இந்திய விடுதலை போராட்ட வரலாறு: குதிரையில் இந்தியாவையே வலம் வந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் கொல்லப்பட்ட கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி
இந்தியாவில் மிகவும் அதிகமாக பயணம் செய்த வைஸ்ராய்களில் ஒருவராக மேயோ கருதப்படுகிறார். இந்தியாவின் நான்காவது வைஸ்ராய் பிரபு மேயோ, இந்தியாவில் தனது மூன்று ஆண்டு காலத்தில் சுமார் இருபதாயிரம் மைல்கள் பயணம் செய்திருந்தார். இந்த பயணத்தின் பெரும்பகுதி குதிரையின் மீதே செய்யப்பட்டது.
அவர் குதிரையில் ஒரே நாளில் 80 மைல் தூரம் வரை செல்வார் என்று அவரைப் பற்றி பிரபலமாக பேசப்பட்டது. இது தவிர, இந்தியாவில் அவர் நியமிக்கப்பட்டபோது, அந்த நேரத்தில் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த அனைத்து போக்குவரத்து முறைகளையும் அவர் பயன்படுத்தினார் - நீராவி, ரயில், யானைகள், யாக் மற்றும் ஒட்டகங்கள் கூட.
ஜே.எச்.ரிவெட் கர்னாக் தனது புத்தகம் "மெரி மெமரீஸ்"-ல் எழுதுகிறார், ஒரு முறை மத்திய இந்தியாவில், ஒரு இடத்திற்கு பயணம் செய்ய காளை வண்டிதான் கிடைக்கும் என மேயோவிற்கு தெரிய வந்தபோது அவர் தனது பைஜாமா மீது ஒரு கோட்டை அணிந்து கொண்டு, காலை வண்டியில் விரிக்கப்பட்டிருந்த வைக்கோலில் படுத்து விட்டார். தனது சுருட்டை கூட விட்டுக் கொடுத்த அவர், இதை விட நிம்மதியான இடம் கிடையாது என கூறினார். காலையில் தனது இலக்கை அடைந்த அவர்,தனக்கு மிகவும் நன்றாக தூக்கம் வந்தது என்றார் . கீழே இறங்கி, அவர் தனது சீருடையை அணிந்துகொண்டு, தனது கோட் மீது இருந்த வைக்கோல்களை தட்டிக் கொண்டார்.
கடைசிகாலத்தில் ஹாரியட் மலைக்குச் செல்ல திட்டம்
1872 ஆம் ஆண்டில், மேயோ பிரபு பர்மா மற்றும் அந்தமான் தீவுகளுக்குப் பயணம் செய்ய முடிவு செய்தார். அந்த நேரத்தில், ஆபத்தான கைதிகள் அந்தமானில் தங்க வைக்கப்பட்டனர், இதற்கு முன்னர் வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல் யாரும் அந்தமானுக்கு விஜயம் செய்யவில்லை.
1789 ஆம் ஆண்டில் முதன்முறையாக, லெப்டினன்ட் பிளேயருக்கு அந்தமானில் குடியேற யோசனை வந்தது. ஆனால் 1796 ஆம் ஆண்டில், மலேரியா பரவியதாலும் , உள்ளூர் பழங்குடியினரின் எதிர்ப்பினாலும் ஆங்கிலேயர்கள் இந்த தீவுகளை விட்டு வெளியேறினர்.

பட மூலாதாரம், DEA / BIBLIOTECA AMBROSIANA/Getty Images
1858 ஆம் ஆண்டில்,ஆங்கிலேயர்கள் ஆபத்தான கைதிகளை இங்கு அனுப்பத் தொடங்கினர். 200 கைதிகளின் முதல் குழு 1858 ஜனவரியில் இங்கு அனுப்பட்டது.மேயோ பிரபு அந்தமானுக்கு விஜயம் செய்தபோது, மொத்தம் 8,000 மக்கள் அங்கு இருந்தனர், இதில் 7,000 கைதிகள், 900 பெண்கள் மற்றும் 200 போலீசார்.
மேயோவின் அந்தமான் சுற்றுப்பயணம், 1872 பிப்ரவரி 8 தொடங்கியது. காலை ஒன்பது மணிக்கு, அவர்களின் கப்பல் கிளாஸ்கோ போர்ட்ட்ப்ளேரின் துறையில் நங்கூரமிட்டது. கப்பலிலிருந்து இறங்கியபோது, அவருக்கு 21 குண்டு முழக்க மரியாதை செலுத்தப்பட்டது. அதே நாளில் அவர் ராஸ் தீவில் உள்ள ஐரோப்பிய பாராக்ஸ் மற்றும் கைதிகளின் முகாமுக்கு விஜயம் செய்தார். அவர் தனது குழுவினருடன் சாதம் தீவுக்கு விஜயம் செய்தார். சாதம் தீவில் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் முன்கூட்டியே முடிவடைந்ததால், சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் ஒரு மணிநேரம் இருந்ததால், ஹாரியட் மலையை ஏன் பார்வையிடக்கூடாது என நினைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
இருட்டில் ஷேர் அலி அப்ரிடி கத்தியால் குத்தினார்
இந்த பயணத்தில் மேயோவுடன் சென்ற சர் வில்லியம் வில்சன் ஹண்டர், மேயோவின் சுயசரிதை 'லைஃப் ஆஃப் தி ஏர்ல் ஆஃப் மேயோ'வில் எழுதுகிறார்,' ஹாரியட் மவுண்ட் சுமார் 1,116 அடி உயரத்தில் இருந்தது. அதன் ஏற்றம் செங்குத்தாகவும் , மிகவும் கடினமாகவும் இருந்தது. கடுமையான வெயிலில் ஏறியதால் , அவரது குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் களைத்துப் போய் சோர்ந்து போயினர். ஆனால் மேயோ மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தார், அவர் குதிரையில் ஏற மறுத்துவிட்டார், வேறு யாராவது அதைப் பயன்படுத்தலாம் என்று கூறினார். சிகரத்தை அடைந்ததும், சூரிய அஸ்தமனத்தை 10 நிமிடங்கள் அனுபவித்து, எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்!
திரும்பிச் செல்ல மேயோவின் குழுவினர் இறங்கிய நேரத்தில், இருள் வந்துவிட்டது. ஹோப்டவுன் படகு துறையில் வைஸ்ராய் அவர்களை கப்பலுக்கு அழைத்துச் செல்ல ஒரு படகு காத்திருந்தது.

பட மூலாதாரம், CASSELL'S ILLUSTRATED HISTORY OF INDIA
தீப்பந்தங்களுடன் சிலர் மேயோவின் முன் நடந்து கொண்டிருந்தனர். மேயோவின் வலது பக்கத்தில் அவரது தனிப்பட்ட செயலாளர் மேஜர் ஓவன் பர்ன் மற்றும் இடதுபுறத்தில் அந்தமான் தலைமை ஆணையர் டொனால்ட் ஸ்டீவர்ட் இருந்தார். மேயோ படகில் ஏறவிருந்தபோது ஸ்டீவர்ட் காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முன்னே சென்றார். அப்போது, புதரில் மறைந்திருந்த ஒரு உயரமான பதான் மேயோவின் முதுகில் கத்தியால் குத்தினான்.
தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் ஒரு மனிதனின் கையும் கத்தியும் உயர்வதை பலரும் பார்த்ததாக ஹண்டர் எழுதுகிறார். அவன் மேயோவின் இரண்டு தோள்களுக்கும் இடையே கத்தியால் இரண்டு முறை குத்தினான். மேயோவின் செயலாளர் மேஜர் பர்ன், சிறுத்தை போல ஒரு மனிதன் மேயோவின் முதுகில் சவாரி செய்வதைக் கண்டார். கொலையாளி இரண்டு நொடிகளில் பிடிபட்டான்.
முழங்கால் வரை இருந்த தண்ணீரில் விழுந்த மேயோ, எப்படியோ தன்னைத் உயரத்திக்கொண்டு தனது செயலாளரிடம், 'பர்ன் அவர்கள் செய்து விட்டார்கள்' என்று கூறினார். பின்னர் அவர் உரத்த குரலில் கூச்சலிட்டு, நான் அதிகம் காயமடைந்திருப்பதாக தோன்றவில்லை என்றார்.
இதைச் சொன்னபடியே மேயோ மீண்டும் விழுந்தார். அவரது சாம்பல் நிற கோட்டின் பின்புறம், அவரது இரத்தத்தால் சிவந்திருந்தது. அங்கு இருந்த மக்கள் அவரது கோட்டை கிழித்து, கைக்குட்டை மற்றும் தங்களது கைகளால் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர். சில வீரர்கள் அவரின் கைகளையும் கால்களையும் தேய்க்கத் தொடங்கினர்.

பட மூலாதாரம், British Library
லார்ட் மேயோ இறந்தார்
இந்த சம்பவத்தைப் நேரில் கண்ட, மேயோவின் செயலாளர் மேஜர் பர்ன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள தனது ஆவணங்களில், "வைஸ்ராய் மென்மையான குரலில் என்னை கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று சொன்னார். நாங்கள் உடனடியாக மாலுமிகளின் உதவியுடன் அவரை அழைத்துக்கொண்டு படகு வரை கொண்டு வந்தோம். என் தலையை உயர்த்தி பிடியுங்கள் என்பதுதான் அவரது கடைசி வார்த்தைகளாகும். பின் மேயோ அவசரமாக காத்திருக்கும் கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டார்". என எழுதியுள்ளார்.
ஹண்டர் எழுதுகிறார், "கப்பலில் இருந்தவர்கள் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தனர்." மேயோவின் படகு கப்பலை அடைந்தவுடனேயே, அவருக்கு என்ன ஆனது என்பதை மக்கள் காண முடியாதபடி முழு கப்பல் விளக்குகளும் அணைக்கப்பட்டன. மேயோவை அவரது அறைக்கு எடுத்துச் சென்றனர். அவரை படுக்கையில் படுக்கவைக்கபட்டபோது, மேயோ இறந்துவிட்டதை அனைவரும் அறிந்தனர். விடியற்காலையில், கப்பலில் பறந்த பிரிட்டிஷ் கொடி அரை கம்பத்தில் பறந்தது.

பட மூலாதாரம், Tarikh-i-Ajib Book by Muhammad Jafar
1869ஆம் ஆண்டிலேயே ஒரு உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயரைக் கொல்ல சபதம்
மேயோவைக் குத்திய ஷெர் அலிக்கு, அப்போது இத்தகைய குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை அளிக்கப்பட்டது . மேயோவின் கொலைக்குப் பிறகு, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அதே கப்பலில ஷெர் அலியும் கொண்டு வரப்பட்டார் . பிரிட்டிஷ் அதிகாரிகள் ஷெர் அலியிடம் ஏன் இதைச் செய்தார் என்று கேட்டபோது, அவரது பதில் 'கடவுள் உத்தரவிட்டார்' என்பதாகும் .
இந்த வேலையில் யார் அவருக்கு உதவி செய்தார்கள்' என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, 'ஒரு மனிதனும் இல்லை. கடவுள்தான் இருந்தார் என்றார்.
ஷேர் அலி வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள தீரா பள்ளத்தாக்கில் வசிப்பவர், பஞ்சாபில் குதிரை படை போலீசில் பணிபுரிந்தவர். பெஷாவரில் தனது உறவினர் ஹைதரைக் கொன்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில், இந்த தண்டனை,அந்தமானில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பின்னர், தூக்கு தண்டனைக்கு முன் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,அவர் தனது பார்வையில் தனது பரம்பரை எதிரியைக் கொல்வது குற்றமல்ல என்று கூறியிருந்தார்.1869 ஆம் ஆண்டில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டபோதே,ஒரு உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயரை கொன்று பழிவாங்க வேண்டும் என்று சபதம் எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Tarikh-i-Ajib Book by Muhammad Jafar
ஷேர் அலி மரண தண்டனை
அந்தமானில் தண்டனைக்காக காத்திருந்தபோது, அவர் தனது இரைக்காக மூன்று ஆண்டுகள் காத்திருந்தார். 1872 ல் பிப்ரவரி 8 அன்று , லார்ட் மேயோவின் வரவுக்கான செய்தியைக் கேட்டதும், காலையிலிருந்து கத்தியைக் கூர்மைப்படுத்தத் தொடங்கினார். ஷேர் அலி மலைகளில் வாழும் ஒரு வலிமையான மனிதர். அவரது உயரம் 5 அடி 10 அங்குலம். தனது இருட்டறையில் கைவிலங்கு மற்றும் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தாலும், அவர் தனது உடல் வலிமையினால் ஒரு ஆங்கில காவல் அதிகாரியிடமிருந்து அவரது ஆயுதத்தை பறித்தார்.
ஆரம்பத்தில், அந்தமானில் தண்டிக்கப்படுகின்ற மௌல்வி தானேசரி மற்றும் பிற முஜாஹிதீன்கள் மேயோவைக் கொல்ல ஷெர் அலியை 'மூளைச் சலவை' செய்ததாக ஆங்கிலேயர்கள் சந்தேகித்தனர். ஆனால் ஆழ்ந்த விசாரணைக்குப் பிறகு,அது அல்ல என்று தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெலன் ஜேம்ஸ் தனது 'தி அசாசினேஷன் ஆஃப் லார்ட் மேயோ : த பர்ஸ்ட் ஜிகாத்?'ல் எழுதுகிறார் ,'ஷேர் அலியின் தோழர்களை விசாரித்தபோது, அவர் இந்த கொலையை மிகவும் கவனமாக திட்டமிட்டது கண்டறியப்பட்டது.
மேயோவின் வருகைக்கு முன்பே, அவர் தனது தோழர்கள் அனைவரிடமிருந்தும் இறுதி விடைபெற்றார். அவர் அனைவருக்கும் சில உணவுப் பொருட்களை தயாரித்து, தனது பணத்தை முழுவதுமாக அதில் செலவிட்டார். ஆனால் ஷேர் அலி இவ்வளவு தூரம் செய்வார் என்பதை அவர்கள் யாரும் உணரவில்லை. ஷெர் அலி முன்பு மேஜர் ஹ்யூக் ஜேம்ஸ் மற்றும் ரெய்னல் டெய்லருக்கு பெஷாவரில் குதிரைப்படை வீரராக பணியாற்றினார். டெய்லர் அவரிடம் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவர் ஷெர் அலிக்கு ஒரு குதிரை, கைத்துப்பாக்கி மற்றும் சான்றிதழை பரிசாக வழங்கினார்.

பட மூலாதாரம், Universal History Archive/Getty Images
ஷெர் அலியின் மரண உத்தரவு , விதிகளின்படி, கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. 1872, பிப்ரவரி 20, அன்று , தீர்ப்பாயம் தண்டனையை உறுதிசெய்தது, 1872 மார்ச் 11, ஷேர் அலி வைப்பர் தீவில் தூக்கிலிடப்பட்டார்.
அயர்லாந்தில் அடக்கம் செய்யப்பட்ட லார்ட் மேயோ
இந்த சம்பவம் பிரிட்டிஷ் பேரரசை உலுக்கியது. இந்த சம்பவம் நீண்ட காலம் வரை,வேண்டுமென்றே அதிகம் விவாதிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Universal History Archive/Getty Images
பேராசிரியர் ஹெலன் ஜேம்ஸ் தனது ஆய்வுக் கட்டுரை 'லார்ட் மேயோவின் படுகொலை: த பர்ஸ்ட் ஜிகாத்' - ல் 'இது முற்றிலும் எதிர்பாராதது, ஆனால் 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் வஹாபிகளின் பங்கு மற்றும்1871 செப்டம்பர் 20 அன்று வஹாபி சார்பு ஆதரவாளரான அப்துல்லா, கல்கத்தாவின் செயல் தலைமை நீதிபதி ஜான் நார்மன் -ஐ கொலை செய்த பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழலாம் என தயாராக இருந்திருக்க வேண்டும். இதற்கு முன்பும் , 1853 செப்டம்பர் 10, அன்று, பெஷாவரில், கமிஷனர் கர்னல் ஃப்ரெட்ரிக் மேக்சனின், பதான் ஒருவர் , அவரை ,அவரது பங்களாவின் வராந்தாவில் குத்திக் கொன்றார்.
லார்ட் மேயோவின் உடல், கிளாஸ்கோ என்ற அதே கப்பலால் கல்கத்தாவுக்கு (இப்போது கொல்கத்தா) கொண்டு வரப்பட்டது, இதில்தான் அவர் போர்ட் பிளேயருக்கு சென்றார். 1872 பிப்ரவரி 17, அன்று கல்கத்தாவை அடைந்த பின்னர், அவரது உடல் பிரின்செப் படித்துறையிலிருந்து ,அரசு மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது.
கல்கத்தாவில் வசிக்கும் ஒவ்வொரு ஆங்கிலேயரும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
அவரது உடல் இரண்டு நாட்கள் அரசு மரியாதைகளுடன் அரசு மாளிகையில் வைக்கப்பட்டது. பின்னர் அவர் பம்பாய்க்கும் பின் டப்ளினுக்கும் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் 1872 ஏப்ரல் 25 அன்று , அரச மரியாதைகளுடன் ஒரு தேவாலயத்தின் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












