மதுரை கிராமத்தின் ஓயாத போராட்டம்: எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு

- எழுதியவர், மனோஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளுக்கு எதிராக மதுரையில் உள்ள கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது அலங்கம்பட்டி கிராமம்.
இங்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளைநிலங்களை அழித்து கடந்த நவம்பர் 12ஆம் தேதி பணிகளை தொடங்கியதாகக் கூறி அப்பகுதி மக்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த நவம்பர் 16ஆம் தேதி இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துணை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கம்பூரில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் 30ஆம் தேதி கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிலம் கையகப்படுத்தும் பொறுப்புகளை கவனிக்கும் துணை ஆட்சியர் சரவணன், மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ், மேலூர் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜா மற்றும் இந்தியன் ஆயில் செயற்பொறியாளர் அஜித் ஆகியோர் அப்பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு பணத்தை அங்கு வந்த விவசாயிகளிடம் வழங்கினர். இவ்வாறு இதுவரை 45 சதவீதம் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தினை பற்றியும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
அதே சமயம் கொட்டாம்பட்டி, அலங்கம் பட்டி, கம்பூர், கேசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சூழியல் முகிலன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக பேசிய சூழலியல் ஆர்வலர் முகிலன், "விவசாய நிலங்களில் ஐ.ஓ.சி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும். 2005ஆம் ஆண்டு ஏற்கனவே பதிக்கப்பட்ட பெட்ரோலிய குழாய்களை அகற்றுவதோடு, விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்," என கூறினார்.
மேலும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு விதிகளை மீறி குறைவான அளவிலேயே இழப்பீடு வழங்கப்பட்டதாக முகிலன் குற்றம்சாட்டினார்.

கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், "ஏற்கனவே 2004ஆம் ஆண்டிலிருந்து ஐ.ஓ.சி நிறுவனம் சார்பாக சென்னை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு பெட்ரோல் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் அருகிலேயே கேஸ் கொண்டு செல்ல குழாய் பதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எங்கள் கிராமம் உட்பட பல கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லாத இடங்களில் சொற்ப பணத்தைக் கொடுத்து விவசாயிகளை அச்சுறுத்தி பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த பைப் லைன் பதிப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடாமல் கிராமத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்கூட்டியே தகவல் கொடுக்காமல் பைப்லைன் பதித்து வருகின்றனர்" என்று கூறினார்.
"கருத்து கேட்பு கூட்டமோ நன்மை, தீமை விளக்கமோ அதிகாரிகள் அளிக்கவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பின் விவசாயிகளிடம் நாங்கள் அவ்வளவு, இவ்வளவு தருகிறோம் என மூளைச்சலவை செய்கின்றனர். கம்பூர் ஊராட்சியில் எந்த புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும் கிராம மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் திட்டத்தைச் செயல்படுத்தும் போது எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் பைப் லைன் பதிக்கும் வேலையைத் தொடங்கினர். மக்கள் போராட்டத்தால் தான் அதுவும் நிறுத்தப்பட்டது. தற்போது பதிக்க உள்ள குழாய்கள் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று 100% உத்தரவாதம் கொடுக்க முடியுமா? ," என செல்வராஜ் கேள்வி எழுப்பினார்

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த திட்டத்தில் பாதிப்பு எதுவுமில்லை. ஏற்கெனவே பெட்ரோல் மற்றும் டீசல் எடுத்துச் செல்ல ஒரு பைப் லைன் வைத்துள்ளோம். அதைப்போல் இது கேஸ் லைன் அவ்வளவு தான். ஆனால் அப்பகுதி மக்கள் பூமிக்கு அடியிலிருந்து கேஸ் எடுப்போம் என்பது போல் நினைத்துக் கொள்கின்றனர். அது உண்மையல்ல, அது குறித்துத் தெளிவு வழங்கி வருகிறோம். அரசுக்கு நில உபயோக உரிமை 18 மீட்டர் உள்ளது. அதன் அடிப்படையில் தான் நிலங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதற்காக அரசாணை உருவாக்கி மஞ்சள் நிற நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அதன்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கருத்து கேட்புக்கூட்டம் இந்த திட்டத்திற்குப் பொருந்தாது" என்று கூறினர்.

"மக்களிடம் இத்திட்டம் குறித்து விளக்கியுள்ளோம். இது மத்திய அரசுத் திட்டம். அதனால் மாசு கட்டுப்பாட்டு வாரியும் உள்ளிட்ட துறைகளில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. அதே போல் புதிதாக இடம் எடுக்கவில்லை. ஏற்கெனவே பைப்லைன் போகும் இடத்தில் தான் தற்போது மற்றொரு பைப் அமைக்கிறோம். ஒரு நெற்பயிர் இருக்கும் இடத்தில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் 7 போகம் என்ன வருவாய் எடுப்பார்களோ அதே அளவு இழப்பீடு வழங்குகிறோம். இந்த பைப் லைன் மூலம் பாதிப்பு இருக்காது. குழாய் பதித்த பின்னரும் அதன் நிலை குறித்துத் தொடர்ந்து கண்காணிப்போம். அதனால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படாது. தற்போது இழப்பீடு தொகை கொடுக்க ஆரம்பித்துவிட்டோம்," என இந்திய ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்
- ரஜினியுடன் ஈகோவை விட்டுக்கொடுத்து சேர தயார் - மீண்டும் அறிவித்த கமல்
- ஜோ பைடன் வெற்றி தேர்தல் சபையில் உறுதி: டிரம்ப் இனி அவ்வளவு தானா?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
- சித்ரா மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
- விண்வெளியில் 'பாங்கு' சொல்லும் ஒலி: நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












