தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: ஸ்டாலினை முதல்வராக்கும் உத்தி; திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?

ஸ்டாலினை முதல்வராக்கும் உத்தி; திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?

பட மூலாதாரம், Twitter/ Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் வெற்றிக்காகத் தேர்தல் வேலை பார்த்து வருகிறது `தேர்தல் வல்லுநர்' பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். தேர்தல் பிரசார கூட்டங்களில் ஐபேக் பிரதிநிதிகள் காட்டும் நெருக்கடியால் தி.மு.க நிர்வாகிகள் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம்: 1

அண்ணா அறிவாலயத்தில் பிரதானப் பொறுப்பில் இருக்கும் மூத்த நிர்வாகி அவர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் அவருக்கு ஓர் அழைப்பு.

``சார் வணக்கம்.. ஐபேக்ல இருந்து பேசறோம்.. உங்க தொகுதி எப்படியிருக்கு?"

``நல்லா இருக்கு. வேற என்ன வேணும்?"

``நேத்துகூட தலைவர் உங்களைப் பத்திப் பேசினார்.."

``அப்படியா..?"

``இந்தத் தேர்தல்ல..".

``ஏய் நிறுத்து.. யார் நீ?"

- எனக் கேட்டு கடுமையான வார்த்தைகளால் தி.மு.க சீனியர் சீறினார். `அய்யய்யோ.. இது சீனியர் குரல் மாதிரியில்ல இருக்கு' என அலறியடித்து விட்டு போனை ஆஃப் செய்து விட்டார் எதிர்முனையில் பேசிய மர்ம நபர்.

சம்பவம்: 2

சென்னை தெற்கு மாவட்டத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிக்கு வந்த அழைப்பு இது.

``சார் வணக்கம். ஐபேக்ல இருந்து பேசறோம். தொகுதிக்குள்ள உங்களுக்கு நல்ல நேம் இருக்கு"

``அப்படியா.. ரொம்ப நன்றி.."

``ஆமாம் சார்.. 3 பேர் லிஸ்ட்ல உங்க பேர்தான் மொதல்ல இருக்கு.."

``ரொம்ப சந்தோஷம். இருங்க லைன்ல வர்றேன்" எனக் கூறியபடியே, தலைமையின் கவனத்துக்கு மாவட்ட செயலாளர் மூலமாக விஷயத்தைக் கொண்டு சென்றார். இதனை எதிர்பாராத தி.மு.க தலைவர், `இவர்களை யார் விசாரித்தது?' என கோபத்தைக் காட்டியுள்ளார்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் உதாரணங்கள்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐபேக் என்ற பெயரில் உடன்பிறப்புகளுக்குப் போன் போட்டு கலங்கடித்து வருகிறது மர்ம கும்பல் ஒன்று. இதன் தொடர்ச்சியாக, ஐபேக்கின் பெயரைப் பயன்படுத்திய மூன்று பேரை கோவை மாவட்ட உடன்பிறப்புகள் வளைத்துப் பிடித்ததாகவும் தகவல் பரவியது. அண்மைக்காலமாக ட்ரூ காலரில் `ஐபேக்' என வந்தால் மட்டுமே தி.மு.க நிர்வாகிகள் அழைப்பை ஏற்பதாகவும் சொல்லப்படுகிறது.

பிரசாரத்தை முன்னெடுக்கும் மூவர் டீம்!

கனிமொழி

பட மூலாதாரம், KANIMOZHI

`` தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோரது பிரசாரப் பயணங்களை ஐபேக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில், ஸ்டாலினின் பிரசாரப் பயணங்களை ஐபேக் சார்பாக துஷ்யந்த் என்பவரும் கனிமொழியின் கூட்டங்களை பூஜா நாயர் என்பவரும் உதயநிதியின் பிரசாரப் பயணங்களை அருண்குமார் என்பவரும் வடிவமைத்து வருகின்றனர். `ஒவ்வொரு நாளும் என்ன பேச வேண்டும்?', `தொகுதிப் பிரச்னைகள் என்ன?' என்பதைப் பற்றியெல்லாம் ஐபேக் குழுவினர் ஆலோசனையைத் தெரிவிக்கின்றனர். அதில், உள்ள முக்கியமான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் பேசுகின்றனர்" என்கிறார் தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்,

தேர்தல்

பட மூலாதாரம், Udhanithi Stalin

ஐபேக்கின் செயல்பாடுகள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் விவரித்த அவர், `` தலைவர்களின் பிரசாரத்தில் ஐபேக் பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருவதால் மாவட்டம், ஒன்றியம், நகரக் கழக நிர்வாகிகளை ஐபேக் பிரதிநிதிகள் கண்டுகொள்வதில்லை. பிரசாரத்துக்குத் தலைவர்கள் வரும்போது 3 கி.மீ தூரம் வரையில் கொடி கட்ட வேண்டும், நான்காயிரம் பேரைக் கூட்டி வர வேண்டும் என்றெல்லாம் உத்தரவிடுகின்றனர். ஆனால், இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த பிறகு, `தலைவருக்கு அருகில் நிற்கக் கூடாது', `சால்வை கொடுக்கக் கூடாது', `புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டக் கூடாது' என ஐபேக் பிரதிநிதிகள் கண்டிப்புடன் கூறிவிடுகின்றனர். இதனால் நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளனர்" என்கிறார்.

யாருக்கெல்லாம் வலை?

ஸ்டாலின்

பட மூலாதாரம், STALIN TWITTER

தொடர்ந்து அவர் பேசுகையில், `` தேர்தல் பணிகளுக்காக தற்காலிக ஊழியராக நிறைய பேர் ஐபேக்கில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் தி.மு.க நிர்வாகிகளிடம் பணம் வசூல் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததால், ஐபேக் தலைமைக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பண வசூல் நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. ஆனால், ஐபேக் பெயரைச் சொல்லி கட்சியில் உள்ள ஒரு சிலரே போன் மூலம் பேசி வருவதைக் கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும், தேர்தலில் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் யார் என்பதை அறிந்து சிலர் தூண்டிலை வீசி வருகின்றனர். அவர்களிடம் சிலர் பணத்தைக் கொடுத்து ஏமாந்தது தொடர்பாகவும் புகார்கள் வருகின்றன. இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத சூழலே நிலவுகிறது. தலைமைக் கழகத்தில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரையில் இந்த மோசடியைத் தடுக்க முடியாது" என்கிறார் ஆதங்கத்துடன்.

ஐபேக்குடன் ஏன் மோதல்?

`` தி.மு.க தலைமை பங்கேற்கும் கூட்டங்களை எல்லாம் எங்களால் சிறப்பாக நடத்த முடிகிறது. ஆனால், சில மாவட்ட நிர்வாகிகளிடம் பெரிதாக எந்த ஒத்துழைப்பும் இல்லை. அங்கு எங்களால் களவேலை பார்க்க முடியவில்லை" என்கிறார் ஐபேக்கின் முக்கிய ஊழியர் ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் தொடர்ந்து பேசிய அவர், `` இப்போது எங்களின் பிரதான வேலை ஒன்றுதான். ஒவ்வொரு பெட்டிக்கடையாகச் சென்று, `ஸ்டாலின்தான் வரப் போறாரு. விடியல் தரப் போறாரு' என்ற பேனர்களை வைப்பதுதான். கொங்கு மண்டலத்தில் சில விஷயங்களை மையப்படுத்தி, பிரசாரத்தை முன்னெடுக்க முற்பட்டோம். ஆனால், அங்குள்ள நிர்வாகிகளோ, `எங்களுக்குத் தெரியும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் என்ன செய்துவிடப் போகிறீர்கள்?' எனக் கோபப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்தில், `அ.தி.மு.கவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக் கூட்டத்தைத் தவிர அங்கே வேறு எதையும் எங்களால் முன்னெடுக்க முடியவில்லை. வடசென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் எங்களால் நுழையவே முடியவில்லை. அங்குள்ள கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், தொடக்கத்தில் இருந்தே எங்களை அங்கே அனுமதிக்கவில்லை. தி.மு.க தலைமைக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கிறது. `உறுதியாக வெற்றி பெற்றுவிடுவோம்' என்ற நம்பிக்கையில் மாவட்ட நிர்வாகிகள் அலட்சிய மனப்பான்மையோடு நடந்து கொள்கின்றனர். இதுகுறித்து தி.மு.க தலைமையின் கவனத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்" என்கிறார்.

அதிருப்தி ஏன்?

ஸ்டாலின்

பட மூலாதாரம், Stalin FB

மேலும், `` ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் பிரசாரம் செய்யும்போது, சில நிர்வாகிகள் ஆர்வ மிகுதியில் புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். மக்களிடம் கட்சியின் திட்டங்களை எடுத்துச் சொல்வதற்காகத்தான் பிரசாரப் பயணங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

`எங்கே நிற்க வேண்டும்', `என்ன பேச வேண்டும்', `எந்தப் புகைப்படங்களை ஊடகங்களுக்கும் சோசியல் மீடியாக்களுக்கும் அனுப்ப வேண்டும்' என்பதில் கண்டிப்பான சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் சில மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சில சீனியர் நிர்வாகிகளும் எங்களின் பேச்சைக் கேட்பதில்லை. தேர்தல் பிரசாரப் பயணங்களின்போது எங்கள் செலவில்தான் ஓட்டலில் தங்குகிறோம். அங்குள்ள மாவட்ட நிர்வாகிகளை நாங்கள் எந்தவகையிலும் சிரமப்படுத்துவதில்லை" என்றார்.

புகார்களில் உண்மையில்லை!

ஐபேக் மீதான விமர்சனங்கள் குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``ஐபேக் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அவர்கள் அவர்களது வேலையைச் செய்கிறார்கள். எங்கள் கட்சி வேலைகளை நானும் பொதுச் செயலாளரும் பார்த்துக் கொள்கிறோம். தேர்தல் வேலைகளில் மட்டுமே ஐபேக் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இரண்டுக்கும் எந்தவிதத் தொடர்புகளும் கிடையாது" என்றார்.

இதையடுத்து, ஐபேக் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துஷ்யந்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எங்களுக்கென தனியாக மீடியா செல் உள்ளது. அவர்கள் அனுமதியில்லாமல் நாங்கள் யாரிடமும் பேசக் கூடாது. அவர்களிடம் பேசுங்கள்" என்றார்.

வருத்தங்கள் இருக்கலாம்! ஐபேக் விளக்கம்

பிரசாந்த் கிஷோர்

பட மூலாதாரம், Prasanth Kishor FB

தொடர்ந்து, ஐபேக்கின் உயரதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "தேர்தல் பிரசாரத்தைப் பொறுத்தவரையில் சிலவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். பிரசார மேடைகளில் தலைவர் படமும் பெரிய தலைவர்களின் படங்கள் மூன்றும் இடம்பெறுகின்றன. ஐபேக்கின் நோக்கம் பிரச்சனைகளை உருவாக்குவது அல்ல. தி.மு.க மாவட்ட செயலாளர்களின் வேலைகளை எல்லாம் எளிதாக்கி வருகிறோம். இன்று வரையில் 77 மாவட்ட செயலாளர்களும் எங்களோடு இணைந்து வேலை பார்க்கின்றனர்.

சில தொண்டர்கள், `போஸ்டர்களில் தங்கள் பெயர் வரவில்லையே' என ஆதங்கப்படலாம். அந்தப் போஸ்டர்கள் எல்லாம் சொல்ல வரும் விஷயத்தை மையப்படுத்துவதால் அதற்கான வாய்ப்புகளும் குறைவு. அதற்காக சிலருக்கு வருத்தங்கள் இருக்கலாம். எங்களுடைய குறிக்கோள் எல்லாம் தேர்தல் மட்டும்தான். மக்களை தி.மு.க தலைவர் அணுகுவதையும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறோம்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``கொரோனா காலத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர், கவுன்சிலர் என காணொலி மூலமாக தலைவர் நேரடியாகப் பேசினார். அப்படியொரு வாய்ப்பு பலருக்கும் கிடைத்தது. கட்சியின் நிர்வாகிகளை அவர் சந்தித்திருப்பார். ஆனால், அவர்களின் குடும்பத்தினரிடம் பேசக் கூடிய வாய்ப்பு இந்த முறை அமைந்தது. இதுபோன்ற நேரங்களில் ஐபேக்கின் உதவி பெரியளவில் இருந்தது. இன்றைய தேதியில் காலையில் ஒரு நிகழ்ச்சி, மாலையில் ஒரு நிகழ்ச்சி என நாளொன்றுக்கு எட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தேர்தல் களத்தில் இரவு பகலாக வேலை பார்ப்பது ஐபேக் டீம் மட்டும்தான். சில இடங்களில் சில பிரச்னைகள் வருகின்றன. தலைவர் அமர்ந்திருக்கும் மேடைக்கு வர வேண்டும், இடம் பிடிக்க வேண்டும் எனச் சிலர் நினைக்கின்றனர்.

தி.மு.கவுடன் மோதலா?

தலைவரோ, `மக்களைப் பார்க்க வேண்டும்' என்கிறார். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறோம். மேடையின் நுழைவுப் பாதையின் வழியாக தொகுதியில் உள்ள முக்கியமானவர்கள், சாதனையாளர்கள், கழக முன்னோடிகள் என வரிசைப்படி முன்னிறுத்துகிறோம். அப்படியும் வருத்தங்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' உள்பட பல நிகழ்வுகளில் தொண்டர்களைப் பார்த்துத் தலைவர் பேசும் நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தோம். சொல்லப்போனால், எங்களைப் பற்றி தி.மு.கவுக்குள் இருந்து வரும் குரல்களைவிட வெளியில் இருந்து வரக் கூடிய வதந்திகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஐபேக்குக்கும் தி.மு.கவுக்கும் சண்டை, இருவருக்கும் மோதல் என்றெல்லாம் தகவல் பரவுகிறது. காசு கொடுத்து கூட்டி வந்தவர்களுக்கு எங்களைப் பிடிக்காமல் போகுமா என்ன? நாங்கள் வேலை பார்க்கத்தானே வந்திருக்கிறோம்" என்கிறார்.

மேலும், ``ஒவ்வொரு கூட்டத்திலும் கோரிக்கை மனுக்களை வாங்கி தலைவருக்கு அனுப்பும் வரையில் வேலையைச் செய்து வருகிறோம். திருச்சியில் மாநாட்டை நடத்துவதிலும் மோதல் எனத் தகவல் பரப்பினார்கள். இதற்குப் பதில் கொடுத்த கே.என்.நேரு, `நான் ஏன் சண்டை போடப் போறேன்?' எனக் கேட்டார். மாநாடு நடக்கவுள்ள தேதியிலும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். என்ன தேதி என்பதையே நாங்கள் சொல்லவில்லை. திருச்சி மாநாடு ஓர் உதாரணம்தான். தேதி தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்தத் தகவல் வெளியே போய்விடுகிறது. அதுவே வதந்தியாகவும் மாறிவிடுகிறது" என்கிறார்.

`கோவையில் ஸ்டாலின் நடத்திய கூட்டத்துக்குப் பிறகு வேறு எந்த நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்க முடியவில்லை' என்கிறார்களே?

``அதெல்லாம் தவறான தகவல். கட்சி அலுவலகத்தில் இருந்துதான் மாவட்ட நிர்வாகிகளுக்குச் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நாங்கள் வருகிறோம் என்றாலே அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர். நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து நாங்கள் வெளியேதான் இருக்கிறோம். எங்களை மிகவும் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்கின்றனர்.

``வடசென்னைக்குள் உங்களால் நுழைய முடியவில்லை என்கிறார்களே?"

``எங்களால் அங்கே போக முடியவில்லை என்பது தவறான தகவல். எங்களுக்காக சேகர்பாபு முகமே சுழிக்காமல் உதவி செய்து வருகிறார். நாங்கள் கடுமையாக வேலை பார்ப்பது அ.தி.மு.க நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால், `அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்' பிரசாரம் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு கோடியே 6 லட்சம் பேர், தங்களின் சி.எம்மை வேண்டாம் என்கின்றனர். இதனால் அவர்களுக்கு பயம் வரத்தானே செய்யும். அவர்களுக்கும் டீம் இருக்கிறது. இதுபோன்ற பிரசாரத்தை அவர்களால் முன்னெடுக்க முடியவில்லை."

ஐபேக் பெயரைப் பயன்படுத்தி சிலர் தவறு செய்வதாகவும் தகவல் வருகிறதே?

``அதைப்பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. `ஒன்றிணைவோம் வா', `விடியும் வா', `முப்பெரும் விழா', `எல்லோரும் நம்முடன்', `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்', `அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்', `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனப் பல வகையான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் ஐபேக், தி.மு.க தொடர்பான குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மையில்லை."

பிறகு ஏன் இப்படிப்பட்ட தகவல்கள் பரவுகின்றன?

``தலைவரை, தொண்டர்களிடம் இருந்து தூரமாகக் கொண்டு செல்வதாகவும் தகவல் பரப்புகிறார்கள். அது உண்மையில்லை. மக்களோடு தலைவரை நெருங்க வைக்கும் வேலைகளைச் செய்கிறோம். விமர்சனங்களை சரிசெய்துவிட்டு பயணிக்கிறோம். ஐபேக் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் 200 சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறோம். அவர்கள் எல்லோரும் கட்சியில் மிக முக்கியமானவர்கள். அமைச்சர்களின் தொகுதிகளில் 22,000 முதல் 28,000 வரையில் புகார்கள் குவிந்துள்ளன. தி.மு.கவின் வெற்றியை குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டு வருகிறோம். எனவே, வதந்திகளை நாங்கள் பொருட்படுத்துவதில்லை."

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: