மாதவிடாய் மற்றும் பிசிஓடி பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா?

பட மூலாதாரம், Getty Images
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2021 மே 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக மக்களுக்குச் செலுத்த இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நேரத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டாம், அப்படி செலுத்திக் கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என ஒரு செய்தி பல்வேறு தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அப்படி அந்த செய்தியில் என்ன கூறப்பட்டிருக்கிறது?
"பெண்கள் மாதவிடாய்க்கு முன் ஐந்து நாட்களும், மாதவிடாய்க்குப் பிறகான ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம்" எனக் கூறப்படுகிறது.”அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் மாதவிடாய் காரணத்தினால் பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை தொடக்கத்தில் குறைக்கும், அதன் பிறகே எதிர்ப்பு சக்தியை மெல்ல அதிகரிக்கும்.
எனவே இந்த காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மேலே குறிப்பிட்ட மாதவிடாய் கால கட்டத்தில் கொரோனா தடுப்பூசியை பெண்கள் செலுத்திக் கொள்ள வேண்டாம்,” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பு கூறுவது என்ன?
மேலே குறிப்பிட்ட செய்தி அதிகம் பரவத் தொடங்கியதால், மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசின் பிஐபி முகமை தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தது.கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் மாதவிடாயால் பாதிக்கப்படாது என விளக்கமளித்திருக்கிறது பிஐபி முகமை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதோடு பிஐபி வெளியிட்ட அறிக்கையில் "பெண்கள் மாதவிடாய் காலத்துக்கு முந்தைய ஐந்து நாட்களும், பிந்தைய ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கூறுவது தவறான செய்தி. அசெய்தியை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்திருந்தது. இந்த செய்தி குறித்து பல பெண்களும் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டோம்.
"மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல மாதந்தோறும் நடைபெறுகின்ற ஒரு இயற்கையான விஷயம் எனவே இதற்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த மாதிரி மாதவிடாயை தனித்து பேசும் போது ஏற்கனவே அதன் மீதுள்ள ’டபூ’ என்பது அதிகமாகிறது. ஏற்கனவே அரசாங்கம் தெளிவான விதிமுறைகளை தெரிவித்துள்ளபோது இம்மாதிரியான தடுப்பு மருந்து குறித்த தவறான செய்திகள் தடுப்பு மருந்துக்கு எதிரான ஒரு மனப்பான்மையை வேண்டுமென்றே கிளப்புவதாக உள்ளது.”

பட மூலாதாரம், Getty Images
“கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து வேண்டாம் என அரசங்காம் தெரிவித்துள்ளது. எனவே இவர்களை தவிர பிற மக்கள் வதந்திகளாக வரும் செய்திகளை கொண்டு தடுப்பூசியை ஒதுக்குவது வருத்தமளிக்கிறது" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் மருத்துவர் சாந்தி ரவிந்திரநாத்.
மாதவிடாய் காலத்தில் மட்டுமல்லாமல், பிசிஓடி போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்கள் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதில் சிக்கல் ஏதும் உள்ளதா என்று மகப்பேறு மருத்துவர் உமையாள் முருகேசனிடம் கேட்டோம்.
"பிசிஓடி போன்ற காரணங்களுக்காக சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் தடுப்பூசி குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த பிசிஓடி பிரச்னைகளுடன் சேர்த்து நீரிழிவு, அதிக உடல் எடை, ஹைபர் டென்ஷன் போன்ற பிரச்னைகள் இருக்கும் சமயத்தில் அது குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகள்படி தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது நல்லது" என தெரிவித்தார் மருத்துவர் உமையாள் முருகேசன்.உலக அளவில் 65 - 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தான் ஹேர்ட் இம்மியூனிட்டி உருவாகும் என உலக சுகாதார அமைப்பு கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
- இந்தியாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி உதவ தயாராகும் வெளிநாடுகள்
- மியான்மர் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












