தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்து தமிழ் திசை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வடிகால் குழாய் அமைப்பு கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது மக்கள் வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் போலவே இந்த அமைப்பும் காணப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம்"

பட மூலாதாரம், நரேந்திர மோதி
தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் கல்வி கற்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
'தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் 21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோதி கூறியதாவது:
கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. ஆனால், நமது கல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மாணவர்களுக்கு அழுத்தம் தருவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் பெருமை தேடிக் கொள்ளும் விவகாரமாகவும் மாறியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்கள் மீதுள்ள அழுத்தத்தை நீக்குவதற்கு உதவும். கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. ஆனால், நமது கல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மாணவர்களுக்கு அழுத்தம் தருவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் பெருமை தேடிக் கொள்ளும் விவகாரமாகவும் மாறியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்கள் மீதுள்ள அழுத்தத்தை நீக்குவதற்கு உதவும். வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், மாணவர்கள் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் கல்வி பயில வேண்டும். அதை நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநில அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் காலமானார்"

பட மூலாதாரம், NurPhoto
சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். தற்போது இருக்கும் சத்தீஸ்கரில் இருந்த சக்தி மாகாண திவானாக பணியாற்றிய தாத்தாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார் அக்னிவேஷ்.
கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பின்னாளில் பணியாற்றிய சப்யாசாச்சி முகர்ஜியிடம் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றார்.
1970களில் ஆரிய சமாஜ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி ஆரிய சபா என்ற தனிக்கட்சியை தொடங்கிய சுவாமி அக்னிவேஷ். 2004-2014ல் இதன் அகில உலக தலைவராகவும் இருந்தார்.
ஹரியாணாவில் 1977-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1979ல் அம் மாநில கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதில், பெண்சிசு கொலை தடுப்பு போன்ற சமூக பணிகளில் பங்காற்றினார்.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடக்கத்தில் இணைந்து பணியாற்றினார். 2011-ல் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான தூதராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், கல்லீரல் நோய்க்கு டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுவாமி அக்னிவேஷ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












