கோவை ஷப்ரினா: "பசிக்கிறதா... சாப்பிடுங்க..." - ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்

ஷப்ரினா
    • எழுதியவர், மு.ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய் பிரியாணி கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் இருபது ரூபாய்க்கு பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாக பிரியாணி பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.

மதிய வேளையில், சாலையோரத்தில் இரு குடைகளுக்கு கீழ் அமைந்திருந்த பிரியாணி கடையில் பரபரப்பாக இயங்கி வந்த ஷப்ரினாவை நேரில் சந்தித்தோம்.

சூடான பிரியாணியை ஷப்ரினா தட்டில் எடுத்து வைக்க, அவரது கணவர் வாழை இலையில் பார்சல் கட்டிக்கொண்டே இருந்தார். இருபது ரூபாய் பிரியாணியை ருசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ஒருபுறம் வாடிக்கையாளர்கள் பார்சலை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்துச் செல்கின்றனர். மற்றொருபுறம் 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க' என எழுதப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்பட்ட பிரியாணி பொட்டலங்களை பலர் எடுத்துச் செல்கின்றனர். இலவச பெட்டியில் பொட்டலங்கள் தீர்ந்ததை கவனித்த ஷப்ரினா, விறுவிறுவென்று சில பொட்டலங்களை கட்டி மீண்டும் பெட்டியில் வைத்துச் செல்கிறார்.

பிரியாணி தீர்ந்தும் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருந்தனர். வாழ்வாதாரத்திற்கான தொழிலையும், இலவசமாக பசியாற்றும் மனிதசேவையையும் சிறப்பாக செய்துவரும் ஷப்ரினாவிடம் பேசினோம்.

`அதிக விலையில் உணவு வழங்குவதில் விருப்பமில்லை`

"நான், எனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என குடும்பமாக கோவையில் வசித்து வருகிறோம். எனது பூர்வீகம் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை. அங்கு தான் பிறந்து வளர்ந்தேன். உளவியல்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். நான்கு ஆண்டுகளுக்கு முன், எனது கணவர் வேலைக்காக கோவைக்கு மாற்றப்பட்டார். அப்போது தான் நாங்களும் இங்கு குடிபெயர்ந்தோம். கடந்த நவம்பர் மாதம், தனியார் நிறுவனம் ஒன்றில் நான் செய்த வேலையை கைவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன். எனது கணவரும் உணவகம் சார்ந்த வேலையில் இருப்பதால் சாலையோர பிரியாணி கடை துவங்கலாம் என முடிவு செய்தோம். அதிக விலைக்கு உணவு வழங்குவதில் எனக்கு விருப்பமில்லை. ருசியில் சமரசம் செய்யாமல், தரமான உணவுப் பொருட்களை கொண்டு, குறைந்த லாபத்தை நிர்ணயித்து வெறும் இருபது ரூபாய்க்கு பிரியாணி பொட்டலங்களை விற்கத் துவங்கினோம். ஏராளமான எளிய மக்கள் பலர் இன்று எங்களின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்," என தெரிவிக்கிறார் ஷப்ரினா.

காலை சுமார் 11 மணியளவில் இவரது பிரியாணியை வாங்க பலர் வரத்தொடங்குகின்றனர். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மொத்த பிரியாணியும் தீர்ந்துவிடுகிறது.

ஷப்ரினா

ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்து வரும் ரமேஷ் இங்கு தான் தினமும் மதிய உணவு சாப்பிடுவதாக கூறுகிறார். மேலும், மிகக்குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் உழைத்த பணத்தில் ஒரு தொகையை மிச்சப்படுத்த முடிவதாகவும் இவர் தெரிவிக்கிறார். இவரைப்போலவே தினக்கூலி வேலை செய்பவர்கள், அருகில் கட்டட வேலை செய்பவர்கள், ஆட்டோர் ஓட்டுநர்கள் ஆகியோர் இங்கு தான் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.

`மன நிம்மதி போதும்`

"பாஸ்மதி அரிசியில் தான் பிரியாணி செய்கிறோம். செயற்கை சுவையூட்டிகள், கெமிக்கல் நிறங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதில்லை. என்னால் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் இருபது ரூபாய் விலையில் பிரியாணி விற்கலாம். ஆனால், எவ்வளவு லாபம் கிடைக்க வேண்டும் என நிர்ணயிப்பதில் தான் விலை ஏற்றமும் அடங்கியிருக்கிறது. எனக்கு அதிக லாபம் வேண்டாம், எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவளித்தோம் என்ற மனநிம்மதி தான் தேவை" என்கிறார் ஷப்ரினா.

இலவசமாக உணவு வழங்கவேண்டும் என்ற எண்ணம் தனது தந்தையின் வழியில் தனக்கு வந்ததாக கூறுகிறார் இவர்.

பிரியாணி கடை

"எனது தந்தை அதிகமாக தானம் செய்பவர். தனக்கு இருக்கிறதா என பார்க்காமல், யார் என்றும் கேட்காமல் உதவி செய்யும் பழக்கம் உடையவர். அவரின் அந்த குணத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். அதையே நானும் கடைபிடிக்க வேண்டும் என முடிவுசெய்து இலவச உணவு வழங்கத்துவங்கினேன். கடந்த 3 வாரங்களாக, கடையின் முன்பு ஒரு பெட்டியை வைத்து அதில் பிரியாணி பொட்டலங்களை வைத்துவிடுவோம். பெட்டியின் மேல், 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதி வைத்துள்ளேன். ஆரம்பத்தில் இதை சிலர் விநோதமாக பார்த்தனர். ஆனால், பசியில் வாடும் ஆதரவற்றோர் சிலர் பொட்டலங்களை எடுத்துச் சென்றனர். ஏழை எளியோர் மட்டுமின்றி பணம் கொடுத்து வாங்கும் வசதியுள்ளவர்களும், இலவச பிரியாணி பொட்டலங்களை எடுத்துச் செல்கின்றனர். நாங்கள் அவர்களை தடுப்பதில்லை. கையில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் பசி வந்தால் எனது கடைக்கு யாரும் வரலாம். உணவு தயாராக இருக்கும்," என பெருமிதத்தோடு கூறுகிறார் ஷப்ரினா.

பிரியாணி கடை

"இலவச பெட்டியில் பொட்டலங்கள் தீர்ந்ததும் மீண்டும் நிரப்பிவிடுவோம். இப்போது, தினமும் சுமார் நாற்பது பிரியாணி பொட்டலங்களை இலவசமாக வழங்க முடிகிறது. தினமும் 100 பேருக்கு இலவச உணவு வழங்கவேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால், அதற்கான பொருளாதார நிலையை நாங்கள் இன்னும் அடையவில்லை."

`சேர்த்து வைக்க ஆசையில்லை`

"உலகில் மிகவும் கொடுமையானது கையில் பணமில்லாமல், பசியோடு இருப்பது. நம் கண்முன் ஏராளமானோர் அந்த நிலையில் தான் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், நாம் முதலில் சம்பாதித்து, சேமித்து கொள்வோம் பின்னர் தானம் செய்வோம் என நினைத்து ஒதுங்கிவிடுவர். எனக்கு அந்த எண்ணம் இல்லை. இன்று இருப்பதை வைத்து இப்போதே உதவ வேண்டும் என நான் நினைக்கிறேன். பெரிதாக எதையும் சேர்த்துவைக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்ததில்லை. மற்றவர்களின் பசியைப் போக்குவது ஒவ்வொருவரின் கடமை என நான் கருதுகிறேன். என்னைப்போல் உதவ நினைப்பவர்கள் அந்தந்தப் பகுதியில் இருந்துகொண்டே, இருக்கும் வசதியில் உதவிகளை செய்யத்தொடங்கலாம்" என அன்போடு புன்னகைக்கிறார் ஷப்ரினா.

'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என ஷப்ரினாவின் கையால் எழுதப்பட்டிருக்கும் இலவச உணவு பெட்டியில், பிரியாணி பொட்டலங்கள் மட்டுமல்ல மனிதநேயமும் நிறைந்துகொண்டே இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: