவைப் பொறுத்தவரை தேர்லுக்கு முன்பாகவே பத்தாண்டுகளுக்கான லட்சியப் பாதையை வெளியிட்டிருக்கிறார்களே...

ப. ஆவணத்தில் சொல்வது வேறு; செயல்படுத்துவது வேறு. ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களாகவிட்ட நிலையில், அரசு எந்தத் திசையில் செல்கிறது என்பதில் நமக்கு ஒரு பார்வை கிடைத்துவிடுகிறதல்லவா..? நம்முடைய நிதி நிலை மோசமடைந்திருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் ஒரு ஆவணத்தை வெளியிடுகிறார். ஆனால், அதைச் சரிசெய்ய என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்து ஏதுமில்லை. தவிர, அரசே டாஸ்மாக்கிலிருந்து வரும் வருவாயைத்தான் நம்பியிருக்கிறது. இந்த ஆண்டு 33 ஆயிரம் கோடி, அடுத்த ஆண்டு 37 ஆயிரம் கோடி என போய்க்கொண்டிருக்கிறது.

சீனாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேற ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நிறுவனங்களை ஈர்க்க என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. சென்னையைப் பொறுத்தவரை பெங்களூருக்கு எந்த விதத்திலும் குறைந்த நகரமல்ல. ஆனால், பெங்களூரில் 70 சதவீத நிறுவனங்கள் சேவைத் துறை சார்ந்தவையாக இருக்கின்றன. ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பல நிறுவனங்கள் அங்கே இருக்கின்றன. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திழக வேண்டுமென்றால் இப்போதே பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

கே. கடந்த ஏழு மாத கால தி.மு.க. ஆட்சி குறித்து மக்கள் என்ன கருதுவதாக நினைக்கிறீர்கள்?

ப. இந்தக் கேள்விக்கு நேர்மையாகப் பதில் சொல்வதாக இருந்தால், தமிழ்நாடு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். ஏழு மாத காலம் என்பது மிக சிறிய காலம்தான். அவர்களைப் பொறுத்தவரை, ஓட்டுப்போடும்போது என்ன மனநிலையில் இருந்தார்களோ, அதே மனநிலையில்தான் இப்போதும் இருப்பதாகக் கருதுகிறேன்.

சென்னை மழை, சில ஊழல் குற்றச்சாட்டுகள் அரசுக்கு சில கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், ஏழு மாதம் என்பது மிகவும் குறைவான காலகட்டம்.

கே. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணி தொடருமா?

ப. நம்மைப் பொறுத்தவரை கூட்டணியைப் பொறுத்தவரை, தேசிய கட்சி என்பதால் ஒரு நடைமுறை இருக்கிறது. இதற்கென உள்ள குழுதான் முடிவெடுக்கும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. எந்தக் குழப்பமும் இல்லாமல் நாம் பயணம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு மாநிலத் தலைவராக கூட்டணியில் நான் எந்த மாற்றத்தையும் காணவில்லை.

இரண்டாவதாக, அ.தி.மு.கவைப் பொறுத்தவரை கடினமான நேரங்களில் எங்களோடு இருந்தார்கள். முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும்போது உடன் இருந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுடன் இருப்பதை ஒரு கடமையாக பா.ஜ.கவும் கருதுகிறது.

கே. சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பா.ம.க. தங்கள் கூட்டணியில் இல்லையென தெரிவித்தார். அப்படியானால், பா.ம.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறதா, இல்லையா?

ப. பாட்டாளி மக்கள் கட்சியின் அறிவிப்பு மிகத் தெளிவாக இருந்தது. தங்கள் கட்சி வளர்ச்சிக்காக இந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறுவதாக சொல்லியிருக்கிறார்கள். பா.ஜ.கவைப் பொறுத்தவரை நாங்கள் அந்தக் கட்சியின் தலைவர்களுடன் நல்லுறவில்தான் இருக்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை கட்சி வளர்ச்சிக்காக இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனியாக நிற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் அ.தி.மு.கவுக்கும் பா.ம.கவுக்கும் இடையில் வந்த கருத்து மோதலை பெரிய விஷயமாக நான் பார்க்கவில்லை. பா.ம.கவும் ஒரு நீண்ட கால நோக்கில் இந்த விஷயத்தைப் பார்ப்பார்கள் எனக் கருதுகிறேன்.

கே. அ.தி.மு.கவைப் பற்றிச் சொல்லும்போது எங்களுடைய கடினமான காலகட்டத்தில் உடனிருந்தார்கள் என்று சொன்னீர்கள். ஆகவே, அந்தக் கட்சி தற்போது எதிர்கொண்டுவரும் சசிகலா பிரச்னையில் உங்கள் கருத்து என்ன? அவரைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்களா?

ப. அ.தி.மு.க. ஒரு பலமான கட்சியாக இருக்க வேண்டுமென நினைப்பதுதான் பா.ஜ.கவின் நோக்கம். அதே சமயத்தில் கட்சிக்கு வெளியிலிருந்துகொண்டு, தனி நபர்களைப் பற்றிப் பேச வேண்டாம் என நினைக்கிறோம். கட்சிக்கென செயற்குழு, பொதுக் குழு இருக்கிறது. அதனால் தேர்வுசெய்யப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என்று மட்டும் நாங்கள் கருதுகிறோம். யார் வர வேண்டும், போக வேண்டும் என்பதையெல்லாம் அந்தக் கட்சியின் தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

அண்ணாமலை

பட மூலாதாரம், ANNAMALAI

கே. மாநிலத்தில் அ.தி.மு.கவின் இடத்தை பா.ஜ.க. அபகரிக்க நினைக்கிறது என்ற பார்வை இருக்கிறது. அது சரியா?

ப. அது சரியான பார்வையல்ல. தி.மு.கவைப் பொறுத்தவரை 33 சதவீத வாக்குகளை வாங்கி ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது. ஆகவே 67 சதவீதம் பேர் தி.மு.கவை விரும்பவில்லை. ஆகவே நிறைய இடம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இன்னொரு கட்சியை உடைத்து வளர வேண்டும் என்ற பார்வையே பா.ஜ.கவுக்குக் கிடையாது. எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.கவை ஏற்கச் செய்யவேண்டும் என நினைக்கிறோம்.

பலர் பா.ஜ.கவைப் பிடிக்கும் ஆனால், குறிப்பிட்ட சில காரணத்திற்காக வாக்களிக்க மாட்டோம் என நினைப்பார்கள். அது தப்பான கருத்து என புரியவைத்து அதனை உடைக்க நினைக்கிறோம். ஆகவே, எங்களுக்கே நிறைய ஓட்டு வெளியில் இருக்கும்போது, மற்றொரு கட்சியின் வாக்குகளை உடைத்து வளர நாங்கள் நினைக்கவில்லை.

கே. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. இந்த ஆட்சியை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ப. 1917ல் இருந்தே நான் மதிப்பீடு செய்ய விரும்புகிறேன். அப்போதே பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கம் வந்துவிட்டது. நீதிக் கட்சி ஜஸ்டிஸ் என்ற பெயரில் பத்திரிகையைத் துவங்கிவிட்டது. 49ல் தி.மு.கவைத் துவங்குகிறார்கள். ஆட்சிக்கு வருகிறார்கள். 1972ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. முழுமையாகப் பார்க்கும்போது, எப்போதுமே முன்னோக்கிச் செல்லக்கூடிய, வளர்ந்த மாநிலமாகத்தான் எப்போதுமே இருந்திருக்கிறது. 1967க்கு முன்பும் அப்படித்தான்.

ஆனால், விவசாயம், தொழிற்சாலை என எல்லாவற்றிலும் மேம்பட்டிருந்தது. காமராஜர், ஓமந்தூரார் ஆட்சியில் பெரிய அளவில் தமிழ்நாட்டிற்கு பலன் கிடைத்தது. காமராஜர் 30,000 பள்ளிகளைத் துவங்கினார்.

1967க்குப் பிறகு சமூக நீதியின் பக்கம் கவனம் திரும்பியது. அதை மறுக்க முடியாது. அதுவும் ஒரு நல்ல வளர்ச்சிக்கான சித்தாந்தம்தான். 1972க்குப் பிறகு எம்.ஜி.ஆர். இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். ஒரு ஆரோக்கியமான போட்டி அரசியல் நிலவியது.

ஆனால், நான் முன்வைக்கும் விமர்சனம் என்னவென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதுதான். இப்போது மிகுந்த ஊழல் நிலவும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழ்நாட்டையும் கர்நாடகத்தையும் ஒப்பிடலாம். நான் அங்கே பணியில் சேரும்போது நமக்கும் கர்நாடகத்திற்கும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு நான்கு லட்சம் கோடி ரூபாய் வித்தியாசம் இருந்தது. இப்போது அந்த வித்தியாசம் 2 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.

தமிழ்நாடு முன்னிலையில்தான் இருக்கிறது. ஆனால், அதன் வேகம் குறைந்துவிட்டது. உடனே, நான் திராவிட அரசியலுக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்கிறார்கள். நான் திராவிட அரசியலுக்கு எதிராகவே பேசவில்லை.

கே. ஆக, திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த வளர்ச்சியை ஏற்கிறீர்கள்தானே...

ப. கரெக்ட். 1967க்கு முன்பிருந்த வளர்ச்சியையும் பார்க்கிறேன், அதற்குப் பின்வந்த வளர்ச்சியையும் பாராட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளின் நாம் பின்தங்க ஆரம்பித்துவிட்டோம் என்பதுதான் என்னுடைய பார்வை. உடனே நான் திராவிடத்திற்கு எதிரான அரசியலைப் பேசுவதாகச் சொல்கிறார்கள். நான் திராவிட அரசியலுக்கு எதிராகவே பேசவில்லை. நான் அடுத்த கட்ட தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகிறேன்.

அடுத்ததாக தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிடுகிறார்கள். அது ஒரு ஒப்பீடே அல்ல. தமிழ்நாட்டையும் எந்த மாநிலத்தையும் ஒப்பிடாதீர்கள். நாம் வேறு எங்கோ இருக்கிறோம். பெரிய நிறுவனங்களை இங்கே அழைத்துவர வேண்டும். பெரிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.

அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச முதல்வர்

கே. உத்தர பிரதேசத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடக்கூடாது என்கிறீர்களா?

ப. கூடவே கூடாது. நாம் வேறு எங்கோ இருக்கிறோம்.

கே. நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும்போது, உங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தை முன்னேற்றியிருக்கலாமே எந்தக் கேள்வியிலிருந்துதான் இது வருகிறது..

ப. அப்படி நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் உ.பி. பா.ஜ.க. இரண்டு முறை ஆட்சி செய்திருக்கிறது. முதல் முறை கல்யாண் சிங். இரண்டாவதாக 2017ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் ஒப்பிட முடியுமென்றால் இந்த ஆட்சியை மட்டும்தான் ஒப்பிட முடியும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் எதற்காக உ.பி.யைப் பற்றிப் பேச வேண்டும். நாம் இங்கே வேலை பார்ப்பது தமிழ்நாடு இங்கே இருக்க வேண்டும் என்பதற்காக. உ.பி. எங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது.

உத்தர பிரதேசத்தை ஒப்பிட்டுத்தான் பேச வேண்டுமென்றால், அதை எப்படிச் செய்ய முடியும்? முலாயம், மாயாவதி என பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், இங்கே தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகள் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால், திரும்பவும் கேட்கிறேன். நாம் ஏன் உ.பியைப் பற்றிப் பேச வேண்டும். நாம் எல்லாம் மாநிலங்களையும்விட மேலே இருக்கிறோம். போட்டி என்று வந்தால் நாம் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுடன்தான் போட்டியிட வேண்டும்.

கே. தமிழ்நாட்டில் நீங்கள் முக்கியமான விஷயமாக சமூக நீதியைக் குறிப்பிட்டீர்கள். பா.ஜ.க. ஆட்சியை நெருங்கும்பட்சத்தில் அதன் சமூக நீதி பார்வை என்னவாக இருக்கும்? இப்போது திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் சமூக நீதியை நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்வீர்களா?

ப. நான் ஒரு படி முன்னே போய் சொல்கிறேன். Dravidian Plus என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு அல்ல. அதைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அதை மறுக்க முடியாது.

ஆனால், நான் மிக முக்கியமானதாக நினைப்பது அரசியல் பிரதிநிதித்துவம். யாரோ ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால் அது பிரதிநிதித்துவம் ஆகாது. நான் சொல்வது, கட்சித் தலைவராக, முதலமைச்சராக ஆக்க வேண்டும். இதை பா.ஜ.கவால் மட்டும்தான் செய்ய முடியும். நாளை தமிழ்நாட்டில் ஒரு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர் முதல்வராக வருகிறார் என்றால் அதை பா.ஜ.கவால் மட்டும்தான் செய்ய முடியும். பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். குடும்பப் பின்னணி தேவையில்லை.

கே. அவர்கள் மக்களால் தேர்வுசெய்யப்பட்டுத்தானே வருகிறார்கள்?

ப. அப்படியில்லை. உதாரணமாக, உதயநிதி ஸ்டாலினை எடுத்துக்கொள்வோம். அவர் எங்கே போட்டியிடுகிறார்? 20 ஆண்டுகளாக தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியில்தான் அவர் போட்டியிடுகிறார். தவிர, இளைஞரணி தலைவர் என அரசியல் அதிகாரம் வேறு தரப்படுகிறது. அப்படி பதவி கொடுத்த பிறகு கட்சியே உங்கள் பின்னால் வரும். உதயநிதி ஸ்டாலின்போல ஆயிரம் பேர் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த வாய்ப்புக் கிடைப்பதில்லையே? ஆனால், பா.ஜ.கவால் கொடுக்க முடியும் என்பதுதான் என் வாதம். ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் குடும்ப அரசியல் செய்து மேலே வந்தவர் என்று சொல்ல மாட்டேன். அவர் கடின உழைப்பின் மூலம் மேலே வந்தவர்.

ஆனால், அவர்கள் கட்சியில் பலர் அப்படி இருக்கிறார்கள். திருச்சியில் முதலில் தாத்தா, பிறகு மகன், பிறகு பேரன் என்று நிற்கிறார்கள்.

கே. எல்லா ட்சியிலும்தானே அப்படி இருக்கிறது...பா.ஜ.கவிலும் அப்படி ஒரு அரசியல் இருக்கிறதுதானே...

ப. எங்கள் கட்சியில் ஒருவர் இரண்டு பேரை அப்படிச் சொல்லலாம். ஆனால், ஒரு கட்சியில் 12 - 15 இடத்தில் குறுநில மன்னர்களைப் போல ஆட்சி செய்கிறார்கள். இதனால், வேறு சில பிரிவினர் மேலே வரமுடியாமலே போகிறது. எங்களால் இதை மாற்ற முடியும் என்கிறோம். இதைத்தான் நான் Dravidian Plus என்கிறேன்.

(தொடரும்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: