சசிகலா ஆடியோ பேச்சுகள்: எடப்பாடியை வீழ்த்துமா அவரது புது வியூகம்? அதிருப்தியாளர்கள் அணி சேருகிறார்களா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.கவினரிடம் வி.கே.சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. `அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை' என எடப்பாடி பழனிசாமி கூறிய பின்னரும் தொடர்ந்து அவர் பேசி வருவது ஏன்? சசிகலாவின் திட்டம்தான் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 66 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதில், எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவோடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரம், `சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேண்டாம்' எனப் பிடிவாதம் காட்டி வந்த பன்னீர்செல்வமும் கடந்த 14 ஆம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் துணைத் தலைவர் பதவிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா பேசி வரும் ஆடியோ உரையாடல்கள், கொங்கு மண்டலத்தின் கொதிப்பை அதிகப்படுத்தியுள்ளன.
அதிர்ச்சியில் உறைந்த 16 பேர்
இதுதொடர்பாக வேப்பனஹள்ளியில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `சசிகலாவின் எண்ணம் ஈடேறப் போவதில்லை. அவர் ஒருபோதும் அ.தி.மு.கவுக்குள் நுழைய முடியாது. தன்னுடன் இருக்கும் ஒரு சிலரை தேர்வு செய்து வைத்துக் கொண்டு இதுபோன்ற குழப்பத்தை சசிகலா செய்து வருகிறார். இந்தக் குழப்பம் நிச்சயமாக வெற்றியடையப் போவதில்லை. இதன் மூலம் சசிகலாதான் ஏமாறுவார். மேலும் எந்தவொரு அ.தி.மு.க தொண்டரும் அவரைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர் பேசும் தொண்டரும் அ.ம.மு.கவை சேர்ந்தவர்' என்றார்.
இதன் தொடர்ச்சியாக, சசிகலாவுடன் பேசிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சின்னச்சாமி உள்பட 15 பேர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். மேலும், அ.தி.மு.கவின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து பெங்களூரு புகழேந்தி நீக்கப்பட்டார். "பா.ம.கவை விமர்சித்தததற்காக என்னைக் கட்சியைவிட்டே நீக்கி விட்டனர். சர்வாதிகாரமாக எடப்பாடி நடந்து கொள்கிறார். இதற்கான பலனை அவர் அனுபவிப்பார்" எனவும் காட்டமாக புகழேந்தி விமர்சித்தார்.
அ.தி.மு.க தலைமையின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகும் தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த 15 ஆம் தேதி நெல்லையை சேர்ந்த பாரதி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காத்தவராயன், தேனி சிவநேசன் ஆகியோருடன் சசிகலா பேசியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டக் கழகங்களில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் போடுமாறு, தலைமையில் இருந்து உத்தரவு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், `சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக தலைமைக் கழகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை வலியுறுத்தி மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்படும்' என்றார். இதையே பிற மாவட்டக் கழகங்களும் பின்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் தொடங்கிய பழக்கம்

பட மூலாதாரம், Getty Images
`சசிகலாவின் திட்டம்தான் என்ன?' என மன்னார்குடியை சேர்ந்த அவரது உறவினர்களிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவுக்குள் எடப்பாடியின் கரம் வலுப்பெற்றதை சசிகலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. `தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடைந்த பிறகு தன்னுடைய தலைமையை தேடி வருவார்கள்' என்ற எண்ணத்தில் போயஸ் கார்டனில் குடியேறவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை. மேலும், தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அ.ம.மு.கவும் தோல்வியை தழுவிவிட்டது. இதன் காரணமாக, தினகரனையும் சசிகலா சந்திக்காமல் இருக்கிறார். `இனியும் அமைதியாக இருக்கக் கூடாது' என்பதால்தான் தொண்டர்களிடம் செல்போனில் பேசி வருகிறார்" என்கின்றனர்.
தொடர்ந்து பேசுகையில், `` பெங்களூரு சிறையில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கு கடிதம் எழுதிய பலருக்கும் கைப்பட பதில் கடிதத்தை சசிகலா எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திலும், தன்னுடைய எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவித்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் தனக்குக் கடிதம் எழுதியவர்களின் பட்டியலை சேகரித்து வைத்திருந்தார். கர்நாடகாவில் இருந்து சென்னை திரும்பிய பின்னர் தன்னுடைய வருகைக்காக காத்திருந்த அ.தி.மு.கவினரின் தொடர்பு எண்களையும் சேகரிக்குமாறு கூறியிருந்தார். அவர்களைத்தான் தற்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
ஆடியோ பதிவுக்கு முன் என்ன நடக்கிறது?
அ.தி.மு.க தொண்டர்களிடம் பேசுவதற்கு முன்பு, `சின்னம்மா உங்களிடம் பேச விரும்புகிறார். உங்களுக்கு அவருடன் பேச விருப்பமா?' எனக் கேட்கின்றனர். இதற்கு எதிர்முனையில் இருப்பவர் சம்மதம் தெரிவித்த பிறகுதான் உரையாடல்களை பதிவு செய்கின்றனர். என்ன பேச வேண்டும் என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடுகின்றனர். இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உரையாடல்கள் வெளியாகிவிட்டன. தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் முடிவில் சசிகலா இருக்கிறார். இந்தப் பயணத்தில் மாவட்டவாரியாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளவர்களை அணிதிரட்டுவதுதான் அவருடைய நோக்கம்" என்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், `` அ.தி.மு.கவில் சசிகலா ஆதரவாளராக ஓ.பி.எஸ் பார்க்கப்பட்டாலும், அதனை நேரடியாகப் பேசுவதற்கும் ஓ.பி.எஸ் தயக்கம் காட்டுகிறார். காரணம், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் கிளம்பியவர் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுதான். எனவேதான், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மூலமாக தன்னுடைய கருத்துகளை அவர் தெரியப்படுத்தி வந்தார். இதனை உணர்ந்து ஓ.பி.எஸ் மூலமாகவே புகழேந்தியை கட்சியைவிட்டு நீக்கினர். கட்சிக்குள் எடப்பாடியின் ஆதிக்கம் அதிகரிப்பதை ஓ.பி.எஸ்ஸால் எதிர்த்துக் கேட்க முடியாத நிலை இருக்கிறது. மொத்தமாக, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.
ஆடியோக்களை வெளியிடுவது ஏன்?
இதை உணர்ந்துதான் தொடர்ந்து தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் எல்லாம் தனக்கு எதிராக நிற்பதையும் சசிகலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது குறித்து கடந்த 15 ஆம் தேதி பேசிய ஆடியோவில், `எனக்கு இடமே இல்லாதவாறு முதுகில் குத்திவிட்டார்கள். தொண்டர்களையும் அவ்வாறு செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது' என சசிகலா குறிப்பிட்டார். விரைவில் அவர் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் வெற்றியைத் தருமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்" என்கின்றனர்.
``அ.தி.மு.கவில் சசிகலாவுக்கான இடம் மறுக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து ஆடியோக்களை வெளியிடுவது ஏன்?" என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழியாக சசிகலா இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையையும் அனுபவித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தைவிடவும் அவருக்கென்று ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க என்பது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ற இரட்டைத் தலைமை மட்டும்தான். அவர்கள் அணியாக 40 சதவிகிதமும் தனியாக 33 சதவிகித வாக்குகளையும் பெற்றுவிட்டனர். இது 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு தேர்தல்களில் ஜெயலலிதா பெற்றதைவிடவும் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் சசிகலா 2021 சட்டமன்றத் தேர்தலில் தினகரனை மையமாக வைத்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அப்போது, மத்திய அரசின் நெருக்கடியால் தான் அடைந்த துயரங்களை எடுத்துக்கூறி அவர் களத்தில் நின்றிருந்தால் ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது போல தேர்தலில் அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி குறிப்பிடத்தகுந்த வாக்குகளை அவர் பெற்றிருக்கலாம்" என்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல்தான் இலக்கா?

பட மூலாதாரம், AIADMK OFFICIAL
தொடர்ந்து சில தகவல்களையும் பட்டியலிட்டார். "சசிகலா அவ்வாறு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தால், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவும் படுதோல்வியடைந்திருக்கும். ஆனால், சசிகலாவின் எண்ணமோ வேறுவிதமாக இருந்தது, `தேர்தலில் அ.தி.மு.க தானே படுதோல்வியடையும், அதன்பிறகு கட்சியைக் கைப்பற்றலாம்' என நினைத்தார். அது நடக்காமல் போய்விட்டது.
அவர்கள் கணிசமான இடங்களைப் பிடித்துவிட்டனர். இனி வரும் காலங்களில் தினகரனை வேண்டுமானால் அ.தி.மு.கவில் கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளலாம். சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை. தற்போது வரையில் பலத்தை நிரூபிக்காத ஒருவராக சசிகலா இருக்கிறார். அவர் தனது பாப்புலாரிட்டியை வைத்து அ.தி.மு.கவில் உள்ள அதிருப்தியாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தன்வசப்படுத்த திட்டமிடுகிறார். அதற்காகத்தான் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் சசிகலா பேரவை, அ.ம.மு.க உள்பட அனைத்து அதிருப்தியாளர்களையும் ஒன்றிணைத்து வேட்பாளர்களை நிறுத்தினால் சசிகலாவின் முயற்சிக்கு ஒரு மதிப்பு கிடைக்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பெரிதாகப் பார்க்கப்படுவதில்லை. இதைப் பயன்படுத்தி சசிகலா ஓர் அரசியல் சக்தியாக மாறலாம். அதற்கு மையமாகத்தான் பா.ம.க எதிர்ப்பில் உள்ள பிற சமூக வாக்குகளையும் எடப்பாடியின் சொந்த சமூகத்துக்கு எதிரான பிற சமூக வாக்குகளையும் தன் பக்கம் கொண்டு வரும் வேலையை அவர் தொடங்கியுள்ளார்.
சசிகலாவை பொறுத்தவரையில், `நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தான் ஒரு அரசியல் சக்தி' என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதை அவர் செய்யாவிட்டால், அதன்பிறகு அவர் பேசுவதெல்லாம் வெறும் காமெடியாகவே பார்க்கப்படும்" என்கிறார்.
``பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதே?" என்றோம். `` அந்த வழக்கை பொறுத்தவரையில், `நானும் அ.தி.மு.கதான்' என்று சசிகலா சொல்வதற்குப் பயன்படும். அதாவது, அந்த வழக்கு நிலுவையில் உள்ள வரையில் மட்டுமே அவருக்குப் பயன்படும். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமைக்குக் கடந்த ஏழு தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. அ.தி.மு.க என்பது இவர்கள் இருவரின் தலைமை மட்டும்தான்" என்கிறார்.
சசிகலாவின் புதிய அணுகுமுறை!

பட மூலாதாரம், Getty Images
`` அ.தி.மு.கவை மீண்டும் கையகப்படுத்துவதற்காக நேரடிப் போராட்டத்தில் சசிகலா இறங்கத் தயாராகிவிட்டார் என்பதையே இந்த ஆடியோ பேச்சுக்கள் காண்பிக்கின்றன. அதுவும் தான் முதுகில் குத்தப்பட்டது பற்றியெல்லாம் அவர் வெளிப்படையாகப் பேசுகிறார். எதையும் பொதுவெளியில் அவர் வெளிப்படையாகப் பேசுவது என்பது புதிதாகத் தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா? அவர்கள் யார் பக்கம் சாய்வார்கள் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.அசோகன்.
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசிய அவர், `` சசிகலாவுடன் பேசியவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்கியதன் மூலம் இப்போதைய அதிமுக தலைமை ஒரு வலுவான செய்தியைச் சொல்லி இருக்கிறது. அதாவது, `சசிகலாவின் வருகையை நாங்கள் விரும்பவில்லை' என்பதே அது. அனைவருக்கும் தெரிந்த செய்திதான் என்றாலும் தன் முயற்சியில் சற்றும் தளராமல் தொடர்கிறார் சசிகலா. அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் என இருவரில் யாரை சசிகலா தன் பக்கம் வென்றெடுப்பார் என்கிற எதிர்பார்ப்பும் பரவலாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசியல் சூழல்களின் மாறுதல்களைப் பொறுத்து நிலவரம் முடிவாகும்" என்கிறார்.
`சசிகலாவின் புதிய யுக்தியால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு வருமா?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
"எங்கள் தொண்டர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். தொண்டர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் யுக்தியை அவர் கையாண்டார். அப்படியொரு குழப்பம் தேவையில்லை எனக் கூறி தலைமை உறுதியான நடவடிக்கையை எடுத்துவிட்டது. துரோகம் செய்தவர்களோடு தொடர்பு கொண்டால் அவர்களும் துரோகிகள்தான் என்பதில் அம்மா எந்தளவுக்கு உறுதியாக இருந்தாரோ அதே யுக்தியை இன்றைக்குள்ள தலைமையும் கடைப்பிடித்து வருகிறது. இதனை தொண்டர்களும் உணர்ந்து கொண்டார்கள்.
ஓ.பி.எஸ் குறித்து சசிகலா பேசியுள்ளார். அவருக்கு அழுத்தம் கொடுத்து பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக அவர் பேசியுள்ளார். தற்போது வேறுவிதமாக சசிகலா பேசி வருகிறார். தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர் இவ்வாறெல்லாம் பேசி வருகிறார். அவரது அடிப்படை நோக்கம், அ.தி.மு.கவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இது எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தாது. தற்போதுள்ள இரட்டைத் தலைமை தொடரும். இதனுடன் இணைந்து தொண்டர்களும் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் பயணித்து வருகின்றனர்" என்கிறார்.
சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம்!
``சசிகலாவின் ஆடியோ உரையாடல்களால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?" என அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` சின்னம்மா வெளியில் வந்த பின்னர் ஊடகங்களை சந்தித்துப் பேச இருக்கிறார். அதன்பிறகே நாங்கள் கருத்து கூற முடியும். காரணம், இதுதொடர்பாக நாங்கள் என்ன பேசினாலும் அது அ.ம.மு.க என்ற கட்சியின் கருத்தாகத்தான் வெளியில் பார்க்கப்படும். இன்னொரு தருணத்தில் இதுகுறித்துப் பேசுகிறேன்" என்றார்.
`சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் இடமில்லை' என்பதை வலியுறுத்தி அதிமுகவின் மாவட்ட அலகுகளில் தீர்மானம் இயற்றும் வேலைகளையும் அ.தி.மு.க நிர்வாகிகள் தொடங்கிவிட்டனர். ` ஒருவேளை சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டால் என்ன மாதிரியான தாக்கத்தை அது ஏற்படுத்தும்?' என்ற கணக்குகளும் அ.தி.மு.க தரப்பில் யோசிக்கப்படுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












