"ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைத் திறக்கத் தடையில்லை; பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஜெ. தீபா, ஜெ. தீபக் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்ற வீட்டில் வசித்துவந்தார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்துவிட்ட நிலையில் அந்த வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கான அறிவிப்பு 2017ல் வெளியிடப்பட்டது.
இதற்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையம் மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நினைவு இல்லம் அமைப்பதற்கான அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிறகு நினைவில்லமாக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துமுடிந்த நிலையில், நினைவில்லம் ஜனவரி 28ஆம் தேதியன்று - வியாழக்கிழமை - திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரசின் இந்த முடிவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக்கும் மகள் ஜெ. தீபாவும் இரு வழக்குகளைத் தொடர்ந்தனர். நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து ஒரு வழக்கும் இழப்பீடு வழங்கியது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது.
நாளை வேதா நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தாங்கள் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வேதா நிலையத்தைத் திறக்க அனுமதிக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு வேண்டி, இருவரும் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இல்லத்தைத் திறப்பது ஏன் என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
வேதா நிலையத்தில் இருந்த ஜெயலிதாவுக்குச் சொந்தமான கார்கள் குறித்து ஜெ. தீபக்கின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. வேதா நிலையத்தில் தங்களுடைய பாட்டி சந்தியாவுக்குச் சொந்தமான பொருட்களும் இருந்த நிலையில், அரசு ஒரு தலைப்பட்சமாக எல்லாப் பொருட்களையும் கையகப்படுத்த முடியாது எனவும் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் வாதாடிய விஜய நாராயணன், கார்கள் குறித்து ஏதும் தெரியாது என்றும் கட்டடத்திற்கு புதிதாக வண்ணம் பூசி, தோட்டத்தை ஒழுங்குபடுத்தியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லையென்றும் இந்த இல்லத்தை பொதுமக்களுக்குத் திறப்பதால் எந்த பாதிப்பும் இல்லையென்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படுமென உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி வழங்கப்பட்ட தீர்ப்பில், வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றி திறப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை.

ஆனால், இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த திறப்பு விழாவிற்கென எந்தவிதமான ஃப்ளக்ஸ் போர்டுகளையும் வைக்கக்கூடாது என்றும் காம்பவுன்ட் கதவைத் திறந்து திறப்பு விழாவை நடத்திவிட்ட பிறகு யாரும் வீட்டிற்குள் செல்லக்கூடாது என்றும் சாவியை உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் அளித்துவிட வேண்டுமென்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- ஜெயலலிதா நினைவிடம்: எதற்கு எவ்வளவு பணம்? சிறப்புகள் என்னென்ன?
- சீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; என்கவுன்டரில் ஒருவர் பலி
- குடியரசு நாள் வன்முறை: போராடும் விவசாயிகளுக்கு இனி வரும் சவால்கள்
- சசிகலா சிறையிலிருந்து விடுதலை: கொரோனா சிகிச்சை பெங்களூரில் தொடரும்
- ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய்: குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












