பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய பெண் வழக்கறிஞர் - உண்மைக் கதை

வழக்கறிஞர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் அப்போதைய பாம்பே முதல் பெண் ஷெரீஃப் ஆக இருந்தவர் லாம் (இடது)
    • எழுதியவர், பரினாஸ் மதன், வழக்கறிஞர்
    • பதவி, தின்யர் படேல். எழுத்தாளர்

கொரோனா தொற்று பரவிக் கொண்டிருப்பதால், இந்த 2020-ம் ஆண்டில், பெண்களின் உரிமைக்கான ஒரு முக்கிய ஆண்டு விழாவை நாம் மறப்பது எளிது.

அமெரிக்காவில் பெண்கள் முதன்முதலாக வாக்களித்து 100 ஆண்டுகள் ஆகின்றன. அதே போல பிரிட்டனின் இன்ஸ் ஆஃப் கோர்டில் (பாரிஸ்டர்களின் சங்கம்) சட்டம் படிக்கும் ஒரு பெண் சேர்க்கப்பட்டு நூறு ஆண்டுகளாகின்றன.

லண்டனில் இருக்கும் லிங்கன்ஸ் இன் என்ற வழக்கறிஞர்கள் வீற்றிருக்கும் கட்டடத்தில் சேர்க்கப்பட்ட மாணவிகளில், இந்தியாவைச் சேர்ந்த மிதன் லாம் என்கிற பெண்ணும் ஒருவர்.

இந்திய பெண்களுக்கு இருந்த கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய தடைகளை எல்லாம் உடைத்து, பாம்பே உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணியாற்றிய முதல் பெண் லாம் தான். இவர் 1924-ம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கினார்.

மிதன் லாமின் ஆளுமை பார் கவுன்சிலுடன் முடிந்துவிடவில்லை. பெண்களின் வாக்குரிமைக்கான இயக்கங்கள் & பாலின சமத்துவத்துப் போராட்டத்திலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்துச் சென்றிருக்கிறார்.

1898-ம் ஆண்டு, லாம் ஒரு செல்வச்செழிப்பான, முற்போக்குச் சிந்தனை கொண்ட பார்சி குடும்பத்தில் பிறந்தார். 1911-ம் ஆண்டு விடுமுறையின் போது, லாமும் அவரது தாய் ஹீராபாய் டாடாவும் காஷ்மீர் சென்றிருந்தார்கள். அப்போது, பெண்ணியவாதி & பெண்களின் வாக்குரிமைக்காக பிரிட்டனில் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சோஃபியா துலீப் சிங்கைச் சந்திக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த சந்திப்பின் போது, சோஃபியா ஒரு வண்ணமயமான சின்னத்தை (பேட்ஜ்) அணிந்திருந்தார். அந்த சின்னத்தில் "பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்" (Votes for Women) என எழுதப்பட்டிருந்தது. இந்த சின்னம் லாம் மற்றும் அவரது தாயாரை வெகுவாக ஈர்த்தது.

இருவரும் இந்தியாவில் பெண்களுக்கான வாக்குரிமையைப் பெற வேண்டும் என்கிற இலக்குக்கு வந்தடைந்தார்கள்.

தேசியவாதிகளுக்கு மத்தியில், பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது காலனியாதிக்க இந்தியாவிலேயே சர்ச்சைக்குரியதாக இருந்தது.

ஆண்கள் "சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை" என்கிறார்கள். நாங்கள் (பெண்கள்) வாக்களிப்பது எங்கள் பிறப்புரிமை என்கிறோம். வாக்குரிமை எங்களுக்கு வேண்டும் என்றார் மிதன் லாம். சொல்லப் போனால் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கு மத்தியில் எந்த வித முரண்பாடுகளையும் லாம் காணவில்லை.

லாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்ற முதல் முறையாக அனுமதிக்கப்ட்ட பெண் வழக்கறிஞர் லாம்

1919-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், பிரிட்டன் பாராளுமன்றம் (அந்த காலத்தில் பிரிட்டன் நாடாளுமன்றம் உண்மையாகாவே பாராளுமன்றமாகத் தான் இருந்தது) இந்தியாவுக்கான அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த போது பெண்களுக்கான வாக்குரிமை குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருந்தது. பாம்பே நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் குழுக்கள், தங்கள் சார்பாக சிலரை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தது.

மிதன் லாம் மற்றும் அவரது தாயார் ஹீராபாய் டாடா தான் பெண்கள் குழுக்களின் தன்னிச்சையான தேர்வாக இருந்தார்கள். காரணம் பெண்களுக்கான வாக்குரிமை விவகாரத்தில் அவர்களின் ஈடுபாடு மற்றும் அவர்கள் காட்டிய அக்கறை அத்தனை அழுத்தமாக இருந்தது.

லண்டனுக்குச் செல்ல நான்கு நாட்களுக்கு முன்புதான் இருவருக்கும் விவரம் தெரியப்படுத்தப்பட்டது. இருப்பினும் எல்லா வித ஆதாரங்களையும் திரட்டிக் கொண்டு, கப்பலேறினார்கள் லாம் மற்றும் அவரது தாயார்.

பாலினத்தின் அடிப்படையில், இந்தியாவில் பாதி மக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அர்த்தமுள்ள அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என, லாம் மற்றும் டாடா சமர்பித்த ஆதாரங்கள் சுட்டிக் காட்டின.

லாம்
படக்குறிப்பு, பிரிட்டனில் வாழ்ந்து வந்த பெண்ணியவாதி சோஃபியா துலீப் சிங்கால் ஈர்க்கப்பட்டார் லாம்

பிரிட்டனிடம் இருந்து பெண்களுக்கு வாக்குரிமையைப் பெற முடியவில்லை. ஆனால், இந்திய பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதை, அந்தந்த சமஸ்தானங்களிடமே கொடுத்தது பிரிட்டன் பாராளுமன்றம். லாம் & டாடா சமர்பித்த ஆதாரங்கள், பிரிட்டனின் இந்த முடிவுக்கு தூண்டுதலாக இருந்திருக்கலாம். 1921-ம் ஆண்டு பாம்பே மற்றும் மெட்ராஸ் சமஸ்தானங்கள் பெண்களில் சிலருக்கு மட்டும் வாக்குரிமையை வழங்கின.

அடுத்த சில ஆண்டுகளில், மிதன் லாம் வழக்கறிஞராக தன் பெயரை வலுவாக பறைசாற்றத் தொடங்கினார். போலி ரூபாய் நோட்டுக்கள் தொடங்கி யூதர்களின் நிச்சயதார்த்தம் செல்லுபடியாகுமா என்பது வரை பல தரப்பட்ட வழக்குகளில் ஆஜராகி வாதாடினார் லாம்.

மரபுரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுவது என நீதிமன்றத்துக்கு வெளியே பல விஷயங்களைச் செய்து வந்தார் லாம்.

குடிசைவாழ் மக்களுக்கு நல்ல கட்டமைப்பு, சுகாதார வசதிகள் போன்றவைகளைக் கொண்டு வந்தார். சுதந்திர இந்தியாவில் பிரிவினையினால் வந்த அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கு உதவினார். அனைத்திந்திய பெண்கள் அமைப்பின் தலைவராக பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.

1947-ம் ஆண்டு, இந்தியா சுதந்திரமடைந்த பின், மிதன் லாம் மற்றொரு பெருமையையும் சொந்தமாக்கிக் கொண்டார்.

லாம், பாம்பே நகரத்தின் முதல் ஷெரீபாக நியமிக்கப்பட்டார். எனவே இந்தியாவின் முதல் பெண் ஷெரீப் என்கிற பெருமையைப் பெற்றார்.

1981-ம் ஆண்டு மிதன் லாம் இறந்த போது, பல தலைமுறை பெண்ணியவாதிகளுக்கு வழிகாட்டி இருந்தார். பெண்கள் சட்டத் துறையில் அதிகரித்தால், இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் தூண்டப்படும் என நம்பினார் லாம்.

லாம் மற்றும் அவரைப் போன்ற பல பெண்களின் பணிகள், இன்று இந்திய பெண்கள் பலரும் சட்டம் படிப்பதை எளிமையாக்கி இருக்கிறது. ஆகையால் தான் இன்று பல பெண்கள் ஆர்வத்துடன் சட்டம் படிப்பதை தேர்வு செய்கிறார்கள்.

லாம்

பட மூலாதாரம், KEYSTONE

இருப்பினும், சில சட்ட நிறுவனங்கள் இப்போதும் கணிசமான அளவில் பாலின பாகுபாடுகளைச் செய்வதாக ஒரு சமீபத்தைய ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இப்போதும் இந்திய சட்டத் துறையில், ஆண்கள் தான் அதிகம் பணியாற்றுகின்றனர்.

பெண்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படாமல் எப்படி அவர்கள் தகுதியற்றவர்கள் என அறிவிக்க முடியும்? என, 100 ஆண்டுகளுக்கு முன் மிதன் லாம் வருத்ததுடன் ஒரு கேள்வியை முன் வைத்தார்.

இந்த வார்த்தைகள், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த துறைகளில், முன்னேறும் பெண் முன்னோடிகளின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கலாம். அது நீதிமன்றத்துக்குள்ளேயோ அல்லது வெளியேயோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :