காதல் மற்றும் திருமணம் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்? - தரவுகள் கூறும் உண்மை என்ன

Love and Marriage in India

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு வரை, வெறும் 3% இந்தியர்கள் மட்டுமே காதல் திருமணம் செய்தனர்.

காதல் மற்றும் திருமணம் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்? பத்திரிக்கையாளர் ருக்மணி.எஸ் தரவுகள் மூலம் இதுகுறித்து விளக்குகிறார். இந்தியால் திருமணம் மற்றும் ஆண்-பெண் இணைந்து இருப்பது பற்றிய சமூக-அரசியல் ரீதியான உண்மைகளை இதன்மூலம் விளக்குகிறார்.

22 வயதான நிதின் காம்ப்ளே தனது குடும்பம் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு, தான் வேலை செய்யும் மும்பையிலிருந்து மாதம் இருமுறை இரவு நேர பேருந்தில் பயணிக்கிறார். அவர் இரண்டு பைகளை எடுத்துக்கொள்வதாக கற்பனை செய்து கொள்கிறார்: ஒன்று பயணத்திற்கு செல்ல, மற்றொன்று அவரால் எடுத்துச் செல்ல முடியாத அனைத்தும் நிரப்பப்பட்டு, அவரது ஓர் அறை கொண்ட குடியிருப்பில் படுக்கைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளது.

அவர் இப்போது இறைச்சி சாப்பிடுகிறார், எப்போதாவது ஒரு பீர் குடிக்கிறார் என்ற உண்மையுடன், மும்பையில் விட்டுச் செல்வதாக அவர் கற்பனை செய்யும் பையில் அவரது ஆழ்ந்த ரகசியம் உள்ளது. அது அவரது காதலி வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதே. அவரது பெற்றோரும் அவரின் காதலியின் பெற்றோரும் இதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று அவருக்கும் தெரியும்.

அவரது கதை பரிச்சயமாக இருந்தாலும், நீங்கள் தரவுகளைப் பார்த்தால், நிதின் அதிலிருந்து தனித்தே தெரிகிறார்.

இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வாறு சம்பாதிக்கிறார்கள், அதை எப்படி செலவிடுகிறார்கள், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், அவர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், எது அவர்களை துன்புறுத்துகிறது - இந்தியாவைப் பற்றிய இப்படியான சில மிகப்பெரிய கேள்விகளுக்கு தரவு பதிலளிக்கிறது. ஆனால், எண்கள் மனிதர்களின் வாழ்க்கையின் நுணுக்கங்களையும் காட்டலாம். அவர்கள் வாழும்போது என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் கூறலாம். உதாராணமாக, அவர்கள் காதலைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதையும் கூறலாம்.

இந்தியாவில் காதல் மற்றும் அதற்கு அடுத்தடுத்த விஷயங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க பார்வையை, கிடைத்த ஏராளமான தரவுகள் மூலம் என்னால் ஒன்று இணைக்க முடிந்தது.

இந்தியத் திரைப்படங்களைப் பார்க்கும் போது, காதலை விட, இளம் இந்தியர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது போல் தோன்றும். அது உண்மையாக இருக்கலாம் என்ற போதும், பெரும்பான்மையான இந்தியர்கள் இன்னும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையே செய்துக்கொள்கின்றனர்.

2018ஆம் ஆண்டு, 160,000 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், தங்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என 93% திருமணமான இந்தியர்கள் கூறியுள்ளனர். வெறும் மூன்று சதவீதத்தினர் மட்டுமே "காதல் திருமணம்" செய்து கொண்டதாகவும், மற்றொரு இரண்டு சதவீதத்தினர் "காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்" என்று கூறினர். இது பொதுவாக குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட பின், இருவரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதையே குறிக்கிறது.

காலப்போக்கில் மிகச் சிறிய மாற்றம் மட்டுமே நிகழ்த்துள்ளது - இன்று 80 வயதில் உள்ளவர்களில் 94 சதவீதம் பேர் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துக்கொண்டனர். இந்த எண்ணிக்கை 20 வயதிற்குட்பட்ட இளம் ஜோடிகளில் 90 சதவீதமாக உள்ளது.

மனிஷா மோண்டல் காதல் திருமணம் செய்து கொள்வதாக நினைத்தார். "எனக்கு என் பெற்றோரிடம் சண்டை போடுவது வழக்கம். வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ள கல்லூரியில் சேர போராடினேன். சரி, அடுத்ததாக காதல் திருமணத்திற்குதான் சண்டைப்போடுவேன் என்று நினைத்தேன்," என கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய நகரமான பிலாய்யில் அலுவலக உதவியாளராக உள்ள மனிஷா என்னிடம் சொன்னது.

திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமணம்

ஆனால், கல்லூரியின் முதல் சில நாட்களில், ஒரு சில இளைஞர்கள் அவரை அணுகினர் - மற்றும் அங்கிருந்த பழைய பெண் மாணவர்கள் பேசுவதற்காக அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்றனர். இளைஞர்களிடம் பேசினால், அவருடைய நற்பெயர் கெட்டுவிடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

அவரைக் கண்காணிக்க, அவர் இளைஞர்களுடன் பேசவில்லை என்பதை உறுதிப்படுத்த அவருடைய மூத்த சகோதரர் ஒரு நாளைக்கு சில முறை அவருடைய கல்லூரியைக் கடந்து செல்வார். மனிஷாவுக்கு கல்லூரி முக்கியம்; அவர் காதலை தற்செயலாக பெறுவதை விட, படிப்பதையும் அதன் பிறகு பணி செய்யவும் விரும்பினார்.

அவர் கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும்போது, அதே சமூகத்தைச் சேர்ந்த தந்தையின் நண்பரின் மகனுடன் அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. "நான் என் பெற்றோரைப் பார்க்கிறேன். அவர்கள் ஒருபோதும் சண்டையிட்டதில்லை. எனவே, எனக்கும் அப்படியே இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என 24 வயதான மனிஷா.

இந்தியாவில் தங்கள் சாதிக்குள் திருமணம் செய்வது திருமணத்தின் இன்றியமையாத அம்சமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு 70,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 10% க்கும் குறைவான நகர்ப்புற இந்தியர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர், தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அதிகம் தங்கள் துணை சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர்.

கலப்பு திருமணம் இன்னும் அரிதானது - நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுள் பதிலளித்தவர்களில் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே தங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் தங்கள் மதத்துக்கு வெளியே திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர்.

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால், கூறப்பட்டதற்கும், எதார்த்தத்தில் மக்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.

Love and Marriage in India

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்கள் மிகக் குறைவே.

2015 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் 1,000 வருங்கால மணப்பெண்களை திருமணத்துக்குரிய இணையதளங்கள் (matrimonial websites) மூலம் தொடர்பு கொண்டு, அவர்களில் பாதி பேர் தங்களுடைய சாதியினரைத் தவிர வேறு சாதியைச் சேர்ந்த துணை மீது விருப்பம் தெரிவித்தனர். கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் சொந்த சாதியின் ஆண்கள் மீதே விருப்பம் தெரிவித்தனர்.

கல்வித் தகுதி, சம்பளம், தோலின் நிறம் போன்ற அனைத்து மாறுபாடுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், தலித் மணமகனைத் தொடர்புகொள்வது மிகக் குறைவே.

இந்த பழமைவாத பின்னணிக்கு எதிராக, தனிப்பட்ட விருப்பத்தின் எந்தவொரு செயலும் பின்னர் கிளர்ச்சியாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் மாறும்.

2014 ஆம் ஆண்டில், டெல்லியின் ஏழு மாவட்ட நீதிமன்றங்களில் 2013 ஆம் ஆண்டில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் உட்பட வழங்கப்பட்ட ஒவ்வொரு தீர்ப்பையும் நான் ஆய்வு செய்தேன் - கிட்டத்தட்ட மொத்தம் 600 இருந்தன. நீதிமன்றங்களில் முழுமையாக வாதிடப்பட்ட 460 வழக்குகளில், மிகப்பெரிய வகை (40%) சம்மதம் பெற்ற தம்பதிகள் சம்பந்தப்பட்ட அல்லது சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளைப் பற்றியது.

இவர்களில் பெரும்பாலோர் ஓடிப்போனதாகத் தோன்றிய தம்பதிகளை உள்ளடக்கியவர்கள். அதன்பிறகு, வழக்கமாக அந்தப் பெண்ணின் பெற்றோர்கள், கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்களில் பலர் சாதிகளுக்கிடையேயான அல்லது மதங்களுக்கு இடையிலான திருமணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The bogey of 'love jihad' haunts interfaith relationships in India

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் கலப்பு திருமணத்தை 'லவ்-ஜிஹாத்' என்ற விஷயம் அச்சுறுத்துகிறது.

நிலைமை மோசமாகலாம். கடந்த தசாப்தத்தில், இந்தியாவில் தீவிர இந்து குழுக்கள் "லவ்-ஜிஹாத்" (Love-Jihad) என்ற விஷயம் தூக்கிப்பிடித்துள்ளனர், இந்த சொல்லாடல், இந்து பெண்களை முஸ்லீம் ஆண்கள் திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவை ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) ஆளும் பல மாநிலங்கள், திருமண நோக்கத்திற்காக பெண்களை மதமாற்றம் செய்ய `வற்புறுத்தும்` ஆண்களுக்கு இப்போது கடுமையான தண்டனைகளை கொண்டு வந்துள்ளன. இந்தியாவில் காதலுக்கு காவலாக சட்டப்பூர்வ தன்மையை அளித்து, கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர்கள் சம்மதம் தெரிவிப்பதில் கட்டுப்பாடுகளைச் சேர்த்துள்ளனர்.

காதலர்களுக்கு எதிரான இந்தப் போர் இந்தியாவில் உள்ள சாதி மறுப்பு திருமணத்தை மேலும் பாதாளத்திற்குத் தள்ளும் வாய்ப்புள்ளதோடு மட்டுமல்லாமல், காதல் மற்றும் திருமணம் பற்றிய தரவுகள் வருவதற்கு கடினமாகவும் நம்பகத்தன்மை குறைவாகவும் இருக்க செய்கிறது.

ஒரு பெண்ணின் குடும்பத்தில் இருந்து தாங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளைப் பற்றி ஒரு மதம் மாறாத தம்பதிகள் என்னிடம் கூறினார், மேலும் உள்ளூர் அரசாங்க அலுவலகத்தில் தங்கள் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்ற பயத்தில் திருமண உரிமத்தைப் பெற வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

இரண்டு வாழ்வுக்கு இடையே இருக்கும் இளைஞர் நிதின், அதைச் சுருக்கமாகச் சொன்னார்: "உங்கள் தரவு சாதி மறுப்பு திருமணம் மிகக் குறைவு என்பதே காட்டுகிறது. ஆனால், அது காதலைப் பற்றி உங்களுக்குக் காட்டவில்லை." இந்தியாவின் பல இளைஞர்கள் வீரத்துடன் போராடுக்கிறார்கள், ஆனால் இறுதியில் போர்களத்தில் தோற்கவே செய்கின்றனர். (சிலரின் பெயர்கள் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டுள்ள).

ஹோல் நம்பர்ஸ் அண்ட் ஹாஃப் ட்ருத்: வாட் டேடா கேன் அண்ட் கெனாட் டெல் அஸ் அபவுட் மாடர்ன் இந்தியா (அமேசான் வெஸ்ட்லேண்ட் பிரசுரித்துள்ள புதிய புத்தகத்தின் ஆசிரியர் ருக்மணி.எஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: