கொரோனா தொற்று, மரணம்: பிரதமர் மோதியின் கூற்றுகளில் எவ்வளவு உண்மை? #BBCRealityCheck

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உண்மை சரிபார்ப்புக் குழு
- பதவி, பிபிசி
கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பல கருத்துகளைப் பேசி வருகிறார். இது தொடர்பான அவரது கூற்றுகள் சிலவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வோம்.
கூற்று: "ஒவ்வொரு நாளும் புதிதாக கண்டறியப்படும் கோவிட் 19 நோயாளிகள் எண்ணிக்கையும், நோயாளிகள் எண்ணிக்கை வளரும் விகிதமும் இந்தியாவில் குறைந்து வருகிறது. ஏனெனில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை சில நூறாக இருந்தபோதே நெகிழ்வான முடக்கநிலையை கடைபிடித்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று".
உண்மை என்ன?
இந்தியாவில் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் உச்சம் தொட்ட பிறகு ஒவ்வொரு நாளும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, மொத்த நோயாளிகள் எண்ணிக்கை வளரும் விகிதம் ஆகியவை குறைந்து வருவது உண்மைதான். ஆனால், ஒப்பீட்டளவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதே முடக்க நிலை அறிவித்த ஒரே நாடு அல்ல இந்தியா. முடக்க நிலையால் பல நாடுகளுக்கும் மாறுபட்ட பலன்களே கிடைத்துள்ளன.
இந்தியாவில் புள்ளிவிவரங்களின்படி செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து வாராவாரம் புதிதாக கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனாவால் தினமும் இறப்பவர்கள் எண்ணிக்கையும் சரிந்துவருகிறது.
முடக்க நிலை அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பலனை மதிப்பிடுவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு நாடும் செய்யும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. எனவே அதற்கேற்ப அந்தந்த நாடுகள் உறுதி செய்யும் புதிய நோயாளிகள் எண்ணிக்கையும் மாறுபடுகிறது. முடக்கநிலைக் காலத்தில் மக்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. இந்தியாவில் முடக்கநிலை இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி தொடங்கியது. அப்போது 562 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டிருந்தது. 9 பேர் இந்த நோயால் இறந்திருந்தனர்.
தேசிய அளவில் முடக்கநிலை 68 நாளுக்கு ஜூன் 1ம் தேதி வரை நீடித்தது. அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்திருந்தது. அதன் பிறகு மக்கள் இடப் பெயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடங்கியது. அதுவரை நீடித்த முடக்க நிலைக்காலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5 மடங்குக்கு மேல் அதிகரித்தது.
தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த இந்தியாவின் அண்டை நாடுகள் சிலவும் அதே காலத்திலோ, அல்லது இந்தியாவுக்கு முன்னமேயோ முடக்கநிலையை அறிவித்தன. நேபாளத்தில் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 24ம் தேதி முதல் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது நேபாளத்தில் வெறும் இரண்டு பேருக்குதான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் முடக்கநிலை மார்ச் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த நாட்டில் 78 பேருக்குதான் தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரு, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மிகவும் முன்னதாகவே முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் 71 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மார்ச் 16ம் தேதி முடக்கநிலை அறிமுகம் செய்யப்பட்டது. ஜூன் இறுதிவரை இது நீடித்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மிக நீண்டகாலம் முடக்க நிலை நீடித்த நாடு இதுதான். ஆனால், ஜூன் மாத இறுதியில் முடக்க நிலை தளர்த்தப்பட்டபோது அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,82,000.
நியூசிலாந்திலும் முடக்கநிலைக் காலத்தில் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்தது. ஆனால், மற்ற நாடுகளைக் காட்டிலும் நியூசிலாந்தில் மிக அதிகமானோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனவே அங்கு நிறைய பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை புரிந்துகொள்ள முடியும்.
கூற்று: "இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 83 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கும் சுமார் 600 மரணங்கள் வரை நிகழ்ந்த அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றுடன் இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்க்கலாம்".
உண்மை என்ன?
இந்தியாவில் கொரோனா மரண எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது உண்மை. ஆனால், குறிப்பிட்ட அளவிலான கொரோனா மரண எண்ணிக்கைகள் புள்ளிவிவரங்களில் காட்டப்படாமல் போயிருக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகைக்கும் தோராயமாக 83 பேர் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 665 பேரும், பிரிட்டனில் 644 பேரும், பிரேசிலில் 725 பேரும், ஸ்பெயினில் 727 பேரும் இறந்துள்ளதை ஒப்பிட்டால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். கோவிட் 19 நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 10 சதவீதம் இந்தியாவில்தான் நிகழ்ந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர்தான் அமெரிக்க நாட்டில் உள்ளனர். ஆனால், உலகில் இதுவரை கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் 20 சதவீதம் இந்த நாட்டில்தான் நிகழ்ந்துள்ளது. கோவிட் 19 தொற்று ஏற்பட்டவர்களில் இறக்க நேரிட்டவர்களின் சதவீதமும் இந்தியாவில் குறைவுதான். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதும் ஒரு காரணம். அதே நேரம், கோவிட் 19 நோயால் ஏற்படும் எல்லா மரணங்களையும் இந்தியா கோவிட் மரணங்களாக ஆவணப்படுத்தியதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கோவிட் மரணங்களைப் பதிவு செய்வது ஒவ்வொரு நாட்டிலும் ஒருவிதமாக நடக்கிறது. எனவே நாடுகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிடுவது கடினமான செயல்.
ஆப்பிரிக்கா போன்ற உலகின் பிற பகுதிகளிலும் கோவிட் நோயால் நிகழும் மரண விகிதம் குறைவாக இருப்பதையும் குறிப்பிடவேண்டும்.
கூற்று: இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 5,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 25,000 ஆக இருந்தது.
உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
கிடைக்கிற புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தால் இது சரிதான். ஆனால், கிடைக்கிற புள்ளிவிவரம் என்பது எவ்வளவு விரிவாக பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதற்கு ஏற்ப அமைவது.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் குறைவுதான். ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடுவது. நிறைய பேருக்கு பரிசோதனை செய்தால், நிறைய பேருக்கு தொற்று உறுதி செய்யப்படும். மக்கள் தொகையில் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் விகிதம் என்று பார்த்தால் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மிக குறைவானவர்களுக்கே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையை இந்தியா தொடர்ந்து அதிகரிக்கிறது என்றபோதும்.
அக்டோபர் 20ம் தேதி நிலவரப்படி மக்கள் தொகையில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் இந்தியாவில் 69 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இந்த எண்ணிக்கை 377. அமெரிக்காவில் 407.
கூற்று: "ரேப்பிட் ஆன்டிஜென் பரிசோதனை என்று அழைக்கப்படும் அதிவிரைவு பரிசோதனை முறையைப் பயன்படுத்த தொடங்கிய முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று".
உண்மை என்ன?
இந்தியாவுக்கு முன்னதாகவே பல நாடுகள் இந்த ரேப்பிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால், இந்தப் பரிசோதனையின் துல்லியம் குறித்த கவலைகள் உள்ளன.
கோவிட் தொற்று உள்ளதா என்று அறிவதற்காக செய்யப்படும் பரிசோதனை முறைகளில் மிகவும் நம்பகமானது பிசிஆர் டெஸ்ட் என்படும் சோதனை முறை. ஆனால், இந்த சோதனையில் முடிவு வர நீண்ட நேரம் பிடிக்கும். எனவே பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ரேப்பிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு ஜூன் 14ம் தேதி ஒப்புதல் கொடுத்தது இந்தியா. ஜூன் 18ம் தேதி முதல் இந்தப் பரிசோதனை பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், முன்னதாகவே வேறு சில நாடுகள் இந்தப் பரிசோதனை முறையை பயன்படுத்தின.
இந்த உலகத் தொற்றில் முன்னதாகவே இந்த ரேப்பிட் ஆன்டிஜென் பரிசோதனையை நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கிய நாடுகளில் ஒன்று பெல்ஜியம். இந்நாட்டின் மருந்து மற்றும் உடல் நலப் பொருள்களுக்கான கூட்டாட்சி முகமை மார்ச் மாதமே ஆன்டிஜென் பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால், இந்த பரிசோதனை முறையை தற்போது பெல்ஜியம் பயன்படுத்தவில்லை. ஆன்டிஜென்களையோ, ஆன்டிபாடிகளையோ கண்டறியும் சோதனைகளின் நம்பகத்தன்மை தெளிவாக நிரூபிக்கப்படவில்லை, ஆவணப்படுத்தப்படவில்லை என்கிறது அந்நாட்டு அரசு.
முதல் முதலாக ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுக்கு ஒப்புதல் வழங்கிய நாடு அமெரிக்கா. நாள் மே 9ம் தேதி. அதற்கு அடுத்தபடியாக ஒப்புதல் வழங்கியது ஜப்பான். தேதி - மே 13. ஐந்து வகையான ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுகளுக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியது. அவற்றில் ஒன்று தென் கொரியாவிலும், ஒன்று பெல்ஜியத்திலும், ஒன்று தைவானிலும் தயாரிக்கப்பட்டவை. இரண்டு கிட்டுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
ஆனால் பெல்ஜியத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட டெஸ்ட் கிட்டுகளின் பட்டியலில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் டெஸ்ட் கிட்டுகள் நம்பகத்தன்மை குறித்த கவலையால் இடம் பெறவில்லை.
அதைப் போலவே உலக நாடுகள் பலவற்றுக்கு ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தென் கொரியா அவற்றின் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லை என்று கருதி தங்கள் சொந்த நாட்டில் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. அத்துடன் பிசிஆர் பரிசோதனைகளையே அது தொடர்ந்து அதிகரித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












