கொரோனா வைரஸ்: "தீவிர பாதிப்புகளுக்கான ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகும்" - மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய உள்துறை செயலாளர்

பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு அவர் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், "கோவிட்-19 வைரஸ் கடுமையான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, போதுமான மற்றும் தடையற்ற ஆக்ஸிஜன் விநியோகம் இருப்பது அவசியமான நடவடிக்கை என்பதை அறிந்துள்ள அதே சமயம், வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், "சில மாநிலங்கள், மாநிலங்களுக்கு இடையிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தயாரிக்கும் இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை சில மாநிலங்கள் நிறுத்துவதாக உள்துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பாளர்கள் அவர்களின் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்த மாநிலத்துக்குள்ளாக மட்டுமே ஆக்ஸிஜன் விநியோகத்தை செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவதாகவும், பேரிடர் மேலாண்மை சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி அந்த தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் வருகிறது."

"மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் அத்தியாவசிய பொது சுகாதார பொருளாகும். நாட்டில் அதன் விநியோகத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவது, கோவிட்-19 வைரஸால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் நிலையில் மேலும் சிக்கலான தாக்கத்தை ஏற்படுத்தலாம்."

"எனவே, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்ல எந்த வித தடையும் ஏற்படுத்தப்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அத்தகைய சாதனங்களை கொண்டு செல்லும் வாகனங்களின் தடையற்ற நடமாட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்."

ஆக்ஸிஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவ பயன்பாடுக்கான ஆக்ஸிஜன்

"நேர காலமின்றி அவற்றின் நடமாட்டம் இருப்பதை உறுதிப்படுத்தி எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி நகரங்களுக்கு இடையேயும் அவை கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்."

"மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், சுகாதாரம், தொழிற்சாலைகள் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டவை அவற்றின் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் நடமாட்டத்தை உறுதிப்படுத்த பல்துறை குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும். இதில் தடங்கல் ஏற்படும் எந்தவொரு சூழல் குறித்தும் உடனடியாக இந்திய அரசின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்" என்று உள்துறைச் செயலாளர் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: