கூலித் தொழில் செய்துகொண்டே மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் 75 வயது காந்தியவாதி கூத்தன்

பிரசாரத்தில் கூத்தன்
படக்குறிப்பு, பிரசாரத்தில் கூத்தன்
    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பி பி சி தமிழுக்காக

5௦ ஆண்டுகளுக்கு மேலாக கிராமம் கிராமமாக சென்று மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் காந்தியவாதி எஸ்.கே.கூத்தன்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் குட்டிமணிபள்ளியைச் சேர்ந்தவர் கூத்தன். வயது 75. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் கண்ட கூத்தனுக்கு மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே தோன்றியது. காந்திய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், தனது 20 வயதில் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார்.

வெண்ணிற உடையில் தலையில் காங்கிரஸ் குல்லாவும் சட்டைப்பையில் மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டையும் அணிந்தபடி அதிகாலையிலேயே வீட்டை விட்டு சைக்கிளில் கிளம்பி விடுகிறார் இவர்.

இப்படியே 50 ஆண்டுகளுக்கு மேலாக சைக்கிளில் ஊர் ஊராக சென்று 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கூத்தன்.

கூத்தன்
படக்குறிப்பு, கூத்தன்

மேலும் தன்னை நாடி வரும் கைம்பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பது, இலவச வீட்டு மனை பட்டா பெற்றுக் கொடுப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகிறார்.

இவர் தமது பிழைப்புக்கு விவசாயக் கூலி வேலை செய்கிறார். தனது சொந்த வருவாயைக் கொண்டு ஆண்டுதோறும் மது ஒழிப்பு பிரசாரத்துக்கு என்று ஆயிரக் கணக்கான ருபாய் செலவு செய்து துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு பொதுமக்களிடம் விநியோகிக்கிறார்.

பிபிசி தமிழுக்காக அவரை சந்தித்தோம்.

"காந்தியின் கொள்கையை நிறைவேற்ற, 50க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு சென்று பொதுமக்கள், கடைகளுக்கு,இளைஞர்களுக்கு மதுவிலக்கு தொடர்பாக நோட்டீஸ் கொடுத்து. மது அருந்துவது உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும், கல்வி பாதிக்கும் என்று கூறி வருகிறேன். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் திருந்தி நல்லபடியாக உள்ளனர்.

நான் கூலித் தொழிலாளிதான். இருந்தாலும் காந்தி பெயரில் இந்த பிரசாரம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. வன்முறைக்கு காரணம் மதுதான். மது அருந்தினால் மனிதன் எந்தவகையிலும் நிலையாக இருக்க முடியாது. அகிம்சை வழிதான் நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் நல்லது. அனைத்து தீய பழக்கங்களுக்கும் காரணம் மதுதான்" என்கிறார் அவர்.

"இந்தப் பிரசாரத்துக்காக யாரிடமும் எதுவும் வாங்கியதில்லை. கூலி வேலைக்கு சென்றுதான் நான் செலவு செய்கிறேன். நல்லது செய்வதற்கு வசதி தேவையில்லை. அது ஒருவகையான மகிழ்ச்சி," என்றார் கூத்தன்.

சுந்தரம்
படக்குறிப்பு, சுந்தரம்

கூத்தன் நடத்திய விழிப்புணர்வு பிரசாரத்தால் மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட்ட சுந்தரம் நம்மிடம் கூறும்போது "கூத்தன் என்பவர் காந்தியவாதி. அவரும் நானும் கூலித் தொழிலாளிகள்தான். கூத்தன் வீடு வீடாக சென்று யாரும் மது அருந்தாதீர்கள் என்று அறிவுரை கூறுவார்.

அவரால் ஏராளமான குடும்பத்தினர் திருந்தியுள்ளனர். நானும் மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவன்தான். என்னை சந்தித்த கூத்தன் மதுவால் குடும்பம் அழிந்துவிடும் என்று கூறிய அறிவுரையால் நான் தற்போது மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு வீடு, வாசல், தோட்டம் என நிம்மதியாக உள்ளேன். நானும் மற்றவர்களுக்கு மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவுரை கூறி வருகிறேன்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :