மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

பட மூலாதாரம், Pallava Bagla

    • எழுதியவர், ஜூபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகக் கூறப்படும் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது என ஸ்வீடனில் இருந்து இயங்கும் வி-டெம் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தமது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

வி-டெம் இன்ஸ்டிடியூட்டின் '2020 ஜனநாயக அறிக்கை' இந்தியாவைப் பற்றியது மட்டுமல்ல. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் குறித்த மதிப்பீடு இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையைத் தயாரிக்கும் ஸ்வீடனின் கோதன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய வி-டெம் இன்ஸ்டிடியூட் அதிகாரிகள், இந்தியாவில் ஜனநாயகம் மோசமடைந்து வருவதைப் பற்றி தாங்கள் கவலைகொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். அறிக்கையில், 'தாராளவாத ஜனநாயக குறியீட்டில்' 179 நாடுகளில் இந்தியா, 90 வது இடத்திலும், டென்மார்க் முதலிடத்திலும் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 70 வது இடத்திலும், நேபாளம் 72 வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், பாகிஸ்தான் இந்தியாவை விட கீழே 126 வது இடத்திலும், பங்களாதேஷ் 154 வது இடத்திலும் உள்ளன.

இந்த அறிக்கையில் இந்தியா குறித்து தனி அத்தியாயம் எதுவும் இல்லை. ஆனால் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மோதி அரசில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் இடம் குறைந்து வருவதாக அது கூறுகிறது. இதன் காரணமாக இந்தியா ஒரு ஜனநாயகம் என்ற தகுதியை இழப்பதற்கான ஆபத்தின் விளிம்பில் இருக்கிறது.

இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது உலகளாவிய தரங்களும் உள்ளூர் தகவல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று வி-டெம் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். சிக்கலான அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், தங்கள் அறிக்கை மற்ற அறிக்கைகளிலிருந்து வேறுபட்டது என்று அந்த நிறுவனம் உறுதிபடக்கூறுகிறது.

தரவுகள், தரவு பகுப்பாய்வு, கிராபிக்ஸ், விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிக்கையை பார்க்கும்போது தெரியவருகிறது.

ஜனநாயக குறியீடுகளில் இந்தியா

ஸ்டீஃபன் லிண்ட்பெர்க்

பட மூலாதாரம், @StaffanILindber

படக்குறிப்பு, ஸ்டீஃபன் லிண்ட்பெர்க்

"இந்தியா அல்லது பிற நாடுகளின் ஜனநாயகத்தின் நிலை பற்றிப் பேசுவது நானோ அல்லது மேலை நாடுகளில் அமர்ந்திருக்கும் வெள்ளையினத்தவரோ அல்ல. எங்களிடம் 3,000 க்கும் மேற்பட்ட வல்லுநர்களின் வலைப்பின்னல் உள்ளது. இந்தியாவில் பணிபுரியும் படித்தவர்களும் இவர்களில் அடங்குவார்கள். அவர்களுக்கு இந்தியாவின் சிவில் சமூகம் மற்றும் அரசியல் கட்சிகளைத் தெரியும். அவர்களின் நிபுணத்துவம் உறுதியானது," என்று இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீஃபன் லிண்ட்பெர்க் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

எந்தவொரு நாடு என்றாலும் 400 குறியீடுகளை எடுத்துக்கொண்டு தனது சகாக்கள், ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை சோதிக்க முயற்சிக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார். இவற்றின் முக்கிய குறியீடுகள் - கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், சிவில் சமூகத்தின் சுதந்திரம், தேர்தல்களின் தரம், ஊடகங்களில் மாறுபட்ட கருத்துகளின் இடம் மற்றும் கல்வியில் சுதந்திரம் ஆகியவை ஆகும்.

"இவற்றில் பல ஜனநாயகத்தின் தூண்கள். இவை இந்தியாவில் பலவீனமடைந்து வருகின்றன. மோதி ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த குறியீடுகள் சில குறையத் தொடங்கின. ஆனால் உண்மையில், 2014 ல் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மாபெரும் சரிவு ஏற்பட்டது,"என்று லிண்ட்பெர்க் கூறுகிறார்.

"கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். ஜனநாயகம் என்று அழைக்கப்படாத நாடுகளின் பிரிவுக்கு மிக நெருக்கமாக இப்போது இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஊடகங்கள் அரசுக்கு சாதகமாக செயல்படுவது அதிகரித்துள்ளது. ஊடகவியலாளர்களை அரசு துன்புறுத்துவது, ஊடகங்களை தணிக்கை செய்ய முயற்சிப்பது, ஊடகவியலாளர்களை கைது செய்வது மற்றும் ஊடகங்கள் சுய தணிக்கை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,"என்று அவர் மேலும் கூறுகிறார்.

மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

பட மூலாதாரம், NurPhoto

ஜனநாயகத்தின் வரையறை

முதலில் ஜனநாயகம் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஜனநாயகத்தில், பொது மக்கள் தங்கள் பிரதிநிதிகளை வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அதன் பிறகு பெரும்பான்மையை பெற்ற கட்சி அரசை அமைக்கிறது.

"ஜனநாயகம் எட்டு குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். கருத்து சுதந்திரம், மதச்சார்பின்மை, மதம் மற்றும் அரசுக்கு இடையே தொடர்பின்மை, ஜனநாயக அரசு அதாவது முடியாட்சி இல்லாமை, சமத்துவத்திற்கான உரிமை அதாவது அனைவரும் சட்டத்திற்கு முன்பு சமம் என்ற நிலை, வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உரிமைகளின் சுதந்திரம், வாக்களிக்கும் உரிமை ஆகியன இவை," என்று பிரசார் பாரதியின் முன்னாள் தலைவரும், வலதுசாரி சிந்தனைக் குழுவான விவேகானந்த் அறக்கட்டளையின் ஜனநாயகம் குறித்த நிபுணருமான சூர்ய பிரகாஷ் தெரிவிக்கிறார்.

சூர்ய பிரகாஷின் கூற்றுப்படி, உலகளாவிய ஜனநாயகத்தில் இந்தியா மிகவும் அதிக பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை டென்மார்க்கின் ஜனநாயகத்தை முதலிடத்தில் வைத்துள்ள்ளது. "புனித பைபிளை அடிப்படையாகக் கொண்ட எவாஞ்சலிகல் லூத்ரென் தேவாலயம் டென்மார்க்கின் நிறுவப்பட்ட தேவாலயமாக இருக்கும் . இதற்கு அரசின் ஆதரவு இருக்கும் என்று டென்மார்கின் அரசியலமைப்பு கூறுகிறது. நமது அரசியலமைப்பை பாருங்கள். அதன் முகப்புரையில் நாம் மதச்சார்பின்மையை உள்ளடக்கியுள்ளோம். அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள், அவர்களை நம்முடன் ஒப்பிடவே முடியாது," என்று சூர்ய பிரகாஷ் கூறுகிறார்,

இந்தியா இன்றும் ஒரு பெரிய ஜனநாயகம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று சூர்ய பிரகாஷ் கூறுகிறார். வி- டெம் அறிக்கை மீது அவருக்கு சிறிது ஆட்சேபம் உள்ளது.

மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

பட மூலாதாரம், NurPhoto

"குற்றம் இல்லாத நாடு எதுவுமில்லை. எல்லோரிடமும் ஏதோ குறை இருக்கிறது. நரேந்திர மோதி அரசு மீது முழு குற்றச்சாட்டையும் சுமத்தும் செயலானது, அவர்கள் நமது அரசியலமைப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. 28 மாநிலங்களில் பாதியில், தனித்தனி கட்சிகள் அதிகாரத்தில் உள்ளன. 28 மாநிலங்களில் 42 கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மத்திய அரசும் ஒரு கூட்டணி தான்," என்று அவர் கூறுகிறார்.

பிரதமர் நரேந்திர மோதியும் இந்தியாவின் ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசுகிறார். கடந்த மாதம் உலகம் முழுவதிலுமிருந்தும் வந்த முதலீட்டாளர்களின் கூட்டத்தில், இந்தியா ஒரு ஜனநாயகம் என்பதால் முதலீடு செய்ய சிறந்த இடம் என்று கூறினார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல், மேற்கத்திய நாடுகளின் பல தலைவர்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை பாராட்டியுள்ளனர்.

ஜனநாயகத்தில் தொடர்ச்சியான சரிவு?

அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஜனநாயகம் குறித்த நிபுணர் நிரஞ்சன் சாஹு, வி-டெமின் அறிக்கை பற்றிக் கூறுகையில், "தரவுகளை அடிப்படையாகக் கொண்ட வி-டெம்மின் அறிக்கை ஜனநாயகத்தின் தொடர்ச்சியான சரிவை, குறிப்பாக இந்தியாவில் தாராளவாதத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சியின் அறிகுறிகளை உறுதிப்படுத்துகிறது. பேச்சுரிமை மற்றும் ஊடக உரிமையை கட்டுப்படுத்துவது, எதிர்க்கும் குரல்களை அடக்குவது ஆகியவற்றில் அரசின் சகிப்பின்மை காணப்படுகிறது, "என்கிறார் இவர்.

அறிக்கையில் ஊடகங்களின் சுதந்திரம் குறைந்து வருவது குறித்த விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சூர்ய பிரகாஷ் ,இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்து புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

"இந்தியாவில் ஊடகங்களின் இடம் சுருங்கி வருவதாக அறிக்கை கூறுகிறது. கடந்த எட்டு-பத்து ஆண்டுகளில் நம் நாட்டில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. செய்தித்தாள்களின் பதிவாளர் ஒவ்வொரு ஆண்டும் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார். அதன்படி தினசரி செய்தித்தாள்களின் புழக்கம் 2014 இல் 14 கோடியாக இருந்தது. இது 2018 இல் 24 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் 800 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன, அவற்றில் 200 செய்தி சேனல்கள் உள்ளன. வீடுகளில் டிவி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 14 கோடி இருந்தது. இது 2018 இல் 20 கோடியாக அதிகரித்துள்ளது. ஐந்தாண்டுகளில் இணைய இணைப்பு 15 கோடியிலிருந்து 57 கோடியாக வளர்ந்துள்ளது. சர்வாதிகாரம் இருந்தால், ஊடகங்கள் இந்த வழியில் எவ்வாறு விரிவடையும்? ," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"இந்த நபர்கள், மாலையில் நமது ஷவுட்டிங் ப்ரிகேட் (டிவி சேனல்களில் கூச்சலிடும் குழு உறுப்பினர்கள்) ஐ, பார்க்கவில்லையா? ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும், இரு தரப்பிலும் காரசாரமான விவாதம் நடக்கிறது. ஜனநாயக முறைமை இல்லாவிட்டால், அது நடக்க முடியாது. ஒரு நாள் சமூக ஊடகங்களில், மோதி மிகவும் மோசமான பிரதமர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவதை நான் கண்டேன். உங்களுக்கு பேச சுதந்திரம் இல்லையென்றால், ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லாமல் இருந்தால், இந்த ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் இயங்குமா?" என்று அறிக்கையைத் தயாரித்தவர்களிடம் சூர்ய பிரகாஷ் கேட்கிறார்,

மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

பட மூலாதாரம், NurPhoto

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் ட்வீட்டுகள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதை, சூர்ய பிரகாஷ் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மோதி அரசு ஏன் அதற்குள் இழுக்கப்படுகிறது என்பதே அவரது கேள்வி. சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கையில் உள்ளது. இது அவர்களுக்குத் தெரியாதா? என்று அவர் மேலும் கூறுகிறார்.

வி-டெம், 2014 இல் நிறுவப்பட்டது மற்றும் 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனநாயகம் குறித்த உலகளாவிய அறிக்கையை வெளியிடத் தொடங்கியது. இதன் இயக்குநரின் கூற்றுப்படி, இந்தக்கழகம் தரவுகளின் அடிப்படையில் தனது துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகும்.

ஜனநாயகத்தின் சில தூண்களான ,ஊடகங்கள், மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை சுதந்திரம் ஆகியவை வீழ்ச்சி அடைவதாக அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது. ஊடக நபர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது தேசத் துரோகம் முதல் அவதூறு வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குத் தொடர்வது அதிகரித்து வருவதையும் இது குறிப்பிடுகிறது.

ஜனநாயகத்தில் குறைபாடு உள்ளதா?

மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

பட மூலாதாரம், Yawar Nazir

அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிரஞ்சன் சாஹு இந்த அறிக்கையுடன் உடன்படுகிறார். "நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற இந்தியாவின் சுதந்திர அமைப்புகள், அரசு மற்றும் சக்தி வாய்ந்த தலைவர்களின் நெருக்குதலுக்கு அடிபணியாமல் இருந்ததை உலகமே பாராட்டிய ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. அரசின் சிந்தனைக்கு ஏற்ப இந்த அமைப்புகளை மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்று சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜாமீன் இல்லாமல் பல மாதங்கள் காவலில் வைக்கப்படுகின்றனர். நீதித்துறை முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்கிறது. இதனால் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் முக்கியமான வழிமுறைகள் மறைந்துவிட்டன," என்று அவர் கூறுகிறார்.

"மத மற்றும் அரசியல் அணிதிரட்டல் அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் சமூக ஊடகங்களால் இயக்கப்படுகிறது மற்றும் ஆளும் கட்சிகள் அதன் அரசியல் நன்மைகளைப் பெறுகின்றன. ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சுதந்திரத்தின் மீது பெரும் எதிர்மறையான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. இது நாட்டில் விஷத்தன்மை கொண்ட ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்குகிறது . சிறுபான்மையினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலவீனமானவர்கள் மற்றும் வில்லத்தனமானவர்கள் அல்லது தேசவிரோதிகள் என சித்தரிக்கப்படுகிறார்கள்," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

முந்தைய வேறு அறிக்கைகளிலும் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. "ஆட்டோக்ராடைசேஷன் சர்ஜஸ் - ரெசிஸ்டென்ஸ் க்ரோஸ்" (சீறும் எதேச்சாதிகாரம் - வளரும் எதிர்ப்பு) என்ற தலைப்பில் வெளியான வி-டெம் இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய அறிக்கை தனித்த ஒன்று அல்ல. பல ஆண்டுகளாக, இதுபோன்ற பல அறிக்கைகள் பல நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த ' ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற புகழ்பெற்ற அமைப்பு, 2019 ஆம் ஆண்டின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட 'ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மீதான தாக்குதல்' என்ற தனது அறிக்கையில், தொடர்ந்து 14 வது ஆண்டாக உலகளாவிய சுதந்திரம் குறைந்து வருவதாகக் கூறியுள்ளது.

இந்தியா குறித்து கருத்து தெரிவித்த இந்த அறிக்கை, "பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி அரசு, ஜனநாயக விதிமுறைகளிலிருந்து விலகிச் செல்வதால், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மதிப்புகள் அடிப்படையிலான வேறுபாடுகளை அழிக்க முடியும். இந்தியா நல்ல மதிப்பீட்டைப் பெற்றுள்ளது மற்றும் இது கடந்த ஆண்டில் வெற்றிகரமாக தேர்தல்களை நடத்தியது. ஆனால் பாஜக நாட்டின் பன்முகத்தன்மையிலிருந்தும், தனிமனித உரிமைகளுக்கான அதன் உறுதிப்பாட்டிலிருந்தும் விலகிவிட்டது. இது இல்லாமல் ஜனநாயகம் நீண்ட காலம் வாழ முடியாது, "என்று குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில், சிவிகஸ் என்ற அமைப்பு 'இந்தியா: சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறது' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை இது வெளியிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், அதன் இடம் விரைவாக குறைந்து கொண்டிருக்கிறது. 2014 , மே 26 ஆம் தேதி நடந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதி வெற்றி பெற்றதிலிருந்து, ஜனநாயகத்தின் தரம் மற்றும் ஜனநாயக எதிர்ப்பில் பங்கேற்பு ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், அரசை விமர்சிக்கும் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளை அதிகாரிகள் குறிவைக்கக்கூடும்,"என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயகம் உள்ளிருந்து பலவீனமாக இருக்கிறதா?

மோதி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைகிறதா?

பட மூலாதாரம், NurPhoto

வி-டெம் அறிக்கையின்படி, ஜி 20 இன் அனைத்து முக்கிய நாடுகளும், உலகின் அனைத்து பிராந்தியங்களும் இப்போது 'சர்வாதிகாரத்தின் மூன்றாவது அலை'க்கு ஆளாகியுள்ளன. இதன் கீழ் இந்தியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் துருக்கியும் வந்துள்ளன.

"இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது , உலகில் இப்போதுள்ள போக்கின் ஒரு பகுதியாகும். இது கவலைக்குரிய விஷயமாகும். இந்தியாவில் அதிகரிக்கும் ஏகாதிபத்திய போக்கு , உலக ஏகாதிபத்தியத்தின் பாதையை பின்பற்றுகிறது , "என்று வி-டெம் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீஃபன் லிண்ட்பெர்க் கூறுகிறார்.

இந்த போக்கு குறித்து அவர் கவலை கொண்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகிறார், "இதே போன்ற போக்கு தொடங்கிய ஜனநாயக நாடுகளில், 80 சதவீத நாடுகள் சர்வாதிகார நாடுகளாக மாறிவிட்டன என்பதே கவலை அளிக்கிறது" என்கிறார் அவர்.

ஜனநாயகத்தில் எங்கே தவறு நடக்கிறது? "இந்த குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஆனால் முழு தாராளவாத ஜனநாயக அமைப்பும் சிதைந்துவிட்டதாக கருதுவது சரியானதல்ல என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போலந்து, துருக்கி, இந்தியா, பிரேசில், ஹங்கேரி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பான்மைவாதம், எதேச்சாதிகாரத்துடன் சேர்ந்து வளர்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும், கடந்த தசாப்தங்களில் கூட இந்த போக்கு இருந்தது என்றே சொல்ல வேண்டும். "என்று அவர் குறிப்பிடுகிறார்.

இப்போதெல்லாம் ஆட்சியை கவிழ்க்கவோ , இராணுவ ஆட்சியை நிறுவவோ , நெருக்கடி நிலையை அமல் செய்யவோ அவசியம் இருப்பதில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் அனைத்து விதிகளையும் பயன்படுத்தியே சர்வாதிகாரிகள் ஆட்சிக்கு வருகின்றனர். நீண்ட காலம் அதை தக்கவைத்துக்கொள்ள சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். ஸ்டீஃபன் லிண்ட்பெர்க் துருக்கி உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறார். அதிபர் எர்துவான், அரசியலமைப்பை இரண்டு முறை மாற்ற நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தினார் என்று அவர் கூறுகிறார்.

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில், சில நாடுகளின் ஜனநாயகத்தில் குறைபாடு இருந்தது என்று சூர்ய பிரகாஷ் கருதுகிறார். இந்தியாவை எடுத்துக்கொண்டால், சில மாநிலங்களில் ஜனநாயகத்தில் சிக்கல் உள்ளது என்றும் சில தவறான கைதுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார். ஆனால் ஜனநாயகத்தின் வேர்கள் வலுவானவை என்றும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜனநாயகத்தின் அணிவேரை அசைக்கமுடியாது என்றும் அவர் உறுதியாக நம்புகிறார் .

"நாம் நமது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் இழப்போம் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் இந்த அரசியலமைப்பின் மதிப்புடன் நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: