கொரோனாவுக்கு 109 நாள் சிகிச்சை - நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா

பட மூலாதாரம், Maksim Labkouski / getty images
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தொடர்ந்து 62 நாள்கள் எக்மோ சிகிச்சையில் இருந்து மீண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
"நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுத்தும் பலன் கிடைக்காததால் எக்மோ சிகிச்சையளித்தோம். அவ்வாறு செய்தால் ஒரு மாதத்துக்குள் நுரையீரல் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன," என்கிறார் இந்த சிகிச்சை நடந்த ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா. என்ன நடந்தது?
நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்
திருச்சியை சேர்ந்த தொழிலபதிபரான 56 வயது எம்.முகமது முத்திஜா என்பவர், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 92 சதவிகிதம் என்ற அளவுக்கே இருந்துள்ளது. அவரது நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் முத்திஜா அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 லிட்டர் ஆக்சிஜன் அவருக்கு தேவைப்பட்டுள்ளது. முத்திஜாவின் நுரையீரல் கடுமையாக பாதிப்படைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு எக்மோ கருவியைப் பயன்படுத்தத் தொடங்கியது.

பட மூலாதாரம், Graphic_BKK1979 / getty images
மனித உடலில் ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றும் நுரையீரலின் பணியில் தடங்கல் ஏற்பட்டால் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து நுரையீரல், இதயம் போன்றவை செயலிழக்கத் தொடங்கும். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அந்தநேரத்தில் நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க எக்மோ கருவி பொருத்தப்படுகிறது. `அதுவும் 30 நாள்கள் வரையில் மட்டுமே இது சாத்தியப்படும்' எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
62 நாள்களாக எக்மோ
முத்திஜாவுக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில் தொடர்ந்து 62 நாள்கள் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 109 நாள்களுக்குப் பிறகு குணமடைந்துள்ளார்.
பொதுவாக, ஒருவர் எக்மோ சிகிச்சைக்குள் சென்றுவிட்டால் மீள்வது கடினம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், நோயாளி ஒருவர் 62 நாள்களுக்குப் பிறகு மீண்டிருப்பதை அரிய சாதனையாக இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கொண்டாடுகின்றனர்.
``கொரோனா முதல் அலையின்போது நோயாளிகளை எக்மோ சிகிச்சைக்குள் கொண்டு செல்லவில்லை. இரண்டாம் அலையின்போது எக்மோ சிகிச்சையளிக்கப்பட்டது. அதிலும், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தார்கள். அவர்களுக்கு வெண்டிலேட்டரின் உதவியோடு 100 சதவிகித ஆக்சிஜன் கொடுத்தும் அவர்களது உடலில் ஆக்சிஜன் சேரவில்லையென்றால் எதுவும் செய்ய முடியாது."

"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முத்திஜாவுக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு இருந்தது. அவருக்கு ஆக்சிஜன் கொடுத்தும் பலன் கிடைக்காததால் எக்மோவில் போட்டோம். அப்படிச் செய்தால் ஒரு மாதத்துக்குள் நுரையீரல் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாதத்துக்கு மேல் சரியாகவில்லையென்றால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்" என்கிறார் மருத்துவர் முகமது ரேலா.
அமெரிக்க நோயாளியின் 147 நாள் சாதனை
தொடர்ந்து பேசியவர், `` முத்திஜாவுக்கு முதலில் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளித்தோம். அதில் குணமாகாததால் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போதும் குணமாகாததால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். ஆனால், நுரையீரலுக்காக காத்திருந்த நேரத்தில் எக்மோவிலேயே அவர் இரண்டு மாதங்கள் இருக்க நேரிட்டது."
"இவ்வாறு இரண்டு மாதங்கள் (62 நாள்கள்) ஒருவர் உயிர் பிழைத்து இருப்பது என்பது மிகவும் அரிதானது. பின்னர், அவருக்கு படிப்படியாக எக்மோ சிகிச்சையை குறைத்தோம். தொடர்ந்து, எக்மோ சிகிச்சையே தேவையில்லை என்ற நிலை உருவானது. வெண்டிலேட்டர் கருவியின் உதவியும் தேவைப்படவில்லை."
"இதே வரிசையில், அமெரிக்காவில் நோயாளி ஒருவர் 147 நாள்கள் இருந்ததாக அறிக்கை ஒன்று பதிவாகியுள்ளது. நம் நாட்டில் இதுதான் முதல் வழக்காக பதிவாகியுள்ளது. மற்றவர்கள் யாரும் அறிக்கை கொடுத்துள்ளார்களா எனத் தெரியவில்லை. 2 மாதங்கள் எக்மோவில் இருந்த முத்திஜாவுக்கு, பிற்காலத்திலும் நுரையீரல் மாற்று தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இது மிகவும் அரிதானது" என்கிறார் ரேலா.

மேலும், `` நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கும்வரையில் தற்காலிக ஏற்பாடாக எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எக்மோ சிகிச்சை என்பது உண்மையிலேயே உயிர்காக்கும் சிகிச்சை முறையாக மாறியுள்ளது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிர்வாழ முடியும். அவர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் இது வாய்ப்பாக அமையும்" என்கிறார்.
"மறு பிறப்பாக உணர்கிறேன்"
``எக்மோ சிகிச்சையில் 54 நாள்கள் கழிந்தவுடன் முத்திஜாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் தென்பட்டது. இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு வந்த எக்மோ சிகிச்சையை குறைத்தோம். 62 நாள்களுக்குப் பிறகு அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். எங்கள் கண்முன்னால் இந்த அதிசயத்தைப் பார்த்தோம். ஜூலை 29 அன்று வெண்டிலேட்டர் சிகிச்சையை அகற்றினோம். இதன்பிறகு உட்கார்வது, நடப்பது, இயல்பான உணவுகளை எடுத்துக் கொள்வது என முத்திஜா தேறிவிட்டார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில்லாமல் குணமடைந்த ஒரே நபர் இவர் மட்டும்தான்" என்கிறார் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான சி.ஆறுமுகம்.
"பலநேரங்களில் நான் சுயநினைவில்லாமல் இருந்தேன். அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீரனாக இருந்ததால் மனதை வலிமையாக வைத்துக் கொள்ள அது உதவியது. நோயில் இருந்து மீண்டு வருவதற்கு கடவுளின் துணையோடு அனைத்து முயற்சிகளையும் செய்தேன். இதனை மறு பிறப்பாக நான் உணர்கிறேன். என்னை குணப்படுத்திய மருத்துவக் குழுவுக்கு நன்றி" என்கிறார் முத்திஜா.
பிற செய்திகள்:
- கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க இந்திய அரசு தயாரா?
- ஆபத்தில் இருந்து தப்ப 'மனிதர்களை ஏமாற்றும் பாம்புகள்' - சுவாரசிய தகவல்கள்
- ஆஃப்கன் - நடு வானில் விமானத்தில் இருந்து விழுந்தவர் 19 வயது கால்பந்து வீரர்
- `இப்போதும் தனி ராஜாங்கம்; அதே விதிகள்' - கொடநாடு எஸ்டேட் இப்போது எப்படி இருக்கிறது?
- தாலிபனுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












