ராகுல் காந்தி: "பிரதமர் மோதி ஒரு கோழை, சீனாவை எதிர்க்க துணிவில்லாதவர்"

பட மூலாதாரம், AICC
இந்திய பிராந்தியத்தை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற முடியாமலும் சீனாவை எதிர்க்க துணிவில்லாமலும் உள்ள பிரதமர் நரேந்திர மோதி ஒரு கோழை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா, சீனா எல்லையில் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாகவும் கிழக்கு லடாக்கில் உள்ள கள நிலவரம் தொடர்பாகவும் இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை பேசினார்.
அப்போது, இந்திய பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு நிலவரம், கிழக்கு லடாக் பகுதியில் சீன படையினர் எந்த அளவுக்கு நுழைந்துள்ளனர், எல்லை கடந்த படை குவிப்பை விலக்கிக் கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் போன்றவற்றை ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.
இது குறித்து கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டி, அரசின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
"ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தில் லடாக்கில் ஃபிங்கர் 4 என்ற பகுதியில் இருந்த படையினர் ஃபிங்கர் 3 என்ற பகுதிக்கு திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டதாக கூறியிருக்கிறார். இரண்டு முனைகளுமே இந்திய பிராந்தியம்தான். ஆனால், ஏன் படைகளை மேலும் பின்னோக்கி திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டது?" என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
"இந்த நாட்டின் பிரதமர் சீனாவுக்கு எதிராக நிற்கத் துணிவில்லாதவராக இருக்கிறார். இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை ஏமாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். இந்தியாவில் உள்ள வேறு எவரும் இப்படி செய்வதை அனுமதிக்கக்கூடாது."
இந்தியாவின் ஒருங்கிணைந்த பிராந்தியத்தை பாதுகாப்பது ஒரு நாட்டுப் பிரதமரின் கடமை. இதை அவரது பிரச்னை என்று என்னால் எப்படி விட்டு விட முடியும்? என்று ராகுல் குறிப்பிட்டார்.
பாங்கோங் ஏரியில் உள்ள கள நிலைமையை நாடாளுமன்றத்தில் விவரித்த பாதுகாப்பு அமைச்சர், இந்திய பிராந்தியத்துக்கு வர டெப்சாங் சமவெளி பகுதியை சீன படையினர் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அங்கு நுழைய எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்? இதை எவ்வாறு இந்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்காமல் தவிர்த்தார்? என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.
நடந்த விஷயத்தை பார்க்கும்போது, சீனாவிடம் நமது நிலத்தை இந்தியா கொடுத்திருப்பது தெளிவாகிறது. இந்திய பிராந்தியத்தை சீனாவுக்கு எப்படி விட்டுக்கொடுத்தனர் என்பதை இந்திய பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் விளக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இந்திய உள்துறை இணை அமைச்சர் பதில்
ராகுல் காந்தியின் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டியிடம் கேட்டதற்கு, "இந்திய பிராந்தியத்தை சீனாவிடம் யார் கொடுத்தார்கள் என்பதை ராகுல் காந்தி அவரது தாத்தா நேருவிடம்தான் கேட்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு பதில் கிடைக்கும்," என்று கூறினார்.
இந்த தேசத்தில் யார் தேச பக்தர், யார் அப்படி கிடையாது என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், "ராகுலின் விமர்சனம் முதிர்ச்சியற்றதாகவும் தவறானதாகவும் உள்ளது," என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:
- பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2021க்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
- சீனாவின் சூப்பர் ராணுவ வீரர்கள்: தகவலும், உண்மை நிலையும்
- சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் - எடப்பாடிக்கு நெருக்கடியா? அதிமுகவில் அடுத்தது என்ன?
- பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை - என்ன நடந்தது?
- Proposeday: காதலை சொல்லும் முன் அது மறுக்கப்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
- லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' தமிழர்களின் கண்டம் உண்மையில் இருந்ததா?
- இந்தியா-சீனா எல்லை: "ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தர மாட்டோம்"
- விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












