கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடும் அச்சத்தில் கர்ப்பிணிப் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபர்ணா அல்லூரி மற்றும் விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
கடந்த பிப்ரவரி மாதம் ஜக்ரிதி எடாலா, தாம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன், தனது கணவருடன், வெளியூர் சென்று கொண்டாடினார். அவர்களது திருமண நாள் வந்தபோது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டிருந்தது.
ஆனால், ஒரே மாதத்தில் 29 வயதான ஜக்ரிதி தனது அறையில் முடங்கி, வெளியே வரவே அச்சப்பட்டார். அப்போது இந்தியாவில் கொரோனா வீரியம் வெகு வேகமாக பரவியது. அவரது கணவர் வெளியே வேலைக்கு போக வேண்டிய சூழல். அதனால் ஜக்ரிதி வீட்டில் அனைவரிடமும் இருந்து விலகி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அப்போது இந்தியாவில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கினாலும், ஜக்ரிதிக்கு அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. அப்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது அனுமதிக்கப்படவில்லை. பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சமீபத்தில் அரசு தெரிவித்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அவர்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்தது.
"கடந்த நவம்பர் மாதம் எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. என் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தது. ஆனால், நான் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்" என்கிறார் ஜக்ரிதி.
தனக்கு தெரிந்த 9 மாத கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததாகவும் கூறும் ஜக்ரிதி, அந்த பெண் சில நாட்கள் வென்டிலேட்டர் வைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.
அந்தப் பெண் பிழைத்துக் கொண்டாலும், இது போன்ற கதைகள் தனக்கு மிகுந்த அச்சத்தை தருவதாக அவர் கூறுகிறார்.
இதுபோன்று மேலும் பல கதைகள் உள்ளன. அதுவும் கேட்பதற்கே மிகுந்த வருத்தத்தை தரக்கூடிய கதைகள்.
டெல்லியில் 35 வயதான ஒருவர் தன் மனைவியை இழந்துவிட்டார். அதுவும், ஒரு பெண் குழந்தையை பெற்ற இரண்டு வாரத்தில் அந்த தாய் இறந்துவிட்டார். இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், கைக்குழந்தையையும், ஏற்கனவே இருக்கும் இரு பெண் குழந்தைகளையும் எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.
"கொரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்கிறார் தொற்று பாதிக்கப்பட்ட ஒரு இளம் மருத்துவர். பேச முடியாமல் அந்த வீடியோவை வெளியிட்ட அவர், இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முதல் நாள், ஏழு மாத கர்ப்பிணியான அவரின் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

பட மூலாதாரம், Getty Images
சாதாரண பெண்களைவிட, கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவது, வென்டிலேட்டரில் வைக்கப்படுவது, போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் அதிகம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகினாலும், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. தாமதிக்கப்பட்ட பரிசோதனை மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
தடுப்பூசி இவர்களது உயிரை காப்பாற்றி இருக்குமா?
"இவ்வளவு விரைவாக தடுப்பூசி தயாரிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் உள்ளது. ஆனால் பொதுவாக ஒரு தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று அங்கீகரிக்கப்பட 10 ஆண்டுகள் ஆகும். அரசாங்கங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கின்றன. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. லட்சக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படும் சூழலில் இருக்கிறார்கள். விரைவில் அரசாங்கம் நல்ல முடிவாக எடுக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார் டெல்லி ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் இயக்குநர் மருத்துவர் மீனாக்ஷி அஹுஜா.
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவர்களிடம் இருந்து ஆலோசனை பெற்று தடுப்பூசி குறித்து முடிவு எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய மகப்பேறு மருத்துவர்களின் கூட்டமைப்பும் பரிந்துரைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கர்ப காலத்தின் போது பொதுவாகவே எதிர்ப்பு சக்தி சற்று குறைந்திருக்கும் என்று கூறும் மருத்துவர் அஹுஜா, குறிப்பாக கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில் இருக்கும் பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறுகிறார்.
அந்த நேரத்தில் கருப்பை பெரிதாகி, மார்புக்கும் வயிற்றுக்கும் இடைபட்ட பகுதியில் இடிக்க ஆரம்பிக்கும், இது நுரையீரலை அழுத்த, சாதாரண காற்று இருந்தாலும் சுவாசிக்க கடினமாக இருக்கும்.
"அதனால், முன்கூட்டியே குழந்தையை வெளியில் எடுக்கவே முதலில் முயற்சிப்போம். பிறந்த குழந்தைகள் இறப்பு அதிகமாக இதுவும் ஒரு காரணம்" என்கிறார் அஹுஜா.
மற்றொரு பிரச்னை - பிரசவம்
"சாதாரணமாக பிரசவத்திற்கு பெண்கள் முதுகு கீழே இருக்கும் வகையில் படுக்க வேண்டும். இப்படிப் படுத்தால், உதர விதானம் மேலே தள்ளப்பட்டு, நுரையீரல் இன்னும் மேலே தள்ளப்படும். இதனால், மூச்சுவிடும் திறன் குறைந்து, அவர்களின் ஆக்சிஜன் நிலை குறையும்" என்கிறார் டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் மருத்துவர் ருமா சாத்விக்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால், மிதமான மற்றும் தீவிர தொற்று இருப்பவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
"கொரோனா முதல் அலையில், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் இறக்கவில்லை. இந்த முறை மிக மோசமாக இருக்கிறது."
தெளிவான ஆய்வுகள் மற்றும் புள்ளி விவரங்கள் இல்லாததால், தன்னிடம் வரும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைப்பதா இல்லையா என்று தெரியவில்லை என்கிறார் மருத்துவர் சாத்விக். தற்போது இந்தியாவில் அதிகம் போடப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கர்ப்பிணிப் பெண்களிடம் பரிசோதிக்கப்படவில்லை.
கடந்த மாதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட பிரேசில் தடை விதித்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தம் உறைவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து மேலும் பல நாடுகளும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்தின.

பட மூலாதாரம், Getty Images
கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் உறையும் அபாயம் அதிகம் இருப்பதும் மகப்பேறு மருத்துவர்கள் மத்தியில் இது குறித்து அச்சம் அதிகமாக இருக்க காரணம் என்று மருத்துவர் அஹுஜா கூறுகிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தொடர்ந்து தடுப்பூசி போட்டு வருகின்றன. புதிய ஆய்வின்படி பாதுகாப்பானது என்று கருதப்பட்ட ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி அங்கு போடப்படுகிறது.
அந்த தடுப்பூசிகள் இன்னும் இங்கு வரவில்லை என்ற நிலையில், இந்திய அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த விதமான கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எந்த திட்டத்தையும் முன்வைக்க தவறிவிட்டது. கொரோனா தொற்று பாதிப்பு உள்ள கர்ப்பிணிப் பெண்களை பெரும் நகரங்களிலேயே ஒரு சில மருத்துவமனைகள்தான் சேர்க்கின்றன.
ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் கர்ப்பமாகும் இந்தியாவில், அதிக அபாயத்தில் இருக்கும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு தவறிவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












