ரூ. 2000 நோட்டுக்கு ரகசியமாக மூடுவிழா காண்கிறதா மோதி அரசு?

இரண்டாயிரம் ரூபாய்

பட மூலாதாரம், BARCROFT MEDIA

    • எழுதியவர், ருஜுதா லுக்டுடே
    • பதவி, பிபிசி மராத்தி

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோதி 500, மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து தடை செய்தார். அவற்றுக்குப் பதிலாக பிங்க் நிறத்திலான 2,000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

தற்போது 2,000 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருந்து சிறிது, சிறிதாக மறைந்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவென்று பிபிசி ஆய்வு மேற்கொண்டது. அவற்றை இங்கே பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி, தொலைகாட்சி முன்பு தோன்றி மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோதி, புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த உத்தரவு அடுத்த நாள் முதலே அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்குப் பதிலாக புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் என்றும் பிரதமர் மோதி அறிவித்து இருந்தார்.

அன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ளது. ஆனால், 2,000 ரூபாய் நோட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கி ஏடிஎம்களில் இருந்து மறைந்து வருகிறது. இதன் பின்னர் வங்கி பயன்பாடுகளில் இருந்தும் மறைந்து வருகிறது.

சமீபத்தில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளிக்கையில், ''2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

இது தற்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைப் போலவே 2,000 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்பதற்காக நீக்கப்பட்டு விட்டதா? என்று பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

எங்கு 2000 ரூபாய் நோட்டு செல்லும்?

இரண்டாயிரம் ரூபாய்

பட மூலாதாரம், NURPHOTO

புழக்கத்தில் இருந்து முதலில் 2,000 ரூபாய் நோட்டு தடை செய்யப்படவில்லை. இந்த ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வைத்து இருந்தால், அவை தற்போதும் செல்லுபடியாகும். இந்திய ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு இணைந்து சிறிது சிறிதாக இந்த ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து குறைத்து, 500 ரூபாய் நோட்டின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் பொருளாதார கொள்கையாக இருக்கலாம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுக்கும்போது, சந்தையில் இருந்து சில லட்சம் கோடி ரூபாய் திடீரென மறையும் என்பது தெரிந்ததே. இதுபோன்ற சூழல் உருவாகும்போது, மக்களிடையே பணப் புழக்கத்தை உருவாக்கவும் , அவசர தேவைக்கு பெரிய அளவிலான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கொண்டு வரப்படும். இதன் பின்னர் சிறிது சிறிதாக 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.

பொருளாதார வல்லுநர்கள் கருத்து

இது குறித்து பிபிசிக்கு பொருளாதார வல்லுநர்கள் வசந்த் குல்கர்னி மற்றும் சந்திரசேகர் தாக்கூர் விளக்கம் அளித்தனர்.

"நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, 86% சதவீத ரூபாய் நோட்டுக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தன. ஒரே நாள் இரவில் இந்தப் பணம் அனைத்தும் புழக்கத்தில் இருந்து தடை செய்யப்பட்டது. இதனால் மக்களின் கையில் பணப் புழக்கம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு, பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டு, அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டன" என்று வசந்த் குல்கர்னி தெரிவித்தார்.

சந்திரசேகர் தாக்கூர் பேசுகையில், போலி ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமே, போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்கவும், நிதி முறைகேடுகளைக் களையவும்தான். அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் போலி ரூபாய் நோட்டுக்கள் உருவாக காரணாமாக இருந்தன. அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்து, நிதி முறைகேடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், அதிக ரூபாய் நோட்டுக்களை தடை செய்வது அரசின் முன்னுரிமையாக இருக்கலாம்.

ஏழை மற்றும் மத்திய தரக் குடும்பத்தினருக்கு அதிகமாக 2,000 ரூபாய் நோட்டு தேவை இருக்காது. அவர்களுக்கு 500 ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களே போதுமானது" என்றார் சந்திரசேகர் தாக்கூர்.

எவ்வாறு பணப்புழக்கம் குறைக்கப்பட்டது?

இரண்டாயிரம் ரூபாய்

பட மூலாதாரம், NURPHOTO

2000 ரூபாய் நோட்டு குறித்து அவ்வப்போது மத்திய நிதி அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து 2020ஆம் ஆண்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், " 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 329.10 கோடி ரூபாய் அளவிற்கான 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இதுவே 2020, மார்ச் மாதத்தில் 273.98 கோடி ரூபாயாக குறைந்துள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.

அதுவே சமீபத்தில் மக்கள் அவையில் பேசி இருந்த அனுராக் தாகூர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய 2000 ரூபாய் நோட்டு அச்சிடப்படவில்லை" என்று தெரிவித்து இருந்தார். இதன் மூலம், சிறிது சிறிதாக 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து குறைகிறது என்பது தெளிவாகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியும் 2020 ஆம் ஆண்டில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை தங்களது ஏடிஎம்களில் இருந்து நீக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் இருக்கும் 2.40 லட்சம் ஏடிஎம்களில் 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் அதிகரிக்கப்பட்டன.

முதலில் 2,000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, வங்கிகளிலும் இந்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து மறைந்தது. இது பற்றிய தெளிவுபடுத்திய மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும், "2,000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து தடை செய்யப்படவில்லை. பயன்பாடு குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அறிவித்தன.

ரூ. 2,000 நோட்டு பயன்பாடு ஏன் குறைந்தது?

இரண்டாயிரம் ரூபாய்

பட மூலாதாரம், Getty Images

2,000 ரூபாய் நோட்டின் பயன்பாட்டை ஏன் குறைக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

இந்த விஷயத்தில் உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதார வல்லுநர்களின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து குறைத்தால், நிதி முறைகேடுகளையும் பெரிய அளவில் தடுக்கலாம் என்பதுதான் ஒரே பெரிய தீர்வாக இருக்கும் என்பது இவர்களின் கருத்து. அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை புழக்கம் குறைந்தால், நிதி முறைகேடுகளும் குறையும்.

500 ரூபாய் நோட்டின் பயன்பாடு

மகாராஷ்டிரா மாநிலத்தில் அர்த்தகிராந்தி என்ற பெயரில் பொருளாதார இயக்கத்தை ஏற்படுத்தி இருந்த பொருளாதார வல்லுநர் அனில் போகில், தொடக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டை கைவிடுவதற்கு தனது பங்களிப்பை அளித்து வந்தார். இவரது இயக்கத்தில் பணியாற்றிய பிரசாந்த் தேஷ்பாண்டே என்பவர் பொருளாதார புரட்சி குறித்து பிபிசிக்கு பேட்டி அளித்தார்.

"நிதி முறைகேடுகளுக்கு எளிதாக பயன்படுத்தலாம் என்பதால், பொதுவாக அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை போலி நோட்டுக்களாக அச்சிடுகின்றனர். இந்தியாவை வந்தடைவதற்கு முன்பு போலி ரூபாய் நோட்டுக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கிறது. அனைத்து நிலைகளிலும் ஏஜெண்டுகள் தங்களுக்கான கமிஷனை எடுத்துக் கொள்கின்றனர்.

அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதுதான் அதிக லாபத்தைக் கொடுக்கும். இதுவேதான் போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சிடவும் பொருந்தும். இதுதான் எளிதான பொருளாதார கணக்கு. இந்த கொள்கையின் அடிப்படையில்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டை மத்திய அரசு குறைத்துக் கொண்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் நூறு டாலர்கள், நூறு பவுண்ட்களுக்கு அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை" என்றார் தேஷ்பாண்டே.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை முக்கியத்துவம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் முக்கியத்துவம் குறித்து சந்திரசேகர் தாகூர் கூறுகையில், "டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும்போது, அனைத்து விவரங்களும் பதிவாகிவிடும். இது நிதி முறைகேடுகளை குறைக்க உதவும். "டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும்போது, 2000 ரூபாய் நோட்டுகள் தேவையில்லை. மத்திய அரசு இந்த உண்மையை உணர்ந்துதான் சாதகமான முடிவை எடுத்துள்ளது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: