ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்: மருத்துவர்கள் விதித்த கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 25-ம் தேதி உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பட மூலாதாரம், Apollo Hospitals
அவரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையில் அவருக்கு 1 வாரம் முழுமையான ஓய்வு தேவை, உடல் சார்ந்த நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருக்கவேண்டும், மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று வாய்ப்பை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை முழுவிவரம்:
"கடுமையான ரத்தக் கொதிப்பு, சோர்வு பாதித்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஒரு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. அவரது ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு மிகவும் பரவாயில்லை. உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்திய அவரது உடல் நிலைமை, எளிதில் அதிகரிக்கும் ரத்தக்கொதிப்பு, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருந்து மட்டுமில்லாமல் அவருக்கு சில அறிவுரைகளையும் தந்துள்ளோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று அறிவுரைகள்
அதைத் தொடர்ந்து அந்த அறிவுரைகளையும் மருத்துவமனை பட்டியலிட்டுள்ளது.
1. ஒரு வாரத்துக்கு முழுமையாக படுக்கையில் இருந்து ஓய்வெடுக்கவேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து சோதிக்கவேண்டும்.
2. உடல் சார்ந்த வேலைகளை மிகவும் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.
3. மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்றிக்கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்கவேண்டும்.
என்ற மூன்று அறிவுரைகள் ரஜினிகாந்துக்குத் தரப்பட்டுள்ளன என்கிறது அப்பல்லோ அறிக்கை.
சென்னை வந்தடைந்தார்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து ரஜினி அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்து வீட்டுக்குச் சென்றார்.
அரசியல் அறிவிப்பு என்னவாகும்?
நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் அரசியலில் நுழையும் பேச்சு ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் உறுதியான ஒரு வடித்தை எடுத்தது. ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகும்கூட அவர் தன்னுடைய சினிமா திட்டங்களை கைவிடவில்லை. இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு, இத்தகைய மருத்துவ அறிவுரைகளும் வந்துள்ள நிலையில் அவர் திட்டமிட்டபடி 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பாரா என்பது தற்போதைக்கு ஒரு கேள்வியாக மாறியுள்ளது.
அண்ணாத்த படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்தே என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
- புதுச்சேரி வரலாற்றில் 2 முறை மட்டுமே நடந்த உள்ளாட்சி தேர்தல்: யார் காரணம்? ஏன் தயக்கம்?
- பேனசீர் பூட்டோ தன்னை கொல்லும் திட்டம் முன்பே தெரிந்தும் சாவைத் தழுவினாரா?
- விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி: விண்வெளியில் ஓராண்டு தாக்குபிடிப்பது எப்படி?
- உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா - எங்கெல்லாம் பாதிப்பு?
- 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













