கொரோனா வைரஸ்: பிளாஸ்மா தெரபியுடன் சில இந்திய மருத்துவர்கள் முரண்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி, டெல்லி
இந்திய மருத்துவர்களில் சிலர் பிளாஸ்மா சிகிச்சை குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கும் போதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைக் காக்க, சமூக வலைதளங்களில், பிளாஸ்மா சிகிச்சை தேவை எனும் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதாவது வைரல் நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால், மனிதர்களின் எதிர்ப்பு சக்தி மண்டலம் ஆன்டிபாடி எனும் எதிர்ப்பான்களை உருவாக்கும். இந்த எதிர்ப்பான்கள், வைரஸைத் தாக்கி அழிக்கும். ஒரு கட்டத்துக்குப் பிறகு, இந்த எதிர்ப்பான்கள், மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களில் காணப்படும்.
இந்தியா உட்பட, உலகில் பல நாடுகளும், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி கொடுத்தார்கள். இந்த பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு, நோயாளி & அவரது குடும்பத்தினரின் சம்மதம் அவசியம்.
மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா சிகிச்சையின் செயல் திறன் குறித்து, ஒருமித்த கருத்து இல்லாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அமைப்பு, கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பயன்படுத்துவதை எச்சரித்து இருக்கிறது.
பிளாஸ்மா சிகிச்சை முறை, கொரோனா நோயாளிகளின் நிலை மேலும் மோசமடையாமலோ அல்லது அவர்கள் மரணமடையாமலோ இருப்பதற்கு உதவவில்லை என்கின்றன ஐ.சி.எம்.ஆரின் சோதனைகள்.
பிளாஸ்மா சிகிச்சை முறை மீது நடத்தப்பட்ட, உலகின் பல்வேறு சோதனைகளும் இதே முடிவைத் தான் கூறின. ஆனால் ஐ.சி.எம்.ஆர் பிளாஸ்மா சிகிச்சைக்கு தடை விதிக்கவில்லை.
பிளாஸ்மா சிகிச்சை முறையை, இப்போதைக்கு உடனடியாகக் கைவிட முடியாது என மேதாந்தா மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் நரேஷ் ட்ரேஹன் கூறுகிறார். இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பின்பற்றத் தொடங்கிய முதல் கட்ட மருத்துவமனைகளில் இவரது மருத்துவமனையும் ஒன்று. பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்ததாக இவரது மருத்துவமனை கூறியது.
பிளாஸ்மா சிகிச்சை முறையின் வெற்றிக்கு, காலம் மிக முக்கிய காரணி என்பதை, மேதாந்தாவின் தரவுகள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார் மருத்துவர் நரேஷ்.
ஒரு நோயாளி, சைடோகின் ஸ்டோர்மின் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாவது கட்டத்திற்குள் இருக்கும் போதே பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டால், அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குப் பிறகு, நோய்முற்றிய நிலையில் கொடுக்கப்பட்டால், அது பயனற்றுப் போகும் என்கிறார் நரேஷ்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்துக்கு அதிகமாக வேலை கொடுக்கும் போது சைடோகின் ஸ்டோர்ம் நிகழ்கிறது. இதனால், மொத்த நோய் எதிர்ப்பு மண்டலமும் சுய அழிவுக்கு தூண்டப்படுகிறது. "பிளாஸ்மா சிகிச்சை முறை மேம்படுத்தப்படவில்லை" என்கிறார் நரேஷ்.
மும்பையில் ஜஸ்லோக் மருத்துவமனையில், தொற்றுநோயியல் நிபுணராக இருக்கும் ஓம் ஸ்ரீவஸ்தவாவும் இதை ஆமோதிக்கிறார். இவரது மருத்துவமனையும், ஐ.சி.எம்.ஆர் சோதனையில் ஒரு பகுதியாக இருந்தது.
உலகம் முழுக்க பிளாஸ்மா சிகிச்சை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவும் போது, இத்தனை விரைவாக பிளாஸ்மா சிகிச்சையைக் கைவிட வேண்டாம் என்கிறார் அவர்.
"என் சொந்தத் தரவுகள் படி, பிளாஸ்மா சிகிச்சை, பல நோயாளிகளின் நிலைமை மோசமடைவதைத் தடுத்திருக்கிறது" என்கிறார் ஓம் ஸ்ரீவஸ்தவா. இவரும் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டிய நேரத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
ஐ.சி.எம்.ஆரின் சோதனையில், மிதமான கொரோனா நோயாளிகள் முதல் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் வரை பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது கவனிக்கப்பட்டது. இதில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளும் அடக்கம்.

பட மூலாதாரம், Getty Images
தான் வேறு மாதிரியான குறியீடுகளைக் பின்பற்றுவதாகக் கூறுகிறார் ஸ்ரீவஸ்தவா. அடுத்து எந்த நோயாளியின் உடல்நிலை மோசமடையும் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.
"பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்படுவதற்கு முன், நோயாளிகளின் உடல் நிலை மோசமடையும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. நான் நோயாளிகளை முன் கூட்டியே பிளாஸ்மா சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்" என்கிறார் ஸ்ரீவஸ்தவா.
கொரோனா வந்த ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், (ஐ.சி.எம்.ஆர் சோதனைகளும் அடக்கம்) நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என, பல ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டார்கள்.
நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸ் உடனேயே இருக்கும். இது மற்ற செல்களை பாதிக்காமல் பாதுகாக்கும். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களிடம், நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகளை சோதனை செய்த ஆராய்ச்சிகள், கூடுதல் நம்பகத்தன்மை வாய்ந்தவை என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இந்த ஆன்டிபாடிகளின் அளவு மற்றும் அதன் ஆற்றல் ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபடும். பிளாஸ்மா சிகிச்சை முறைக்கும் இது பொருந்தும் என்கிறார் சிங்கப்பூர் இம்மியூனாலஜி நெட்வொர்க்கில் ஆராய்ச்சியாளராக இருக்கும் அர்சிதா மிஷ்ரா.
இந்த பரிசோதனைகளின் விலை அதிகம், அதோடு நேரம் கோருபவை. ஆனால் உலகம் முழுக்க பிளாஸ்மா சிகிச்சை முறை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட வேறுபாடுகளை விளக்க, இது அவசியம் என்கிறார் அர்சிதா.
நோயாளிகளின் வயதும் இதில் முக்கியம்.

பட மூலாதாரம், Reuters
சமீபத்தில் ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆராய்ச்சி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் பாலினம், வயது மற்றும் எவ்வளவு கடுமையாக கொரோனா பாதித்தது போன்ற விவரங்கள் தெரிந்தால், யாருக்கு அதிக அளவில் ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்க உதவும் என கண்டறிந்தது.
அவ்வளவு ஏன், இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில், பிளாஸ்மா சிகிச்சை முறை, ஹைபாக்சியா எனப்படும் ரத்தத்தில் ஆக்ஸிஜென் அளவு குறையும் பிரச்சனையைச் சமாளிக்க பயன்படுகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோயாளிகள் அதிக நாட்கள் மருத்துவமனைகளில் தங்கி இருப்பது குறைகிறது.
ஆனால், உலகம் முழுக்க, ஒரு கணிசமான எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள், பிளாஸ்மா சிகிச்சை முறை செயல்திறனற்றது எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நியூ இங்கிலாந்து ஸ்கூல் ஆஃப் ஜர்னல் ஆஃப் மெடிசின் என்கிற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பிளாஸ்மா சிகிச்சை தரப்பட்டவர்களுக்கும், வெற்றுத் திறவ ஊசி செலுத்தப்பட்டவர்களுக்கும் இடையில் மருத்துவ நிலை அல்லது ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் காணப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
இதே முடிவுகளை பல்வேறு ஆய்வுகள் தந்திருக்கின்றன.
பிளாஸ்மா சிகிச்சை குறிப்பிடத்தக்க சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தான் நம்புவதாக, நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஏ. ஃபதாஹுதீன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"பிளாஸ்மா சிகிச்சை ஆரம்பத்தில் அதிக கவனத்தைப் பெற்றது. ஏனெனில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் சிகிச்சை நெறிமுறைகளைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. எனவே, பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது. மேலும் குறைந்த ஆபத்துள்ள பரிசோதனைகளை, அனுமதிப்பதில் கட்டுப்பாட்டாளர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை" என்று கூறினார் ஃபதாஹுதீன்.
அதற்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, பிளாஸ்மா சிகிச்சை, கோவிட் -19 க்கு ஒரு நல்ல சிகிச்சையாக கருதப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
தமிழகத்தில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் மருத்துவத் தலைவரான மருத்துவர் டி.ஜே. கிரிஸ்டோஃபர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பரிந்துரைக்கவில்லை.
"பொது வெளியில் கிடைக்கும் தரவுகளை வைத்து பார்க்கும் போது, பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனுக்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று அவர் கூறினார்.
கோவிட் -19 சிகிச்சை நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் ஏன் கைவிடவில்லை என்பதை, இதுபோன்ற முற்றிலும் மாறுபட்ட முடிவுகள் மற்றும் பார்வைகள் விளக்குகின்றன.
அவ்வளவு ஏன், அமெரிக்கா கூட, பிளாஸ்மா சிகிச்சை முறையை ஒரு ஆய்வு போலச் செய்யலாம் என மருத்துவர்களை அனுமதித்து இருக்கிறது. பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

பல ஆய்வுகள், பிளாஸ்மா சிகிச்சை செயல்திறனற்றது என்கின்றன. இருப்பினும் சில கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. எனவே தான் இந்த சிகிச்சை இன்னும் கைவிடப்படாமல் இருக்கிறது என்கிறார் தொற்றுநோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா.
சர்வதேச அளவில், ஒருவருக்கு எவ்வளவு நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் இருந்தால் அவர் தன் பிளாஸ்மாவை தானமாகக் கொடுக்க முடியும் என எந்த ஒரு நெறிமுறையும் இல்லை. அதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு, எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறையும் இல்லை. எனவே தான் பிளாஸ்மா சிகிச்சை முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் லஹரியா.
இதை மருத்துவர் அர்சிதா மிஷ்ராவும் ஆமோதிக்கிறார்.
இதுவரை உலக அளவில், பிளாஸ்மா சிகிச்சை முறையால் எந்த ஒரு பெரிய பக்கவிளைவுகளும் ஏற்பட்டதாக, ஆராய்ச்சிகள் குறிப்பிடவில்லை. எனவே இந்த சிகிச்சை முறையில் சிக்கல்களை விட, நன்மைகள் அதிகமாக இருக்கின்றன என்கிறார் அர்சிதா.
பிற செய்திகள்
- ரஜினியுடன் ஈகோவை விட்டுக்கொடுத்து சேர தயார் - மீண்டும் அறிவித்த கமல்
- ஜோ பைடன் வெற்றி தேர்தல் சபையில் உறுதி: டிரம்ப் இனி அவ்வளவு தானா?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
- சித்ரா மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
- விண்வெளியில் 'பாங்கு' சொல்லும் ஒலி: நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








