ஆக்சிஜன் தட்டுப்பாடு: எங்கே தவறவிட்டது இந்தியா? ஏன் இந்த நிலை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
தலைநகர் டெல்லிக்கு வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல் 23) சோகமாகவே விடிந்தது. ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் 25 கொரோனா நோயாளிகள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
மிகவும் மோசமான நிலையில் இருந்த கொரோனா நோயாளிகளுக்கு அதிக அழுத்தத்தில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் விநியோகம் தேவைப்பட்டது, ஆனால் அதற்கு போதிய அளவு ஆக்சிஜன் தங்களிடம் இருக்கவில்லை என அந்த மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் தெரிவித்திருந்தார்.
கொரோனா நோயாளிகள் சிலர் உயிருடன் இருக்க தேவைப்படும் ஆக்சிஜனுக்கு டெல்லியின் பல மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கங்காராம் மருத்துவமனையில் இக்கட்டான சூழலில் இருக்கும் 60 நோயாளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் தேவை என்ற நிலையில், ஒருவழியாக வெள்ளிக்கிழமையே அம்மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கிடைக்கப்பெற்றது.


ஆனால், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, பணக்கார நகரங்கள் முதல் மூலைமுடுக்கு வரை, இந்திய நாட்டின் சுகாதார அமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.
மூச்சு விடுவதற்கான போராட்டம்
மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், வட இந்தியாவின் ஹரியாணா, நடுப் பகுதியின் மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒருசில மருத்துவமனைகளின் வாசல்களில் "ஆக்சிஜன் இருப்பு இல்லை" என்ற அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் தலைநகரான லக்னோ மருத்துவமனைகள் நோயாளிகள் வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தலைநகர் டெல்லியில் உள்ள சிறிய மருத்துவமனைகளும், நர்சிங் ஹோம்களும் இதையேதான் செய்கின்றன. ஆக்சிஜன் தொழிற்சாலைகளின் வாசல்களில் பல நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அதுவும் ஹைதராபாதில் இருக்கும் ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆக்சிஜனுக்காக காத்திருந்து பல நோயாளிகள் இறந்து வருகின்றனர். மூச்சுவிட கஷ்டப்படும் நோயாளிகளை அனுமதித்துக் கொள்ள மருத்துவமனைகள் சிரமப்பட்டு வரும் நிலையில், வாட்சாப் மற்றும் சமூக ஊடகங்களில் படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் தேவை என்ற கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.
இந்தியாவில் எது நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தோமோ அது கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. ஆக்சிஜனே இல்லாமல் போகும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை இதனை கண்காணித்து வரும் மருத்துவர்கள், வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தெரியும், இது கடந்த ஆண்டும் நடந்ததுதான் என்று. கடந்த ஆண்டும் இதே போல கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. ஆனால், இம்முறை இது மிக மிக மோசமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக மருத்துவ தேவைக்காக சுமார் 15 சதவீத ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு, மீதியுள்ளவை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய நிலையில், நாட்டின் 90 சதவீத ஆக்சிஜன், மருத்துவத்திற்காக திருப்பப்பட்டுள்ளது. அதாவது தினமும் 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுவதாக மூத்த சுகாதார அதிகாரி ராஜேஷ் பூஷன் கூறுகிறார்.
கடந்த செப்டம்பரில் கொரோனா உச்சம் அடைந்த போது தினமும் பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜன் அளவைவிட இது சுமார் 3 மடங்கு அதிகம்.
முதல் அலையின் உச்சத்தில் இந்தியாவில் தினமும் சுமார் 90,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். ஆனால், தற்போது ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு நாள் உச்சம் என்பது 1,44,000ஆக இருந்தது. தற்போது இது இரு மடங்காகி 3,00,000 லட்சம் என்ற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.
"நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்றால், தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை இல்லாமல், ஆம்பூலன்சிலேயே நோயாளிகள் 12 மணி நேரம் வரை காத்திருக்க, அங்கேயே சிலருக்கு நாங்கள் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது" என்கிறார் புனேவில் உள்ள கோவிட் மருத்துவமனையின் மருத்துவர் சித்தேஷ்வர் ஷிண்டே.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகம் இருக்கும் நகரமாகவும், இறப்பு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்திலும் புனே இருக்கிறது.
பொதுவாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் புனேவுக்குதான் சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால், கடந்த வாரம் அங்கு போதிய வெண்டிலேட்டர்கள் இல்லாததால் மருத்துவர் ஷிண்டே, அவரது நோயாளிகளை வேறு நகரத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்தியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கொரோனா நோயாளிகள் அங்குதான் இருக்கிறார்கள். தினமும் அம்மாநிலத்தில் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அது அனைத்துமே அங்குள்ள நோயாளிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ஆக்சிஜனுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
"பொதுவாக எங்களை போன்ற மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு இருக்கும். ஆனால், கடந்த இரு வாரங்களாக, மக்களை சுவாசிக்க வைப்பதே பெரும் சவாலான விஷயமாக ஆகியிருக்கிறது. 22 வயதில் இருப்பவர்களுக்கே ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உள்ளது" என்கிறார் ஷிண்டே.
"இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவ்வில்லை. அரசாங்கம் இதை முன்னதாகவே கணிக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
ஆக்சிஜன் உற்பத்தி
ஒரு சில அரசாங்கங்கள் முன்னதாகவே கணித்தன.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கும் என்று கேரள மாநில அரசு முன்கூட்டியே கணித்தது. தற்போது அம்மாநிலத்தில் தேவையை விட அதிக ஆக்சிஜன் இருக்க, அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள்.
ஆனால், டெல்லி மற்றும் வேறு சில மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இல்லை என்பதால் வெளியில் இருந்து வரும் ஆக்சிஜனை அவர்கள் நம்பி இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து என்ன கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று மோதி அரசை கேட்டுள்ளது.
இந்தியாவில் பெருந்தொற்று தொடங்கி, எட்டு மாதங்கள் கழித்து அக்டோபரில் புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான ஏலத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் 162 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 33 ஆலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் மாத இறுதியில் மேலும் 59 ஆலைகள் நிறுவப்படும். மே மாத இறுதியில் 80 ஆலைகள் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 500 தொழிற்சாலைகள் காற்றிலிருந்து ஆக்சிஜனை எடுத்து அதனை சுத்திகரித்து திரவ வடிவில் விநியோகிக்கின்றன. இவை பெரும்பாலும் டேங்கர்கள் மூலம் அனுப்பப்படுகிறது.
பெரிய மருத்துவமனைகளில் அவர்களுக்கென சொந்தமாக இருக்கும் டேங்குகளில் இதை நிரப்பி, பைப் மூலம் இது படுக்கைகளுக்கு எடுத்து செல்லப்படும். சிறிய மருத்துவமனைகள் ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பிக்கொள்ளும்.
ஆலைக்கு முன்பு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் ஆக்சிஜன் டேங்கர்களில், ஆக்சிஜன் நிரப்ப சுமார் 2 மணி நேரம் ஆகும். இந்த டேங்கர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல மேலும் பல மணி நேரங்கள் பிடிக்கும்.
இந்த டேங்கர் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இவை செல்ல முடியும். மேலும், விபத்துகளை தவிர்க்க, பெரும்பாலும் இவை இரவு நேரத்தில் பயணிப்பதில்லை.
ஒடிஷா, ஜார்கண்ட் போன்ற இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இருந்து கொரோனா பெரிதும் அதிகரிக்கும் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மேற்கு மற்றும் வட மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதுதான், இங்கிருக்கும் மிகப்பெரிய சவால் என்கிறார் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் தலைவர்.
இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு வருவதற்கு முன், பெரிய அளவில் தேர்தல் பேரணிகளுக்கு அனுமதித்தது, கும்பமேளா கொண்டாட கூடிய கூட்டம் ஆகியவற்றுக்காக மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இரண்டாம் அலைக்கு பல மாநிலங்கள் தயாராக இருக்கவில்லை என்பது வல்லுநர்களின் கருத்து.
முறையான விதிமுறைகளை பின்பற்றி, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை வீட்டில் இருக்க வைத்திருந்தால், இந்த நிலையை தவிர்த்திருக்கலாம் என பிபிசியிடம் பேசிய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜனவரியில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது தவறான பாதுகாப்பு உணர்வை தந்தது. இதுவும் இந்த மோசமான இரண்டாம் அலைக்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது மோதி அரசு "ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்" என்ற திட்டத்தின் மூலம் ஆக்சிஜன் டேங்கரக்ளை தேவை அதிகமாக இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளது. மேலும், ராணுவ தளங்களில் இருந்து ஆக்சிஜனை விமானம் வழியாக கொண்டு செல்லும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
"நாங்கள் எங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த தயாராக இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கூறி வருகிறோம், ஆனால் அதற்கு நிதியுதவி தேவை" என்கிறார் மகாராஷ்டிராவில் சிறிய அளவிலான ஆக்சிஜன் ஆலை நடத்திவரும் ராஜாபாவ் ஷிண்டே.
"எங்களிடம் முன்கூட்டியே யாரும் எதுவும் கூறவில்லை. தற்போது திடீரென்று வந்து மருத்துவமனைகளும், மருத்துவர்களும், அதிக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். இது போன்று நடந்திருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் முன்பே கிணறு வெட்ட வேண்டும் என்பார்கள். அதை செய்ய நாம் தவறிவிட்டோம்" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













