மருத்துவக் கழிவை பாதுகாப்பாக கையாளாவிடில் கொரோனா சமூகப் பரவலாகும் - ஆர்வலர்கள் எச்சரிக்கை

மருத்துவக் கழிவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களிலிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை முறையாகக் கையாளவில்லை என்றால் கொரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக எச்சரிக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு அகற்றப்படுகிறது. சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (Common Bio-medical waste treatment Facility) கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படுகிறது.

மருத்துவக்கழிவுகளை மட்டுமே கையாள்வதற்காக தமிழகத்தில் 11 Common Bio-medical waste treatment Facility மையங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் 8 மட்டுமே இயங்கி வருவதாகவும், கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், மருத்துவக்கழிவுகளை கையாள்வதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் தெரிவிக்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் பொறியாளர் வீ.பிரபாகரன்.

"தமிழ்நாட்டில் தினமும் 47 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தகவல் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவ கழிவுகளைக் கையாளக்கூடிய 11 மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மையங்கள் மட்டுமே உள்ளன.

Banner image reading 'more about coronavirus'
Banner

''சென்னையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளில் வெறும் 25 சதவிகிதத்தை மட்டுமே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தக் கட்டமைப்புகள் உள்ளன. மீதமுள்ள மருத்துவ கழிவுகள் முறையாக கையாளப்படாமல், எந்தவிதமான பாதுகாப்புமில்லாமல் குழி தோண்டி புதைக்கப்படுவதும், மாநகராட்சி திடக்கழிவுகளுடன் இந்த மருத்துவக் கழிவுகள் கலப்பதும் இயல்பாக நடைபெறுவதால்தான், 'நீர்நிலைகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்' என்ற செய்திகளைப் பார்த்து வருகிறோம்.''

''சமீபத்தில் சென்னை அனைகாப்புத்தூர், மண்ணிவாக்கம், புழல் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் டன் கணக்கில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் இதற்கு ஒரு உதாரணம். கடந்த நிதிநிலை அறிக்கையில் திடக்கழிவு மேலாண்மைக்கென 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதில் மருத்துவக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்துக் கட்டமைப்புகளை உருவாக்கி இருந்தால் இந்த நிலையைச் சமாளித்திருக்க முடியும்" என கூறுகிறார் பிரபாகரன்.

தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் காஞ்சிபுரத்திலுள்ள இரண்டு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல், திருச்சி, நாகை புதுக்கோட்டை, அரியலூர், சிவகங்கை மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மையத்திற்கும், வேலூர், வாணியம்பாடி திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் காட்பாடியில் உள்ள மையத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் ராமநாதபுரம் மற்றும் மதுரையில் இயங்கி வரும் மையங்களுக்கும், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரியில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் திருநெல்வேலியில் இயங்கிவரும் மையத்திலும் தரம் பிரிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது.

மேற்கு மண்டலமான சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் மையத்திலும், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் கோவை மற்றும் நீலகிரியில் இயங்கிவரும் மூன்று மையங்களிலும் தரம் பிரிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலான மையங்களில் உள்ள எரியூட்டு இயந்திரங்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி மேம்படுத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கிறார் பிரபாகரன்.

"மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் செயல்பாட்டிற்கு, கழிவுகளை அதீத வெப்பத்தில் எரிக்கும் சாம்பலாக்கிகள் (Incinerators) என்று சொல்லப்படும் கருவி மிக முக்கியமானது. இந்த சாம்பலாக்கிகளின் கட்டுமானம் மற்றும் பயன்பாட்டிற்கென மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் விதிகளை வகுத்துள்ளது. அதில் வெப்பம் 1000 டிகிரி யில் இருந்து 1200டிகிரி வரை இருக்க வேண்டும். காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் மேலும் பாதரசம், சல்பர், HCL, நைட்ரோஜன் வாயு, மீதேன் வாயு ஆகிய நச்சு வாயுக்களை கண்காணிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் போன்றவை மிகவும் முக்கியமான நிபந்தனைகள்.’’ என்கிறார் பிரபாகரன்.

மருத்துவக் கழிவு

பட மூலாதாரம், Getty Images

’’தற்போது இயங்கும் பல மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் பரிந்துரைத்திருக்கும் தரத்திற்கு தங்களது சாம்பலாக்கிகளை மேம்படுத்தாமல், விதிகளை பின்பற்றாமல் இயங்கிக்கொண்டிருகின்றன."

"தற்போது கொரோனா காலத்தில் அபாயகரமான மருத்துவக்கழிவுகள் அதிகம் உற்பத்தியாகும் நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் நிறுவனங்களில் உள்ள சாம்பலாக்கிகள் கழிவுகளை உரிய வெப்பத்தில் எரிக்கவும், வெளியேறும் மாசுக்களை கட்டுப்படுத்தவும், புகையை பாதுகாப்பான வகையில் 30மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ள புகைபோக்கியை கொண்டு வெளியேற்றும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் இவர்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டெக்னோ தெர்ம் என்ற மருத்துவக்கழிவு சுத்திகரிக்கும் நிறுவனத்தின் அதிகாரி சுதாகர் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார்.

"இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மருத்துவக்கழிவுகள் மிக கவனமாகவும் நேர்த்தியாகவும் கையாளப்படுகிறது. கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து 3 அடுக்கு பாதுகாப்பு பைகளில் மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மருத்துவ கழிவுக்கான பிரத்தியேக வாகனங்களில் ஏற்றி, மிகக்கவனமாகச் சுத்திகரிப்பு மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டு உடனடியாக அவை எரிக்கப்படுகின்றன. எரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளின் சாம்பலை சென்னை மற்றும் மதுரையில் இயங்கிவரும் சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்புகிறோம். அங்கு அவை நிலத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன." என்கிறார் சுதாகர்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

"மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதற்கென பிரத்தியேக வாகனம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர் குழுக்களை நியமித்துள்ளோம். மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு செயல்பாடுகளைக் கண்காணிக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரத்யேக மொபைல் செயலி உள்ளது. அதில், சேகரிக்கப்படும் மருத்துவ கழிவு குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு, மருத்துவக்கழிவுகளை கையாள்வதில் மிக கவனமாகத் தமிழகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பொதுமக்கள் சிலர் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் தாங்கள் பயன்படுத்திய முகக்கவசம் மற்றும் கையுறைகளை மற்ற குப்பைகளோடு அலட்சியமாக வீசிவிடுகின்றனர்" என்கிறார் இவர்.

கடந்த வாரம் கோவை நகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க மேம்பாலத்திலும், நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் மேட்டுப்பாளையம் சாலையிலும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் மர்ம நபர்களால் வீசப்பிட்டிருந்தன. இதுகுறித்து கோவை மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டு, தூய்மை பணியாளர்கள் மூலம் அவை அகற்றப்பட்டன.

மருத்துவக் கழிவு

பட மூலாதாரம், Getty Images

மருத்துவக்கழிவுகளை தனியாக பிரித்து தரும்படி பொதுமக்களிடம் பலமுறை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் குப்பைகளை தரம் பிரிக்காமல் தருகின்றனர். இதனால், மருத்துவக்கழிவுகளை கையாள்

கடும் சவாலாக உள்ளதாகவும், கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்படாத குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவகழிவுகளின் மூலம் தங்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சிலர்.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளைக் கொண்ட மருத்துவக்கழிவுகளை பயனுற்றநிலையில் இருக்கும் நிலங்களிலும், வனப்பகுதிகளிலும் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கொரோனா நோய்த்தொற்று பலமடங்காகப் பரவும் அபாயமுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள். எனவே, மருத்துவக்கழிவுகளை கையாள்வதைத் தீவிரமாகக் கண்காணித்து, பாதுகாப்பான முறையில் அவை அப்புறப்படுத்த வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்வது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: