நீட் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் விவசாயி மகன் சிவக்குமார் தற்கொலை

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் - கோப்புப் படம்

(இன்று 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ் (19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். அவருக்கு மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத தேர்வு நுழைவுச் சீட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை தனது நண்பர்களிடம் நீட் தேர்வில் மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது மருத்துவர் கனவு கலைந்து போகும் என்று கூறி வந்துள்ளார். சனிக்கிழமை நள்ளிரவு வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை) இளங்கலை மருத்துவத்துக்கு நீட் தேர்வு நடைபெறும் நிலையில், அந்த தேர்வில் பங்கேற்க இருந்த விவசாயி மகன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காப்பீட்டு திட்டத்தில் மனநல சிகிச்சையை சேர்க்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்

காப்பீட்டு திட்டத்தில் மனநல சிகிச்சையை சேர்ப்பதுடன், அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த ராஜா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில், மன அழுத்தத்திற்கு ஆளாகும் கைதிகளுக்கு மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி, மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக்கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வுபெற்று விட்டார்), புகழேந்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். தற்போது நீதிபதிகள் இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

"நம் நாட்டில் உள்ளவர்களில் 7.5 சதவீதம் பேர் மன ரீதியான பாதிப்புகளை சந்திக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டில், போதுமான மனநல மருத்துவமனைகள் கிடையாது. மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை நல ஆலோசகர்கள் பற்றாக்குறையில் உள்ளனர்.

நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். முதுகலை மருத்துவப்படிப்பை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் டாக்டர்களை உருவாக்க முடியும். வெளிநோயாளியாகவே பலரும் சிகிச்சை பெறும் நிலையில் ஒவ்வொரு வட்ட மருத்துவமனையிலும் மன நல சிகிச்சை அளிக்க வேண்டும்.

மனநல சுகாதார சட்டத்தின்படி, மனநல சிகிச்சையை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். சாதாரண மக்களும் காப்பீடு மூலம் மனநல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில் மனநல சிகிச்சை முறை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிறது.

இதை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, மனநலம் மற்றும் மன அழுத்தத்தால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நம் நாட்டில் அவ்வப்போது ஆய்வு செய்து, இதற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து மத்திய-மாநில அரசுகள் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை பெற்றவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, மருத்துவ பரிசோதனைகளை நடத்த வேண்டும்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடும் இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ரயில்வே

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு, சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக இந்து தமிழ் திசை பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

ரயில் பெட்டிகளை விருப்பமுள்ள சுற்றுலா நடத்துனர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், கலாச்சாரம், மதம் மற்றும் இதர சுற்றுலா துறையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள, இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்துக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. வெற்று ரயில் பெட்டிகளையும் குத்தகைக்கு எடுக்க முடியும். ரயில் பெட்டிகளை விலைக்கு வாங்கவும் முடியும்.

குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவிலான மாற்றங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு, ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க முடியும், ரயில் பெட்டிகளின் ஆயுள் வரை குத்தகையை நீட்டிக்க முடியும்.

ஆர்வம் உள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில் எளிமையான பதிவு முறை. குத்தகை கட்டணம் உட்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும்.

ரயில் பெட்டிகள் சீரமைப்பு மற்றும் பயண திட்டங்களுக்கு சரியான நேரத்தில் ஒப்புதல், ரயிலுக்குள் விளம்பரத்துக்கு அனுமதி, ரயில் பெட்டிகளுக்கு பிராண்ட் பெயர் வைக்கவும் அனுமதியளிக்கப்படுமாம்.

இந்த சுற்றுலா ரயில் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிர்வாக இயக்குனர் அளவிலான குழுவை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :