சாலைக்காக 30 ஆண்டுகள் நடந்த போராட்டம், ஒரு ட்வீட்டில் வெற்றி பெற்ற கதை

மூர்த்தி
    • எழுதியவர், ஞா சக்திவேல் முருகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சாலை வேண்டும் என்று 30 ஆண்டுகளாக மக்கள் நடத்திய போராட்டம், கடைசியாக ஒரு ட்வீட் மூலம் வெற்றி பெற்றது.

இடைவிடாமல் தங்கள் கோரிக்கையைத் துரத்திக்கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியும், ட்வீட்டைப் பார்த்து எதிர்வினையாற்றிய மாவட்ட ஆட்சியரும் இந்த வெற்றிக் கதையின் கருவாக இருக்கிறார்கள்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரியூர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளது.

சாலை போடவேண்டும் என்று வலியுறுத்தி, போலியோ பாதித்து இரண்டு கால்களையும் இழந்த மூர்த்தி, கைகளால் தவழ்ந்துசென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்த போதும் சாலை வரவில்லை. இப்போது சாலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் கிராமவாசிகள்.

ஒரு ட்வீட்டைப் பார்த்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

என்ன ட்வீட் அது?

கடந்த வாரம், 'சரியான சாலை வசதி இல்லாததால் என்னால் நடந்தோ அல்லது தவழ்ந்தோ வர முடியவில்லை. குறைந்தபட்சம் மண் ரோடாவது அமைத்துத் தர வேண்டும் என்று சமூக வலைத்தலங்கள் வழியாக மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை வைத்திருந்தார் மூர்த்தி.

அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, உடனே ஆய்வு செய்ததுடன், சாலை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மாவட்ட ஆட்சியரின் (@collrdpi) ட்விட்டர் கணக்கு மூலம், மூர்த்திக்கு பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன பிரச்சனை?

தையல் காரரான மூர்த்தியின் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளன. அவரால் நடக்க முடியாது. தன் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது முதன்மை சாலை.

மேடும், பள்ளமுமாக உள்ள அந்தப் பாதை வழியே தினமும் தவழ்ந்து, மற்றவர்களின் உதவியுடன் இருசக்கர வாகனம் வரை செல்கிறார். அதன் பிறகு ஏரியூரில் வாடகை இடத்தில் உள்ள தன் தையல் கடைக்குச் செல்கிறார்.

முதுகில் சுமந்து பள்ளிக்கு அழைத்து சென்ற அக்கா

மூர்த்தி

சாலை கேட்டு பதிவிட்ட மூர்த்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம் "என்னுடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். இரண்டு அக்கா. ஒரு தம்பி. தம்பி கடந்த மாதம்தான் இராணுவத்தில் சேர்ந்துள்ளான். ஒன்றரை வயதில் போலியோவால் என்னுடைய இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டன.

என்னுடைய அக்காதான் என்னை முதுகில் சுமந்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அக்காவுக்குத் திருமணமானதால் படிப்பும் தடைபட்டது. தருமபுரியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் தங்கிப் படித்தேன்.

கேட்கும் திறனைப் பறித்த வண்டு

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காதில் வண்டு நுழைந்ததால் கேட்கும் திறனை இழந்துவிட்டேன். பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் என்னுடைய காது கேட்கும் திறனைத் திரும்பப் பெற முடியவில்லை. இதனால் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது.

காணொளிக் குறிப்பு, பார்வை மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரியின் சிவில் சர்வீஸ் வெற்றிக் கதை

வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாகக் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என தையலைக் கற்றுக்கொண்டேன். என் வீட்டிலிருந்து என் தையல் கடை ஒரு கிலோ மீட்டர்தான்.

இதில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை இல்லை. தினமும் வேலைக்குச் செல்லவும், வீட்டுக்கு வரவும் கைகளையும், கால்களையும் இழுத்துக்கொண்டு மேடு, பள்ளமாக இருக்கும் பாதையில் சொல்ல வேண்டும்.

30 வருடங்களாக எங்கள் ஊர் மக்கள் சாலை வேண்டும் என மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை . நானும் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல அதிகாரிகளுக்கு மனு எழுதிவிட்டேன்.

மூர்த்தியை சமாதானப்படுத்தும் அதிகாரிகள்

2019 முதல் பல போராட்டங்கள் நடத்தினோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினேன். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வசிப்பிடத்துக்கு வராத சாலை, டாஸ்மாக் கடைக்கு வந்தது

"ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது ஒன்றே தீர்வு என கையில் எடுத்தேன். இப்பிரச்சனை தொடர்பாக என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தேன். என்னுடைய பதிவைப் பார்த்து 'மை தர்மபுரி' முகநூல் பக்கத்தில் ஷேர் செய்தார்கள். இதைப்பார்த்து அடுத்து நாளே அதிகாரிகள் எங்கள் ஊருக்கு முதல் முறையாக ஆய்வு செய்ய வந்தார்கள்.

சில நாட்களில் சாலை வசதி அமைத்துத் தருகிறோம் என்று கூறி விட்டுச் சென்றவர்கள், ஆறு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊர் மக்களைத் திரட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராடிப் பார்த்தேன். உடனே அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தார்கள்.

மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சாலை அமைக்க கால தாமதம் செய்யும் அதிகாரிகள், எங்கள் பகுதியில் அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைக்கு மட்டும் சாலை வசதி செய்து கொடுத்துள்ளனர்.

நியாயத்தைச் சொல்லும்போது அதிகாரிகளுக்குக் கோபம் கொப்பளிக்கும். போதுமான நிதி இல்லை என்று பதிலை மட்டுமே தயாராக வைத்திருந்தனர். இதனால் காத்திருந்து கஷ்டத்தோடு வாழப் பழகிக்கொண்டதுதான் மிச்சம்," என்கிறார் மூர்த்தி.

"ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் எங்கள் ஊர் வழியாக வருகிறார் என்று தகவல் கிடைத்தது. அவரிடம் சென்று முறையிடலாம் என்று காத்திருந்தேன்.

போராட்டத்தில் மூர்த்தி

அதற்குள் மாவட்ட ஆட்சியர் எங்கள் ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று விட்டார். மீண்டும் இந்த வழியாகத் தான் அவர் வரவேண்டும் என காலை முதல் மதியம் 3 மணி வரை காத்திருந்தேன்.

நான் கால்களை இழுத்துக் கொண்டு நடு சாலையில் சென்று ஆட்சியரின் காரை வழிமறித்து நிறுத்தினேன். இரு கை கூப்பி அவரிடம் உதவி செய்யக் கேட்டேன் அவர் என் மீது இரக்கம் கொண்டு மறுநாளே சாலை போட பூமி பூஜை செய்தார் .

திடீரென்று மாவட்ட ஆட்சியர் மாறியதால், சாலை பணி அப்படியே நின்று போனது. அடுத்து மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டவரிடம் மீண்டும் மனு கொடுத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால், தேர்தல் காரணமாக எதுவும் நடக்கவில்லை.

மீண்டும் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டார்கள். தற்போது, புதியதாக மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றவரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து என்னுடைய கோரிக்கையை முன்வைத்தேன்.

மறுநாளே அதிகாரிகள் என்னை சந்தித்து 10 நாட்களில் சாலை அமைத்துக் கொடுக்கிறோம் என்று கூறி விட்டுச் சென்றார்கள். தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது" என்கிறார் மூர்த்தி நிம்மதிப் பெருமூச்சுடன்.

"இது எனக்கு மட்டும் மகிழ்ச்சி அல்ல. எங்கள் ஊருக்கும் ஒரு நல்ல விடிவு இது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்கிறார் அவர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

பட மூலாதாரம், District Collector Dharmapuri, Twitter

பிபிசி தமிழுக்காக ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் பேசினோம். "தருமபுரி மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று ஒரு மாதமே ஆகிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் மக்கள் நேரடியாக வந்து மனுக்கொடுப்பதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுடைய கோரிக்கையை முன் வைப்பதற்காக, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் வழியாகக் கோரிக்கையைத் தெரிவிக்கும்போது, அதன் உண்மைத்தன்மையை விசாரித்து உடனே நடவடிக்கை எடுப்பதற்கு குழு அமைத்துள்ளோம். அந்த குழு தொடர்ந்து சமூக வலைத்தள கோரிக்கைகளைக் கண்காணித்து வருகிறது.

ஏரியூரில் இருந்து சாலை வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ட்விட்டரில் முன் வைத்திருந்தார் மூர்த்தி. உடனே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் சாலையிடும் பணிகள் முடிந்துவிடும்.

பொதுமக்கள் தங்களுடைய பொதுவான கோரிக்கைகளைத் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்கள் வழியாகத் தெரிவிக்கலாம். உண்மைத்தன்மை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :