தமிழ்நாட்டில் தளர்வு இல்லாமல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு- எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் மே 24-ஆம் தேதி அதிகாலை முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடப்பில் உள்ள ஊரடங்கு போல அல்லாமல் தளர்வுகளே இல்லாத ஊரடங்காக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mk stalin

பட மூலாதாரம், Mk stalin facebok page

இப்படி தளர்வுகள் இல்லாத ஊரடங்கு ஒரு வாரம் அமல்படுத்தப்படவுள்ளதால் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் கடைகள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து சட்டமன்றக் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பான முடிவை எடுத்தார்.

ஒரு வாரகால தளர்வுகள் அற்ற ஊரடங்கின்போது பால், குடிநீர், செய்தித்தாள் விநியோகம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்களும் அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கு காலத்தில் எதற்கெல்லாம் அனுமதி?

  • மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம், பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
  • தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.
  • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • இணைய வர்த்தக நிறுவனங்களின் சேவைக்கு (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
  • பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்
  • ஏடிஎம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
  • வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். அதேபோன்று, சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
  • உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
  • எனினும், மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
  • அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
  • பொது மக்கள் நலன் கருதி, இன்று இரவு 9-00 மணிவரையிலும், நாளை, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
  • எனினும், மால்களை திறக்க அனுமதி கிடையாது.
  • வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

மேலும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :