கொரோனா பொது முடக்கம் குறித்து முடிவெடுக்க முடியாத மோதி – மனித உயிர்களா? பொருளாதாரமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அஹமது
- பதவி, பிபிசி நிருபர்
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்டு வரும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் ஒரு பொது முடக்கத்தை அறிவிக்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது நாடு தழுவிய முடக்கத்துக்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று, "கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி முழுமையான முடக்கமேயாகும். அதுவும் ஏழைகளுக்கு நியாய் திட்டத்துடன்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'குறைந்தபட்ச வருமானத் திட்டம்' தான் நியாய் திட்டம். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது இத்திட்டம்.
இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் மட்டத்தில் முடக்கத்தை அறிவித்துள்ளன. உதாரணமாக, செவ்வாயன்று, சத்தீஸ்கர் அரசாங்கம் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து அமலில் இருந்த முடக்கத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளது, இப்போது அம்மாநிலத்தில் மே 15 வரை முடக்கம் அமலில் இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், திங்களன்று, இந்திய செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி ஃபாசி, இரண்டு மூன்று வாரங்களுக்கு தேசிய அளவில் பொது முடக்கம் அறிவிக்க இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கினார்.
"இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது அவர், "மக்களில் பலர் பாதிக்கப்படுகையில், அனைவருக்கும் போதுமான கவனிப்பு அளிக்கும் திறன் குறைகிறது; மருத்துவமனைகளில் நிலவும் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, ஒரு கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. எனவே, என்னைப் பொருத்தவரை, அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவிற்கு நிச்சயம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, பொது முடக்கம் விதிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு மோதி அரசுக்கு அறிவுறுத்தியது. பொதுக் கூட்டங்கள் மற்றும் தொற்று நோயைப் பரப்பும் 'சூப்பர் ஸ்ப்ரெடர்' நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடை செய்யவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
உச்சநீதிமன்றம், "பொது முடக்கத்தால் ஏற்படும் சமூக-பொருளாதாரத் தாக்கத்தை, குறிப்பாக, அடித்தட்டு மக்கள் மீதான அதன் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால், இவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்." என்றும் கூறியுள்ளது
2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட முழு முடக்கத்தைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இதைக் கூறியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வழியில் சோர்வு மற்றும் பசி காரணமாகப் பலர் தமது உயிரையும் இழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மருத்துவத் துறையினரின் கோரிக்கை
நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் இரவு பகலாக உழைத்தும், தங்கள் கண் முன்னால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பதைப் பார்க்கும் மருத்துவர்களின் அழுத்தம்தான் இந்திய அரசின் மீது அதிகமாக இருக்கிறது.
மருத்துவமனைகளில் ஐ.சி.யூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற சுகாதார சாதனங்களின் கடுமையான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் சில வாரங்களுக்கு முடக்கம் அறிவிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தங்களுக்குச் சற்று நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சில நாட்களுக்கு முழு அல்லது பகுதி முடக்கத்தை அறிவிக்க வேண்டுமென சில நாட்களுக்கு முன்பே கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகரங்களில் பிராந்திய அளவில் முடக்கங்கள், அல்லது இரவு நேர ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வார இறுதி ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் முதலமைச்சர்களின் மெய்நிகர் கூட்டத்தில், முழு ஊரடங்கை கடைசி கட்டமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் மோதி கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை சிறிதளவு குறைந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு லட்சம் என்று இருந்த தொற்று எண்ணிக்கை இப்போது மூன்று லட்சத்து 57 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு எதுவும் ஏற்படவில்லை, மேலும் தொற்று புதிய இடங்களுக்கும் பரவி வருகிறது. நகரங்களைப் போல சுகாதார வசதிகள் இல்லாத கிராமப்புறங்களைக் குறித்த கவலை தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.
"நாடு முழுவதும் பரவும் வைரஸின் இரண்டாவது அலையைத் தடுக்க நம்மிடம் இப்போது வழியில்லை. மாநில அளவிலான முடக்கங்கள், பெருமளவு பலனளிக்கவில்லை. எனவே நாடு தழுவிய முடக்கம் தான் இந்தப் பரவலைத் தடுக்க ஒரே வழி " என்று டாக்டர் குலேரியா கூறுகிறார்.
வாழ்வா வாழ்வாதாரமா?

பட மூலாதாரம், Getty Images
முதலில் உயிர்களைக் காப்பதா அல்லது வாழ்வாதாரத்தைக் காப்பதா என்பதே இந்திய அரசின் குழப்பத்துக்குக் காரணம். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால், அதனால், பொருளாதார மந்த நிலை ஏற்படும், வேலைவாய்ப்பிழப்பும் அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
இதனால் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும். தடுப்பூசி வழங்கும் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. என்றாலும், 125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிப்பது என்பது எளிதான செயல் அன்று.
கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மாலை பிரதமர், நாடு தழுவிய முடக்கத்தை அறிவிக்கும்போது, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று கூறி உயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். ஆனால், அதை விடத் தீவிரமாகவும் உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கும் இந்த இரண்டாவது அலையில் பிரதமர் முடக்கம் அறிவிக்கத் தயங்குவது ஏன்?
"பிராந்திய மற்றும் இலக்கு சார்ந்த முடக்கம் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்குதல் இவற்றுக்குப் பிரதமர் தற்போது ஆதரவாக உள்ளார்" என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் முடங்கியதால், இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் விழுந்தது. வளர்ச்சி விகிதம் ஒரு காலாண்டில் -23.9 சதவீதத்தை எட்டியது. இதுபோன்ற கடுமையான சரிவு இதற்கு முன்னர் இந்தியாவின் பொருளாதாரத்தில் காணப்பட்டதில்லை.
நாடு முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் வெளியேறியது பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஒரே நாளில், சுமார் 12 கோடி தொழிலாளர்கள் வேலையிழந்த கொடுமையும் அரங்கேறியது. இவர்களில் பலர், இன்னும் கூட தங்கள் சொந்த இடத்தை விட்டு, வேலை செய்யும் இடத்துக்குத் திரும்பி வரவில்லை.
அந்த நேரத்தில், பிரதமர் அனைத்து வகையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவேளை இதனால்தான் அவர் நாடு தழுவிய மற்றொரு பொது முடக்கத்துக்குத் தயாராக இல்லை போலும். படிப்படியாக, மெதுவாக ஒவ்வொரு நிலையாக இயல்பு நிலைக்கு வந்தபோது, மெதுவாகப் பொருளாதாரம் ஓரளவிற்கு மீண்டுள்ளது, அதை மீண்டும் முடக்குவது ஆபத்தானதாக இருக்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
மறுபுறம், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் மோசமான நிலையைப் பார்த்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தளர்வடைந்து விடக்கூடாது என்பதும் அரசு வட்டாரங்களில் பெரிய கவலையாக இருக்கிறது.
நிபுணர்கள் கருத்து
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரும் ஒரு சிறந்த பொருளாதார வல்லுநருமான ஸ்டீவ் ஹான்கி, கடந்த ஆண்டு நாடு தழுவிய முடக்கத்துக்கு எதிராக இருந்தார். அதற்காக நரேந்திர மோதியைக் கடுமையாக விமர்சித்தார்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பகுதி அமைப்புசாரா துறையை அடிப்படையாகக் கொண்டது, முழுமையான முடக்கம் என்பது முட்டாள்தனம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "இந்தியாவில் ஸ்மார்ட் லாக் டவுன்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, இதன் மூலம் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள் அல்லது வணிகங்களை மட்டுமே தடை செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்.
அதே பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார அமைப்பின் நிபுணரும் ஆராய்ச்சி அறிஞருமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அமேஷ் அதல்ஜா, தொற்றுநோயின் உலகளாவிய தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவர் இந்தியா மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் ஒரு குறுகிய கால முடக்கம் பலனளிக்கும் என்று கருதுகிறார். இந்தக் காலகட்டத்தில், சுகாதார வசதிகளை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது என்று இவர் கூறுகிறார்.
"கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுப்பது எளிதல்ல. இதற்காக, நாம் அடிப்படைகளில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும், சோதனை மற்றும் தடமறிதலை அதிகரிக்க வேண்டும், தொற்று நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டும். வீடுகளில் அடிப்படை வசதிகள் மேம்பட வேண்டும். சமூக மற்றும் மதக் கூட்டங்களைத் தடைசெய்து, தடுப்பூசி பிரசாரத்தை தேசிய அளவில் தொடங்க வேண்டும்" என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தரவு விஞ்ஞானியும் தொற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் பிரமர் முகர்ஜி, இந்தியாவில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலைகளின் போது தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டால், பிராந்திய முடக்கமே போதுமானது என்பது அவரின் கருத்து. ஆனால் இந்தியாவில் தொற்று மற்றும் இறப்பு பற்றிய உண்மையான புள்ளிவிவரங்கள் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை விட மிக அதிகம் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
எனவே அவர் மத்திய, மாநில அரசுகள் சரியான தரவை வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் வரும் நாட்களில், கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டும் போது, அதை துல்லியமாக ஊகிக்க முடியும்.
பிற செய்திகள் :
- 78,000 ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை
- ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பலியா? செங்கல்பட்டில் என்ன நடந்தது?
- ஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












