நாடாளுமன்ற புதிய கட்டடம்: மோதி அரசு ஏன் அவசரம் காட்டுகிறது? விதிகளை புறக்கணித்ததாக எழும் குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

பட மூலாதாரம், TWITTER/OM BIRLA

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய அரசின் யோசனை கூறப்பட்டுள்ள மத்திய விஸ்டா திட்டம் குறித்து கூடுதல் தகவல்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான கேள்விகளின் பட்டியலும் நீண்டு வருகிறது.

மத்திய டெல்லிக்கு புதிய தோற்றத்தை அளிக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விவாதத்தின் விஷயம் ஒன்றுதான் - குடியரசு தலைவர் மாளிகைக்கும் இந்தியா கேட்டுக்கும் இடையில் ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடம் உட்பட பல கட்டிடங்களை கட்டும் திட்டம், சரியா அல்லது தவறா?

தற்போதைய 'சென்ட்ரல் விஸ்டா' ஒரு வரலாற்றுப் பகுதியாகும். இதைப்பார்க்க மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள், அழகுடன் கூடவே இந்தியாவின் அதிகாரத்தின் மையமாகவும் இது திகழ்கிறது.

இந்த திட்டத்தின் கீழ், சுதந்திரத்திற்கு முன்பான பல கட்டிடங்களை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளன.

மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்குவதில் ஆரம்பமாகும். கட்டுமானத்திற்கு சுமார் 971 கோடி ரூபாய் செலவுபிடிக்கும்.

இருப்பினும், நாடாளுமன்றதில் இடத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இது முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், மக்களவை சபாநாயகராக மீரா குமார் இருந்த காலத்திலும் விவாதிக்கப்பட்டது.

சமீபகாலமாக இதுகுறித்த அதிகம் பேசப்படாத சூழ்நிலையில், 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பின் சில மாதங்களிலேயே இதுகுறித்த அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டபோது, ​​பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

உண்மையில், மத்திய விஸ்டா என்பது ராஜ் பத்தின் இருபுறமும் உள்ள பகுதி என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்தியா கேட், குடியரசு தலைவர் மாளிகைக்கு அருகிலுள்ள பிரின்சஸ் பூங்காவின் பகுதியும் அடங்கும்.

குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், செளத் பிளாக், குடியரசு துணை தலைவர் இல்லம் ஆகியவை மத்திய விஸ்டாவின் கீழ் உள்ளன.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் என்ன சிறப்புகள் இருக்கும்?

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

தற்போதுள்ள மத்திய விஸ்டாவில் தேசிய அருங்காட்சியகம், தேசிய ஆவண காப்பகத்தின் பிரமாண்டமான கட்டடம், இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐ.ஜி.என்.சி.ஏ), உத்யோக் பவன், பிகானேர் ஹவுஸ், ஹைதராபாத் ஹவுஸ், நிர்மாண் பவன், ஜவஹர் பவன் ஆகியவை அடங்கும். மேலும் இந்த கட்டடங்கள் அனைத்தும் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தின் மொத்த செலவு 14,000 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதில் 1200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் ஒன்றாக பணியாற்ற முடியும்.

"இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் இந்தத் தருணத்தில், ​​அந்த விழாவின் உத்வேகமாக நமது நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் இருக்க வேண்டும். இதைவிட அழகான, புனிதமான தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. காலம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சி இது," என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

எழுப்பப்படும் கேள்விகள்

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற வளாகம் 2024ஆம் ஆண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா? அனைவரின் கருத்துகளையும் வழிமுறைகளையும் உள்ளடக்குவதாக அரசு உச்சநீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை உருவாக்குவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை 'அடாவடித்தனம்' என்று உச்ச நீதிமன்றம் விவரித்துள்ளது.

"இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் முறையை பார்க்கும்போது இது அனைத்து செயல்முறைகளையும் அமைப்புகளையும் புறக்கணிப்பதுபோல தோன்றுகிறது," என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய விஸ்டாவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள ஒரு மனுதாரரும் மூத்த கட்டடக் கலைஞருமான நாராயண மூர்த்தி கூறுகிறார்.

"நாம் ஒரு இடத்தில் எவ்வளவு கட்ட முடியும் என்று தீர்மானிக்க எனக்கும் உங்களுக்கும், ஒரு எஃப்.ஏ.ஆர் (Floor area Ratio) உள்ளது. நாம் பத்து சதுர மீட்டருக்கு மேல் கட்டினால் அது அனுமதிக்கப்படாது. எம்.சி.டி (டெல்லி மாநகராட்சி) குழு வந்து அதை உடைக்கிறது. ஆனால், அனுமதிக்கப்பட்ட உயரத்தைக்காட்டிலும் ஒன்றரை மடங்கு மற்றும் எஃப்.ஏ.ஆரில் அனுமதிக்கப்பட்டதை விட ஒன்றரை மடங்கு அதிகமாக அரசு கட்டும்போது, நாடு இதிலிருந்து என்ன பாடம் கற்கும்? அதிகாரம் யாரிடம் உள்ளதோ அவர்களுக்குத்தான் எல்லாமே கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தமா? "என்று அவர் வினவுகிறார்.

தேவை, செலவு, அரசு அனுமதிகள் மற்றும் முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பு குறித்து கருத்துகள் மாறுபடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்னர் இதுபோல நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

"நவீன இந்தியாவில் பெரும்பாலான திட்டங்கள் போட்டியின் மூலமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தப் போட்டி தேசிய அளவில் இருந்தாலும் சரி, சர்வதேச அளவில் இருந்தாலும் சரி," என்று நவீன வரலாற்றாசிரியரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான மிருதுளா முகர்ஜி கருதுகிறார்.

"ஐ.ஜி.என்.சி.ஏ (இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம்) அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி அவற்றை கட்டுவதில் மக்கள், கலைஞர்கள் அல்லது கட்டட வடிவமைப்பாளர்கள் அனைவருமே ஈடுபட்டிருந்தனர். ஆனால் இப்போது அரசு அல்லது அதிகார வர்க்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். நாடாளுமன்ற கட்டடத்தை எடுத்துக்கொண்டால், நாடாளுமன்றத்தில் நேரத்தை செலவிட்டவர்கள் அல்லது செலவிடுபவர்களின் கருத்துகள் எங்குமே காணப்படவில்லை. இப்போது ​​மக்களுக்கு நல்லது என்று தான் நினைப்பதை எந்தவிதமான கலந்துரையாடல்களும் இல்லாமல் அரசு செய்துவிடுகிறது என்று நான் கருதுகிறேன்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

அரசு என்ன சொல்கிறது?

அதே நேரத்தில், மத்திய விஸ்டாவை நவீனமயமாக்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும், மேலும் புதிய கட்டடங்கள் மிகவும் வலுவானதாகவும், பூகம்பத்தை சமாளிக்கும் வகையிலும் இருப்பதால் இந்த திட்டம் 'தேசிய நலனில்' இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

இந்தப் பசுமையான மற்றும் திறந்த பகுதியில் அதிக கட்டடங்களை கட்டுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள அரசு, அதில் அதிக பசுமையை கொண்டுவரப் போவதாக கூறுகிறது. ஆனால் சுற்றுச்சூழல் குறித்தே அதிகமான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

"யோசனை கூறப்பட்டுள்ள கட்டடங்கள், சட்டத்தின் உதவியுடன் முழு திட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரம் இது முழு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது அரசின் செய்திக்குறிப்பில் தெளிவாக உள்ளது," என்று டெல்லியின் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் காஞ்சி கோலி தெரிவிக்கிறார்.

"முழு சுற்றுச்சூழல் ஒப்புதல் செயல்முறையும் தனித்தனி நிலம், தனித்தனி கட்டடம் என்ற முறையில் செய்யப்பட்டுள்ளது. முதலில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்காக முழு திட்டத்தையும் உடைத்து ஒப்புதல் பெறப்பட்டது. இது ஒரு விதிவிலக்கு திட்டம் என்பதால் சுற்றுச்சூழல் மதிப்பீடு தேவையில்லை என்றும் கூறப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.

தற்போது இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையின் கீழ் உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட அரசுக்கு அனுமதி அளித்த அதே நேரம், தற்போதைக்கு எந்தவொரு இடிப்பு அல்லது புதிய பணிகளையும் துவக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

தற்போதுள்ள மத்திய விஸ்டாவின் அடித்தளம் டெல்லி பல பேரரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்தது என்பதற்கு வரலாறு சாட்சியமளிக்கிறது. இதில் கட்டுமான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டன. இந்தப் போக்கு சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தொடர்ந்தது. இதில் நகரத்தின் வடிவம் மாறியது மற்றும் பிரபலமான கட்டடங்கள் கட்டப்பட்டன.

நாட்டின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படும் என்று பிரிட்டனின் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் 1911இல் அறிவித்தபோது, தற்போதைய மத்திய விஸ்டாவின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

நகர திட்டமிடல் குழுவில் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான எட்வின் லூடியன்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் டெல்லியின் ஷாஜகானாபாத் பகுதியில் தலைநகரம் கட்டப்படும் என்ற குழுவின் ஆரம்ப முடிவை ரத்து செய்தனர். ரைசினா ஹில் என்ற குன்றுப்பகுதி, தலைநகரை அமைக்க தேர்வு செய்யப்பட்டது.

இதற்கு முன்னரும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அது அரசுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் இடையில் இல்லை.

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

சென்ட்ரல் விஸ்டாவை வடிவமைத்த நண்பர்களான லூடியன்ஸ் மற்றும் பேக்கர், குடியரசு தலைவர் மாளிகை, வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளின் உயரம் குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்களின் ஆழ்ந்த நட்பில் கசப்பு ஏற்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

நடப்பு விஷயத்தில் அரசில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது போலத்தெரியவில்லை. ஆனால் அரசின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளின் பேரில் பல குடிமக்கள் குழுக்களும், பொது மக்களும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கால விஸ்டாவுடன் இப்போது திட்டமிடப்பட்டுள்ள மத்திய விஸ்டாவை ஒப்பிட முடியுமா?

"அவர்களது ஆலோசனை செயல்முறை அரசாங்கத்திற்குள் இருந்தது. நிச்சயமாக அவர்கள் இந்திய தேசியவாதிகளை கலந்தாலோசிக்கவில்லை. பொதுமக்களுடன் ஆலோசனை கலக்கும் பேச்சுக்கே இடமில்லை," என்று இதற்கு பதிலளிக்கும் விதமாக நவீன வரலாற்றாசிரியரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான மிருதுளா முகர்ஜி தெரிவித்தார்.

"20 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் இந்தியர்கள் அரசில் பங்கேற்கவில்லை. 1930க்குப் பிறகுதான் பங்கேற்பு வளர்ந்தது. ஆனால் இப்போது இதுபோன்ற சூழ்நிலை எதுவும் இல்லை. இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அதன் செயல்முறை வேறுவிதமாக இருந்திருக்க வேண்டும். வல்லுநர்கள், கட்டட கலைஞர்கள், குடிமக்கள் அல்லது சில அரசியல் குழுக்கள் இந்த செயல்முறைக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தால், அதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று எனக்குப் புரியவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

தேசிய போர் நினைவுச்சின்னத்தில் சர்ச்சை இல்லை

இந்த பகுதி கட்டப்பட்டபோது, ​​ பிரிட்டிஷ் அரசின் ஆட்சி 1947இல் முடிவுக்கு வந்திருந்தது. இந்தியாவின் அடையாளம் என்று அழைக்கப்படும் இந்த கட்டடங்களை புனரமைக்கும் முடிவு இப்போது நாட்டின் ஜனநாயக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

"திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், நகரத்தின் மையத்தில் இருக்கும் இந்த இடம், பொது மக்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் நினைத்தார்கள்," என்று மத்திய விஸ்டாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ள மனுதாரரும் மூத்த கட்டிடக் கலைஞருமான நாராயண மூர்த்தி தெரிவிக்கிறார்.

"லூடியன்ஸின் மாஸ்டர் பிளானில் இருந்ததுதான் இன்று கட்டப்படவிருக்கிறது. அலுவலகங்களுக்கென பத்து பெரிய கட்டிடங்கள் அதில் இருந்தன. அதே நேரத்தில் நம் நாட்டின் மாஸ்டர் பிளானர்கள் அதைத் தடுத்து, குடியரசு தலைவர் மாளிகை, சாஸ்திரி பவன் மற்றும் நிர்மாண் பவன் போன்ற நான்கு ஐந்து கட்டடங்கள் தவிர இந்தியா கேட்டைச் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பெயரில் ஆக்கினர்," என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் , டெல்லியின் தேசிய போர் நினைவுச்சின்னம் இதற்கு மாற்றான ஒரு எடுத்துக்காட்டாகும்.

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

இதை உருவாக்குவதற்கான கோரிக்கை 1960 முதலே இருந்து வருகிறது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோதியின் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது கட்டுமான முடிவு வெளிவந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கட்டட கலைஞர்கள் தங்கள் மாதிரிகளுடன், இதற்கான உலகளாவிய வடிவமைப்பு டெண்டர்களில் பங்குபெற்றனர்.

அதன் உருவாக்கத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய விஸ்டா திட்டத்தில் நிலவும் சர்ச்சை அதில் இருக்கவில்லை.

"மத்திய விஸ்டாவின் பகுதியானது டெல்லி மட்டுமல்ல, முழு நாட்டின் பாரம்பரியம். எனவே நாட்டின் பாரம்பரியத்தைப் பற்றி நாம் தீர்மானிக்கும்போது, ​​ஏன் பொதுமக்களின் கருத்துக்ளை கேட்கக்கூடாது? ஏன் பொதுமக்களை ஈடுபடுத்தக்கூடாது? முதலில், திட்டம் என்னவென்று தெளிவாக கூறுங்கள், அதில் பொதுமக்களின் உள்ளீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஆக்கபூர்வமான யோசனைகள் வெளிவரும். நாம் ஒன்றாக சேர்ந்து சிந்திப்பதன் மூலம் இந்த இடத்தை உருவாக்கியுள்ளோம் என்ற உணர்வு மக்களுக்கு கிடைக்கும்," என்று சுற்றுச்சூழல் நிபுணர் காஞ்சி கோலி குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :