தமிழகம் வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் சந்திக்கும் சிக்கல்கள் - கொரோனா வைரஸ் பொருளாதார நெருக்கடி

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்: 'கெட்டவர்களைக் கொரோனா காட்டிக்கொடுத்துள்ளது

பட மூலாதாரம், BBC / Madan Prasad

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக், ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கூலித் தொழிலாளியாக பணியாற்றியவர். சமீபகாலமாக கோவையில் வேலை செய்து வந்த இவர், கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்து, அடிப்படை தேவைகளுக்கான பெரும் நெருக்கடிகளை சந்தித்ததால், கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.

"இரண்டு வருடங்களாக கோவையில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனைச் சந்தையில் வேலை செய்து வந்தேன். லாரிகளிலிருந்து பொருட்களை இறக்குவது, குறிப்பிட்ட ஒரு கருவியை தேடிச்சென்று வாங்கிக் கொடுப்பது, கடைகளை சுத்தம் செய்வது, உதிரி பாகங்களை பிரித்து அடுக்குவது போன்ற வேலைகளை செய்து வந்தேன். சனிக்கிழமைகளில் தான் அந்த வாரத்திற்கான சம்பளம் கிடைக்கும். அதை வைத்து எனது செலவுகளையும் சமாளித்து, குடும்பத்துக்கும் பணம் அனுப்புவேன். ஒவ்வொரு மாதமும் நான் அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து எனது குடும்பம் காத்திருக்கும்."

"என்னைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு வேலை செய்து வந்தனர். கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக நாங்கள் அனைவரும் குடோன்களுக்குள் முடங்கிக்கிடந்தோம். கையில் இருந்த பணத்தை வைத்தும், தன்னார்வலர்கள் உதவிய பொருட்களை வைத்தும் அத்தியாவசிய உணவுத் தேவைகளை சமாளித்து வந்தோம். ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசின் உதவியோடு மீண்டும் பிகாருக்கே வந்துவிட்டேன்."

"ஏப்ரல் மாதம் முதல் நானும் எனது குடும்பத்தினரும் விவசாயம் செய்து வருகிறோம். இதில் சொற்ப அளவு சம்பளம்தான் கிடைக்கிறது. வேலையின்மை மற்றும் வறுமை காரணமாகத்தான் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு சென்றேன். அங்கு கிடைத்த வேலையும், சம்பளமும்தான் எங்களை இதுநாள் வரை காப்பாற்றியது. எனவே மீண்டும் தமிழ்நாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதற்கு, ரயில் போக்குவரத்து துவங்கிட வேண்டும், பயண கட்டணத்தொகை ஏற்பாடு செய்ய வேண்டும், கொரோனா பரிசோதனைகளை கடந்திட வேண்டும், தமிழ்நாட்டிற்கு திரும்புவதில் இதுபோன்ற சிக்கல்கள் ஏராளம் உள்ளன," என்கிறார் தொழிலாளி அபிஷேக்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இவரைப்போன்ற லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பாததால், சிறு மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமாணப் பணிகள் மற்றும் பின்னலாடை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை உருவாகியுள்ளதாக தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தித்துறை

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்த முக்கியமான துறையாக பின்னலாடை உற்பத்தித்துறை கருதப்படுகிறது. இதனால், கடந்த ஐந்து வருடங்களில் மட்டுமே ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள், பின்னலாடை தலைநகரமான திருப்பூர் மாவட்டத்தில் குடிபெயர்ந்துள்ளதாக பின்னலாடை நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்: 'கெட்டவர்களைக் கொரோனா காட்டிக்கொடுத்துள்ளது

பட மூலாதாரம், BBC / Madan Prasad

"திருப்பூரில் மட்டுமே இரண்டு லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா பொதுமுடக்கத்தின்போது, சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர். இதனால், அவர்களின் இடத்தை நிரப்ப உள்ளூர் பணியாளர்களை நியமித்துள்ளோம்" என்கிறார் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா.எம்.ஷண்முகம்.

"கடந்த ஆறு மாதங்களாகவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் போக்குவரத்து தடை ஆகிய காரணங்களால் பின்னலாடை நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் வராமல் இருந்தன. அதனால், வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றபோதும் உள்ளூர் பணியாளர்களை வைத்து மிகக்குறைந்த அளவில் கிடைத்த ஆர்டர்களுக்கான உற்பத்தியை செய்துவந்தோம். பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் மீண்டும் ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே, ஏற்கனவே இங்கு வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது. இதனால், பின்னலாடை நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மாநிலங்களுக்கிடையே ரயில்சேவை துவங்கியதும், சொந்த ஊர் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூரை நோக்கி வருவார்கள்" என உறுதியாக தெரிவிக்கிறார் இவர்.

கட்டுமானத் துறை

கட்டுமானத்துறையில் வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாததால் உள்ளூர் பணியாளர்கள், தங்களின் சம்பளத்தை பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார் கட்டுமானப் பொறியாளர் குருபிரசாத்.

"கட்டுமானப் பணிகளுக்கு அதிக அளவிலான உதவியாளர்களின் தேவை இருக்கும். குறிப்பாக, மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் உதவியாளர்கள் தேவைப்படுவார்கள். இதுநாள்வரை அந்த தேவையை வடமாநிலத் தொழிலாளர்கள் தான் பூர்த்தி செய்து வந்தனர்."

"கொரோனா பொதுமுடக்க காலத்தில் கட்டுமானப்பணிகள் தடைபட்டது, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலை உருவானது. குறிப்பிட்ட காலம் வரை கட்டுமான நிறுவனங்களே அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் செலவுகளை ஏற்றுக்கொண்டன. ஆனால், ஒரு கட்டத்தில் நிறுவனங்களாலும் பொருளாதார இழப்பை சமாளிக்க முடியாமல் போனது. வருவாய் இழப்பு மற்றும் கொரோனா அச்சத்தால் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர்."

கொரோனா வைரஸ்

"தற்போது, மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. வடமாநிலத் தொழிலாளர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீண்டும் பணிக்கு வரும்வரை உள்ளூர் பணியாளர்களை வைத்து வேலை செய்துவருகிறோம். ஆனால், வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாத சூழலை பயன்படுத்தி உள்ளூர் பணியாளர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். ஏற்கனவே, இவர்களின் சம்பளம் அதிகமென்பதால்தான் குறைந்த சம்பளத்தில் கடினமாக உழைக்கும் வடமாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்தி வந்தோம். பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பிவரும் இக்காலகட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகைக்காக கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது" என்கிறார் பொறியாளர் குருபிரசாத்.

சிறு மற்றும் குறு உற்பத்தித் துறை

தொழில் நகரமான கோவையில் உள்ள பெரும்பாலான நடுத்தர, சிறு மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்களில் லட்சக் கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கொரோனா பொதுமுடக்கத்தின்போது சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பாததால் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

"கடந்த 10 ஆண்டுகளாக, கோவையில் உள்ள இயந்திர பாகங்கள் உற்பத்தி செய்யும் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் அதிக அளவிலான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, மோட்டர் பம்பு தயாரிப்பு பணியிலும், வார்பட தொழிலும் கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும். இவை இரண்டிலும் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கணிசாமானோர் வேலை செய்து வந்தனர். ஆரம்பத்தில், இத்தொழில் பற்றி தெரியாதவர்களுக்கு, உரிய பயிற்சி அளித்து திறன்மிக்க பணியாளர்களாக உருவாக்கி வைத்திருந்த நிலையில்தான், கொரோனா நோய்தொற்றால் அவர்கள் சொந்தஊருக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை மட்டுமில்லாமல் தொழில் தெரிந்த திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது" என்கிறார் மோட்டர் பம்பு உற்பத்தியாளர் மணிராஜ்.

"ரயிலில் செல்ல அனுமதி கிடைக்காமல் இங்கேயே தங்கியிருந்த தொழிலாளர்களையும், உள்ளூர் தொழிலாளர்களையும் வைத்து தற்போது உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நவம்பர் மாதத்தில் மோட்டர் பம்பு விற்பனை அதிகரிக்கும், அதற்குள் வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என கூறுகிறார் இவர்.

பாதுகாப்பு அவசியம்

பெரும்பாலும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுவரும் வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை வரும்காலங்களில் நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் வட மாநிலத் தொழிலாளர் நலச் சங்கத்தினர்.

Indian Economy

பட மூலாதாரம், BBC / Madan Prasad

கொரோனா பரவல் காலத்தில் குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே சில நிறுவன உரிமையாளர்கள் தங்களுக்கு உதவி செய்ததாகவும், பொதுமுடக்கத்தின்போது உணவு, தங்குமிடம் மற்றும் குறைந்தபட்ச வருவாயை வழங்கியிருந்தால் பலர் சொந்த ஊருக்கு சென்றிருக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு நெறிமுறைகள்

சொந்த மாநிலங்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். தொழிலாளர் குறித்த அடிப்படை தகவல்களை அரசிடம் பதிவுசெய்வதொடு, அவர்களின் போக்குவரத்து செலவையும் நிறுவனங்களே ஏற்க வேண்டும், தமிழகத்திற்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் செலவில் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நோய்த்தொற்று பாதிப்புகள் இல்லை என்பதை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பணிபுரியும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும், கிருமிநாசினிகள் பயன்படுத்துவதையும் உறுதி செய்வதோடு, அவர்கள் தங்கியிருக்குமிடத்தை நிறுவனங்கள் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: