மும்பையில் பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர்

பேர குழந்தைகளுக்காக வீட்டை விற்று ஆட்டோவில் வாழும் முதியவர்

பட மூலாதாரம், Facebook/humansofbombay

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மும்பையில் பேர குழந்தைகளுக்காக வீட்டை விற்று ஆட்டோவில் தூங்கும் முதியவரின் சோக வாழ்க்கை மனம் நெருட செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஆட்டோ ஓட்டி வரும் முதியவர் தேஸ்ராஜுக்கு 2 மகன்கள் இருந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்ற 40 வயதுடைய இவரது மூத்த மகன் பின்னர் வீடு திரும்பவில்லை.

ஒரு வாரம் கழித்து மகனின் உயிரற்ற உடல் ஆட்டோவில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வயது முதிர்ந்த தேஸ்ராஜ் கூறும்பொழுது, அவனுடன் என்னுடைய ஒரு பாதி மரணித்து விட்டது. ஆனால், பொறுப்புகளை சுமக்க வேண்டியதிருந்தது.

துக்கத்திற்கான நேரம் கூட எனக்கு இல்லை. அடுத்த நாளே ஆட்டோ ஓட்டும் பணியை தொடர்ந்தேன் என கூறுகிறார். 2 ஆண்டுகள் கழித்து இவரது 2வது மகன் தற்கொலை செய்து விட்டார்.

அவரது மருமகள், 4 பேர குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு தேஸ்ராஜுக்கு வந்து விட்டது. 9ம் வகுப்பு படித்த பேத்தியின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டியுள்ளார்.

கிடைக்கும் வருவாயில் கல்வி செலவு போக சொற்ப தொகையை 7 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுக்கு வைத்துள்ளார்.

பல நாட்கள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாத சூழலை விவரித்த தேஸ்ராஜ், தனது பேத்தி 12ம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மகிழச்சியில் அன்று நாள் முழுவதும் அதனை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார்.

டெல்லிக்கு சென்று மேற்படிப்பு படிக்க செல்ல வேண்டும் என்ற பேத்தியின் விருப்பத்திற்காக வீட்டை விற்றுள்ளார். பின் அவரது மனைவி, மருமகள் மற்றும் பேர குழந்தைகளை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டுள்ளார்.

மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய அவர், அதிலேயே சாப்பிட்டு, தூங்கி வந்துள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக பேத்தி வந்ததில் தனது அனைத்து வலிகளும் மறைந்து விட்டன என பெருமையுடன் அவர் கூறுகிறார்.

எனது பேத்தி ஆசிரியராக வரும் நாள் தொலைவில் இல்லை. அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி வழங்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இவரது நிலை பற்றி சமூக ஊடகங்கள் வழியே பலருக்கும் தெரியவந்து உதவி செய்ய முன்வந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களால் 5.3 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது. வாழ்க்கையின் ஒரு பகுதி சோக நிகழ்வுடன் சென்றபோதிலும், தனது பேர குழந்தைகளின் வருங்காலத்திற்காக ஆட்டோ ஓட்டும் பணியை தொடர்கிறார் இந்த முதியவர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தமிழகத்தில் இரண்டாம் முறை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழகத்தில் இரண்டாம் முறை கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கப்பட உள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு முதல்கட்டமாக மத்திய அரசு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 'டோஸ்' 'கோவிஷீல்டு' தடுப்பூசி, 20,000 'கோவேக்ஸின்' தடுப்பூசி வழங்கியது. இதைத்தொடந்து 2-ஆம் கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 'கோவிஷீல்டு' தடுப்பூசி என மொத்தம் 10 லட்சத்து 65 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசிகளை வழங்கியது. இந்த தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு போடும் பணி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து வருகிறது.

முதல் முறை கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டாம் முறை அதே தடுப்பூசி போட வேண்டும். அந்த வகையில் சனிக்கிழமை தமிழகத்தில் இரண்டாம் முறை கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி 615 மையங்களில் நடைபெறும் எனவும், 'கோவின்' செயலி மூலம் பயனாளிகளுக்கு குறுந்தகவல் மூலம் தடுப்பூசி போடும் நேரம் தெரிவிக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

Presentational grey line

"பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு இன்றுடன் முடிகிறது"

"பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு இன்றுடன் முடிகிறது"

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிவதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"வழக்கமாக மாலை தொடங்கும் மக்களவை, இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கிறார்.

மாநிலங்களவை 2 நாள் முன்பாக அதாவது 15-ம் தேதி முடிவதற்கு பதிலாக நேற்று(12ம்தேதி) முடித்துக்கொள்ளப்பட்டது. மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்தார். மாநிலங்களவையின் அடுத்த அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கும்

மக்களவை வழக்கமாக மாலை 4 மணிக்கு தொடங்கும். ஆனால், இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார். இன்று காலை தொடங்கும் மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். இன்றைய கூட்டம் மாலையில் முடிந்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்துவிடும்.அதன்பின் மார்ச் 8-ம் தேதி 2-வது அமர்வு கூடும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: