தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 26) தாக்கல் செய்தார். தென்மண்டலத்தில் அ.தி.மு.கவின் வாக்குவங்கி பாதிக்கப்படும் சூழலில், வடமாவட்டங்களில் முதல்வரின் அறிவிப்பை தாக்கத்தை ஏற்படுத்துமா?
இடஒதுக்கீடு போராட்டம்!
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சில வன்னிய சமுதாய அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. இதையொட்டி பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் நேரடியாக தலைமை தாங்கி போராட்டத்தை நடத்தினார். இருப்பினும் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல் செய்தார்.
`சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில மணித்துளிகளுக்கு முன்னால் இப்படியொரு அறிவிப்பு வெளியாகும்' என வன்னிய சமூக பிரதிநிதிகளே எதிர்பார்க்கவில்லை. எம்.பி.சி (வி) என்ற பிரிவின்கீழ் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நேற்று பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, ` மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் ஆய்வு செய்தார்.
உள்ஒதுக்கீடு ஏன்?
அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்கள் சமச்சீரான வளர்ச்சியைப் பெற்று முன்னேற்றுவதற்காகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு உரிய விகிதாசார வாய்ப்பினை பெறுவதற்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் சில குறிப்பிட்ட சாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு 7 சதவீதமும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சாதி பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் ஆகிய மூன்று உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு தற்போது பரிந்துரை செய்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான ஆணையத்தின் மேற்கண்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும், அதற்கிணங்க மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவினருக்கிடையே விகிதாச்சார அடிப்படையில் உள் ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது' என்றார்.

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER
நாம் தமிழர், ம.நீ.ம வாக்குகள்!
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6இல் நடக்கவுள்ள சூழலில், `அ.தி.மு.க அரசின் இந்த அறிவிப்பு வடமாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்' எனக் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் தரப்புக்கு முன்கூட்டியே சில தகவல்களை அவரது தேர்தல் ஆலோசகர்கள் அளித்துள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், `` வட மாவட்டங்களில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அவரிடம் அளிக்கப்பட்ட அறிக்கையிலும், `வட மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஓரளவு வாக்குகளைப் பிரிப்பார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் வடதமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறங்களில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் அவர்கள் பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை.
இழுபறி 30 சதவிகிதமா?
அதேநேரம், விழுப்புரம், கடலூர் பகுதிகளில் உள்ள வாக்குகளை நாம் தமிழர் கட்சியும் ம.நீ.மய்யமும் பிரித்தாலும் அதனால் பாதிப்பில்லை. அங்குள்ள வன்னிய சமூக வாக்குகளும் அ.தி.மு.க அணிக்கு வந்து சேரும். மேலும், கூட்டணியில் பா.ம.க இருப்பதால் 70 சதவிகித இடங்களில் வெற்றி பெற்றுவிடலாம். 20 முதல் 30 சதவிகித இடங்களில் தி.மு.கவோடு இழுபறி நீடிக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தி.மு.க கூட்டணியில் வி.சி.க இருப்பதால் தலித் சமூகங்களின் வாக்குகளும் பிற சமூகங்களின் அ.தி.மு.க அதிருப்தி வாக்குகளும் தி.மு.க அணிக்குப் போகும். இதனால் தனக்குப் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது எனவும் நம்புகிறார். தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை. அங்கு அ.ம.மு.க வாக்குகளைப் பிரிக்கும் சூழல் இருப்பதால் கொங்கு மண்டலத்தையும் வடதமிழ்நாட்டையும் மட்டுமே நம்பி முதல்வர் களமிறங்க உள்ளார்" என்கிறார்.
முதல்வரின் அறிவிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வன்னிய சத்திரியர் கூட்டியக்கத்தின் தலைவர் சி.ஆர்.ராஜன், `` இந்த அறிவிப்பால், மீண்டும் அ.தி.மு.கவே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் முழுப் பெருமையும் முதல்வருக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும்தான் போய்ச் சேர வேண்டும்" என்கிறார்.
மூன்று கோரிக்கைகள்!

பட மூலாதாரம், RAMADOSS TWITTER
தொடர்ந்து அவர் பேசுகையில், `` 2017 ஆம் ஆண்டு அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைப்பது, படையாட்சியார் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது, வன்னியர் உள்ஒதுக்கீடு அரசாணை 35/2012 ஆகியவற்றை நடைமுறைப்படுத்தப்படுவது எனத் தெரிவித்திருந்தோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று 2018 ஆம் ஆண்டு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தார்கள். படையாட்சியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார்கள். தற்போது கடைசி நேரத்தில் உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அ.தி.மு.க அரசின் பெரும் சாதனையாகப் பார்க்கிறோம். தற்போது வன்னிய சமூகத்தினர் 2 சதவிகிதம் பேர்தான் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் சமூகநீதி நிலைநாட்டுப்பட்டுள்ளது. இதன்மூலம் 120 தொகுதிளில் அ.தி.மு.க அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
எடப்பாடியின் சாதனையா?
`உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டதே?' என பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு மாநிலத் தலைவர் எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``பாட்டாளி மக்கள் கட்சியை எதற்காகத் தொடங்கினோமோ, அந்த இலக்கை எட்டவைத்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சற்று கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு, வடபுலத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். அ.தி.மு.க, பா.ம.க கூட்டணி தானாகவே வெற்றி பெறும்" என்கிறார்.
மேலும், `` கருணாநிதி நியமித்த சட்டநாதன் கமிஷன் 15 சதவிகித ஒதுக்கீட்டை கொடுக்கச் சொன்னது, எம்.ஜி.ஆர் அமைத்த அம்பாசங்கர் கமிஷன் 16 சதவிகித ஒதுக்கீட்டைக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. இவர்கள் இருவரும் செய்யாததை, எடப்பாடி செய்திருக்கிறார்" என்கிறார்.
தேர்தல் நேர நாடகம்!

பட மூலாதாரம், @mkstalin twitter page
`உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதால், வடமாவட்டங்களில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பு பாதிக்குமா?' என அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் பேசினோம்.
`` நிச்சயமாக எந்த பாதிப்பும் வரப் போவதில்லை. இது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம். இதன்மூலம் வடமாவட்டங்களில் வாக்குகள் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு மீதுள்ள வெறுப்புதான் வெளியில் வரும். கடைசி நேர அறிவிப்புகளால் மக்கள் மத்தியில் மாற்றம் வராது" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என இவர்கள் முடிவு செய்திருந்தால் எப்போதோ வழங்கியிருக்கலாம். பா.ம.கவின் நோக்கமும் உண்மையான இடஒதுக்கீடு இல்லை. அ.தி.மு.கவின் நோக்கமும் வழங்க வேண்டும் என்பதாக இல்லை. தேர்தல் நேர நாடகமாகத்தான் இதனை அரங்கேற்றியுள்ளனர். அ.தி.மு.க அரசு முன்னரே அறிவித்திருந்தால் நடைமுறையில் என்ன பலன் வந்து சேர்ந்தது எனத் தெரிந்திருக்கும். இந்த அறிவிப்பால் பலன் கிடைக்குமா என மக்களுக்குத் தற்போது தெரியாது. இதனால் வன்னியர் வாக்குகளும் அ.தி.மு.க அணிக்கு சென்று சேரப் போவதில்லை" என்கிறார்.
மேலும், `` 20 சதவிகித இடஒதுக்கீட்டை கலைஞர் அரசு கொடுத்தபோது, எங்கள் கட்சித் தலைவருக்கு அந்தப் பெருமையைக் கொடுக்காமல், `நாங்கள்தான் பெற்றுக் கொடுத்தோம்' என ராமதாஸ் பிரசாரம் செய்தார். இதன் காரணமாக வன்னிய மக்கள் முழுமையாக அவர் பக்கம் செல்லவில்லை. பல தேர்தல்களில் நாங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளோம். வன்னியர் சங்கமாக இருந்தபோது அவர்கள் போராட்ட களத்தில் இருந்தார்கள். அரசியல் கட்சியாக மாறிய பிறகு, ஒவ்வொரு தேர்தலுக்கும் பா.ம.க நடத்தும் நாடகங்களை மக்கள் பார்த்து வருகிறார். இதனால் தி.மு.கவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை," என்கிறார்.
முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, வடதமிழ்நாடு கை கொடுக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 அன்று தெரிந்து விடும்.
பிற செய்திகள்:
- பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
- மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்
- மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள்
- செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?
- தங்கம் விலை 35,000 ரூபாய்க்கு கீழ் சரிந்தது - அண்மைய நிலவரம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?
- "திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி
- ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












