அயோத்தி ராமர் கோயிலால் ஆர்எஸ்எஸ்-க்கு என்ன லாபம்?

ராமர் கோயில் பூமி பூஜை

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, ராமர் கோயில் பூமி பூஜை
    • எழுதியவர், அனந்த் பிரகாஷ்,
    • பதவி, பிபிசி நிருபர்

ராமர் கோயில் இயக்கத்தால் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் அடைந்த பயன் என்ன?

இந்தக் கேள்விக்கான பதில், பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்யும் படத்தில் உள்ளது.

இந்தப் படத்தில், விதிமுறைகளைப் பின்பற்றி பூஜை செய்யும் பண்டிதர் ஒரு புறமும் நடுவில் பிரதமர் நரேந்திர மோடியும், அவருக்கு இடப்புறம் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்தும் உள்ளனர்.

மதம், அரசு மற்றும் சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கம் வெளிப்படையாகக் காணப்பட்டது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்.

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பல தசாப்த கால வரலாற்றில் இது ஒரு பொன்னான தருணமாக இருக்கலாம்.

பூமி பூஜைக்குப் பிறகு சங்கத்தலைவர் மோகன் பகவத்தும், "இது ஒரு மகிழ்ச்சியான தருணம், பல விதமாகவும் மகிழ்ச்சி. ஒரு உறுதி எடுத்துக்கொண்டோம். எனக்கு நினைவிருக்கிறது. எங்களது அப்போதைய தலைவர், பாலா சாஹேப் தேவ்ரஸ் ஜி, இதை முன்னெடுக்கும் முன்பு ‘இருபது, முப்பது ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தால் தான் ஒரு நாள் இது வெற்றி பெறும்’, என்று கூறினார். 20, 30 ஆண்டுகள் நாங்கள் உழைத்தோம். 30-ஆவது ஆண்டின் தொடக்கத்தில் எங்கள் வேண்டுதல் நிறைவேறும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம்.” என்றார்.

பகவத் தனது ஒன்பது நிமிட உரையில், 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ராமர் கோயில் கட்டுமான நிகழ்ச்சிக்கான முழுப் புகழையும் சங்கமே பெற முயற்சிப்பது தெளிவானது.

ஆட்சியை நெருங்கிவிட்டது சங்க் பரிவார்

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் குறித்த 'ஆர்.எஸ்.எஸ் – த ஐகன்ஸ் ஆஃப் இந்தியன் ரைட்’ என்ற புத்தகத்தை எழுதிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய், ‘இந்த நிகழ்வில் சங்கம் ஈடுபட்ட விதத்திலிருந்து, சங்க பரிவார், அரசாங்கத்தின் திட்டத்தில் ஒரு இயல்பான ஸ்வாதீனம் பெற்றிருப்பதைக் காட்டுகிறது’ என்று கூறுகிறார்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Hindustan Times

முகோபாத்யாய் மேலும் கூறுகையில், "இந்தியாவில், ஆட்சிக்கும் மதத்திற்கும் இடையிலான கோடு எப்போதுமே சற்று மங்கலாகத் தான் இருந்துள்ளது, என்றாலும் இது போல ஒரு போதும் மங்கலானதில்லை. சங்க் பரிவார் இப்போது அரசாங்க நிகழ்ச்சியின் இயல்பான ஒரு பகுதியாக மாறுகிறது. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தை அரசாங்கத்திற்கு இவ்வளவு நெருக்கமாக ஒரு போதும் பார்த்ததில்லை. இது, இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய மாற்றங்களுக்கான அறிகுறியாகும்.” என்கிறார்.

"கலாச்சார தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. மோகன் பகவத், இந்த நிகழ்வில் பங்கெடுத்தது, ராமர் கோயில் இயக்கத்தின் வெற்றியில் சங்கத்தின் உரிமையை நிலை நாட்டும் முயற்சி என்பது தெளிவாகிறது.”

ஆனால் இந்திய அரசியலில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் இந்த அந்தஸ்தை எவ்வாறு அடைந்தது என்ற கேள்வி எழுகிறது.

ராமர் பயன்படுத்தப்பட்டாரா?

ஒரு சமூகத்தின் மத, அரசியல் மற்றும் சமூக வரலாற்றைப் படிப்பவர்கள் பெரும்பாலும் புரிந்து கொள்ள விரும்புவது, மத இயக்கங்களால் மத அமைப்புகள் உருவாகின்றனவா அல்லது மத அமைப்புகளால் மத இயக்கங்கள் தொடங்கப்படுகின்றனவா என்பது தான்.

அயோத்தி மற்றும் சங்கத்தைப் பொருத்தவரையில், ராமர் கோயில் இயக்கம், சங்கத்திற்குப் பரவலான வாய்ப்பைக் கொடுத்ததா அல்லது சங்கம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் காரணமாக ராமர் கோயில் இயக்கம் வலுப்பெற்றதா என்ற கேள்வி எழுகிறது.

மூத்த பத்திரிகையாளர் சுனிதா அரோன் ராமர் கோயில் கட்டுமானம், ஆர்.எஸ்.எஸ்ஸின் மிகப்பெரிய வெற்றி எனக் கருதுகிறார்.

"ராமர் கோயில் இயக்கம், ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டுள்ள பல விவகாரங்களில் ஒன்றாகும். தலித்துகளை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்க, ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்கள். சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்யப்பட்டது. அசோக் சிங்கால் ஒரு தலித் விருந்தில் கலந்து கொண்டார். அந்த அடிப்படையில், இந்த இயக்கத்தின் வெற்றியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாகவே நான் நினைக்கிறேன்”, என்கிறார் அவர்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் பசு வதை விவகாரத்தையும் எழுப்பியது, ஆனால் ராமர் கோயில் இயக்கம் மதம் சார்ந்த ஒரு விஷயம் என்பதால் ஏராளமான மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். ஏனெனில் ராமர் என்பது பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது.”

பரவலானதற்கு காரணம் ராம நாமமா?

ராம நாமம் அரசியலில் சிறப்புத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிராவில் அரசியல் செய்து வரும் தாக்கரே குடும்பமும் இந்த இயக்கத்தில் தனக்குப் பங்கிருப்பதாகக் கூறிக்கொள்ள விரும்புகிறது.

அத்தகைய சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் ராம நாமத்தால் என்ன லாபமடைந்தது என்ற கேள்வி எழுகிறது. தங்கள் உறுதி நிறைவேறியதாக மகிழ்ச்சியடையும் மோஹன் பகவத் சார்ந்துள்ள ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு இதில் என்ன பங்கு என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த பல தசாப்தங்களாக இந்த இயக்கத்தைப் பற்றி எழுதி வரும் ஒரு மூத்த பத்திரிகையாளர் ராம் பகதூர் ராய், ஆர்எஸ்எஸ், ராமர் கோயில் இயக்கத்துக்கு ஆதரவளித்தது உண்மை தான், ஆனால், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைமையில் தான் இது சாத்தியமானது என்கிறார்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Hindustan Times

"இந்த இயக்கத்தில் சங்க பரிவார் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், சாதுக்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டனர். ஒரு வகையில், இந்த முழு இயக்கத்திற்கும் மையப் புள்ளியாக விஷ்வ ஹிந்து பரிஷத் இருந்தது. நீண்டகாலம் நடந்த இந்தப் போராட்டத்தின் போது, சங்க பரிவார் மற்றும் வி.எச்.பி தலைவர்களுக்கு இடையே ஒரு மோதலும் இருந்தது.” என்றும் அவர் கூறுகிறார்.

இந்த ராமர் கோயில் விவகாரத்தில் ஒரு சோதனை முயற்சியாக இருந்தது ரத யாத்திரை நிகழ்வு தான். இதற்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. அந்தச் சமுதாய மக்களிடன் நம்பகத் தன்மை பெற்ற ஒரு அமைப்பு ஒரு சமுதாய விவகாரத்தைக் கையில் எடுக்கும் போது, அதற்கு மக்களின் ஆதரவு இயல்பாகவே கிடைக்கிறது.

1980 ஆம் ஆண்டில் நடந்த மீனாக்ஷிபுரம் சம்பவத்தின் உதாரணத்தை அவர் மேற்கோளிட்டு, “மீனாக்ஷிபுரம் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாலாசாகேப் தேவ்ரஸ் ஆற்றிய பங்கு தனித்தன்மை வாய்ந்தது. 1980 இல், ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகளின் மாநாடு பெங்களூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்துக்களின் ஒற்றுமை என்பது முக்கிய விஷயமாகக் கொள்ளப்பட்டது.. பாலா சாஹேப் தேவ்ரஸ் காந்திய சோசலிசத்தை ஆதரிக்கும் பாஜகவைத் தங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தார். இதனால், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதனால் ஆர்.எஸ்.எஸ்ஸும் பயனடைந்தது, பாஜகவும் ஒரு பிரதான கட்சியாக உருவெடுத்தது. ” என்று கூறுகிறார் ராய்.

ஆர் எஸ் எஸ்-ன் எதிர்காலம் என்ன?

ஒரு சித்தாந்தம், ஒரு சமூகத்திற்குச் செய்யப்படும் அநீதிகளுக்குச் செவிசாய்க்காதவரை, அது வெற்று சித்தாந்தமாகவே கருதப்படுகிறது.

ஆனால் அதே சித்தாந்தம் ஒரு சமூகத்தின் குறைகள், பிரச்சினைகள், அச்சங்கள் மற்றும் கவலைகளுக்கு ஒரு தளத்தை வழங்கத் தொடங்கி, அச்சமூகத்திற்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கனவைக் கொடுக்கும் போது, தங்களுக்குச் செய்யப்படும் அனைத்து அநீதிகளுக்கும் பழிவாங்க அந்தச் சித்தாந்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது அச்சமூகம். இது அந்த சிந்தாந்தத்தின் எழுச்சிக்கும் துணை செய்யும்.

இது சோஷலிசம் முதல் முதலாளித்துவம் வரை, அனைத்து சித்தாந்தத்திற்கும் பொருந்தும். இது ராமர் கோயிலுக்கும் பொருந்தும், ஹாகியா சோஃபியாவுக்கும் பொருந்தும்.

இந்த விஷயம் ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் சித்தாந்தத்திற்கும் பொருந்தும் என்றே தெரிகிறது.

இந்தக் கட்டத்திற்குப் பிறகு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் தான் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் நம்புகிறார்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Hindustan Times

மேலும் அவர், "இன்றைய நிகழ்வில், ராம் ஜனமபூமி இயக்கத்தை வழிநடத்தியதாக ஆர்எஸ்எஸ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ராமர் கோயில் தொடர்புடைய அரசியல் எந்த வடிவம் எடுக்கும் என்பதைத் தற்போது கணிப்பது கடினம், ஏனெனில் பிரதமர் மோடி முதல் முறையாக வெவ்வேறு ராமாயணங்களை குறிப்பிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதிலாக, சியாவர் ராம் சந்திரா என்ற முழக்கத்தை எழுப்பினார். இத்தகைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் இந்த அரசியல் போக்கு எப்படி மாறும் என்று சொல்வது கடினம்… ” என்று கூறுகிறார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தன்னைத் தானே இந்த யுகத்தின் ராமராக முன்வைக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

தற்போது, ஒரு பரந்த இந்து சமுதாயத்தின் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ் உடன் இணைத்துள்ள இந்தக் கோயில் விவகாரத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது அல்ல கேள்வி.

இந்த சித்தாந்தத்தை வளர்க்க, இப்போது எந்த விவகாரத்தைக் கையில் எடுக்கப்போகிறார்கள் என்பது தான் இப்போது எழும் கேள்வி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: