ரஜினி அரசியல் கட்சி: 'என்ன முடிவு எடுத்தாலும் வரவேற்போம்' - தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்

ரஜினி அரசியல் கட்சி: 'என்ன முடிவு எடுத்தாலும் வரவேற்போம்' - தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்

இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் வெளியாகியுள்ள சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

'ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் வரவேற்போம்' - எல்.முருகன்

ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் முழு மனதுடன் வரவேற்போம் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

"ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசபக்தர். ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பா.ஜ.க. அதை முழு மனதுடன் வரவேற்கும். சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தாமரை மலர்ந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமைதான் முறையாக அறிவிக்கும்."

"வேளாண் சட்டத்துக்கு தமிழக விவசாயிகள் மிகப்பெரிய வரவேற்பை தந்து உள்ளனர். வேளாண் சட்டத்தை வைத்து தி.மு.க. பெரிய அளவில் பிரச்சினை செய்ய முயற்சித்தது. ஆனால் பாதுகாப்பான சட்டம் என்று விவசாயிகள் நினைப்பதால் எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் முறியடிக்கப்பட்டது," என்று நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி - டிபிஎஸ் வங்கி இணைப்பு முடிந்தது

லக்ஷ்மி விலாஸ் வங்கி - டிபிஎஸ் வங்கி இணைப்பு முடிந்தது

பட மூலாதாரம், Getty Images

டிபிஎஸ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி வழக்கம்போல் அனைத்து சேவைகளையும் பெறலாம் என டிபிஎஸ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க, 1949- ஆம் ஆண்டின் இந்திய வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45- ஆவது பிரிவின்படி சிறப்பு அதிகாரங்களின் கீழ் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது.

இந்த இணைப்புத் திட்டம் நவம்பர் 27- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நவம்பர் 27- ஆம் தேதி விலக்கிக் கொண்டது. லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி வழக்கமான அனைத்து வங்கி சேவைகளையும் தொடர்ந்து பெற முடியும். கிளைகள், டிஜிட்டல் சேவை, ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும்.

சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களைப் பொருத்தவரையில் பழைய நிலையே தொடரும். வட்டி விகிதங்களில் தற்போது வரை எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது என்கிறது தினமணியில் வெளியாகியுள்ள செய்தி.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: இன்று பேச்சுவார்த்தை நடக்குமா?

Central government today called farmers for talks

பட மூலாதாரம், Getty Images

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை செவ்வாய் மதியம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திங்கள்கிழமை மாலை இந்திய அரசு அழைத்துள்ளது என்கிறது டெல்லியில் இருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

மத்திய அரசின் இந்த அழைப்பை நேர்மறையாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள், பேச்சுவார்த்தைக்கு செல்வது குறித்த முடிவை செவ்வாய்க்கிழமை (இன்று) காலைதான் எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

டெல்லி எல்லையிலுள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், போராட்டம் நடத்துவதற்கு என்று அரசு ஒதுக்கியுள்ள இடம் போதாது என்று அங்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :