சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுஷாந்த் சிங் - ரியா

பட மூலாதாரம், RHEA CHAKRABORTY / INSTAGRAM

பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வசம் மும்பை காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி, பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார்.

அவரது மரணம் தற்கொலை அல்ல என்றும் அது ஒரு கொலை என்றும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பாலிவுட் திரையுலகில் சில பிரபலங்களின் நெருக்கடி மற்றும் திரைத்துரையில் சுஷாந்த் சிங்கை வளர விடாமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கைகளே சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியிருக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், அவரது சொந்த மாநிலமான பிஹார் போலீசில் கடந்த ஜூலை 25ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அதில், சுஷாந்த் சிங்கின் முன்னாள் தோழி ரியா சக்ரபர்த்தி மீது அவர் புகார் கூறியிருந்தார். மேலும், தனது மகனின் வங்கிக்கணக்கில் இருந்த ரூபாய் பதினைந்து கோடியை தனது கணக்குகளுக்கு ரியா மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

சுஷாந்த்சிங் ராஜ்புத்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுஷாந்த்சிங் ராஜ்புத்.

உயிரிழந்த நபர், தமது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது உயிரிழப்பு தொடர்பான புகார், பிஹார் காவல்துறையில் பதிவானதையும் அடிப்படையாக வைத்து, இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்க பிஹார் மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இதை ஏற்று, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மத்திய புலனாய்வுத்துறை, ரியா சக்ரபர்த்தி உள்ளிட்டோரின் பெயரை முதல் தகவல் அறிக்கையி்ல் குறிப்பிட்டு விசாரணையை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, சுஷாந்த் மரணம் தொடர்பான சம்பவம் மும்பையில் நடந்ததால், விதிகளின்படி அவர் உயிரிழந்த வழக்கை மகராஷ்டிரா மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ரியா. பீஹார் அரசும் அதன் தரப்பு விளக்கத்தை அளித்திருந்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான உத்தரவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹ்ரிஷிகேஷ் ராய் பிறப்பித்தார். அதில், தற்செயல் உயிரிழப்பு என்று குறிப்பிட்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பை காவல்துறை நடத்தி வரும் விசாரணை, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 174ஆவது பிரிவின்படி நடத்தப்படுவதால் அது ஒரு வரம்புக்குட்பட்ட விசாரணையாகவே இருக்கும் என்று கூறினார்.

மேலும், மர்மமான முறையில் நடந்ததாக சிபிஐ பதிவு செய்துள்ள இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாலும், அந்த விவகாரத்தை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பாக சிபிஐயே இருக்கும் என்பதாலும் அதில் யாரும் குழப்பம் அடையத்தேவையில்லை. அதன் விசாரணையில் வேறு எந்த மாநில அரசும் தலையிடத்தேவையில்லை. இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறைவசம் உள்ள அனைத்து விசாரணை தொடர்புடைய ஆவணங்களும் சிபிஐவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் பீஹார் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை சட்டப்பூர்வமானது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: