"இந்தியாவில் கோவிட்-19 சமூகப் பரவல் நிலையை அடையவில்லை" - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

பட மூலாதாரம், ARUN SANKAR
"இந்தியா மிகப்பெரிய நாடு. ஆனால், இங்கு கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கோவிட்-19 சமூகப் பரவல் நிலையை அடையவில்லை," என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் தொற்றால் உண்டாகும் மரணங்களைப் பொறுத்த வரை ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 0.59 எனும் விகிதமே இருப்பதாக ஜசிஎம்ஆர் கூறுகிறது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 20.77 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. சர்வதேச சராசரியான 91.67 உடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து நாம் கண்டறிய வேண்டும். முறையான கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றும் பேராசிரியர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைவிட அதில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.


இந்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அதிகம் பேர் வீடு திரும்பியிருப்பதாக கூறுகிறது. தற்போது 2 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை இருப்பது உறுதி செய்யப்பட்டு, உலகளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
கொரோனா தொற்றால் குறைந்தது 8 ஆயிரம் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னமும் இறப்பு விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது வரவேற்கத்தக்க செய்தியாக இருந்தாலும், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால், நாட்டின் சுகாதார அமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.
அதே நேரத்தில் பல இடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதும் அதிகமாகிக் கொண்டு வருகிறது.
ஆனால், இது நாடு முழுக்க ஒரே மாதிரி இல்லை. ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அதிகளவிலான கொரோனா பரிசோதனைகளை செய்து வருகின்றன.
உதாரணமாக தமிழ்நாட்டில் 10 லட்சம் பேரில் 18,000க்கும் மேற்பட்டோருக்க பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், அதுவே கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் 10 லட்சம் பேரில் 4,668 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஜூலை இறுதிக்குள் சுமார் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாற்குறை இருப்பதாக தெரிகிறிது.

பட மூலாதாரம், ARUN SANKAR
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் தாக்கம் எந்தளவிற்கு உள்ளது என்பதையும் இந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளோம்.
மலேசியாவில் 46.7% குற்றச் செயல்கள் குறைந்துள்ளன
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த 84 நாட்களில் மலேசியாவில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 46.7 விழுக்காடு அளவுக்கு குறைந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், 84 நாட்களில் 10,134 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 19,014 குற்றச் சம்பவங்கள் பதிவாகி இருந்ததாகவும் காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
இதற்கிடையே, மலேசியாவில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. 51 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
28 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றால் மட்டுமே மலேசியா கோவிட்-19 நோய் இல்லாத நாடு என்று அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு மலேசியாவில் இருந்து யாரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 31,600 மலேசிய இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பத்திருந்தனர்.
நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன் கருதியே அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிலவரம்

பட மூலாதாரம், Anadolu Agency
சிங்கப்பூரில் புதிதாக 422 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 39,387ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 நோயில் இருந்து இதுவரை 26,523 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் இருந்து 529 பேர் தமிழகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணிகளுக்காக மூன்று சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்றும், அவை மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படும் என்றும் 'இந்தியா இன் சிங்கப்பூர்' டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூரில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்கள் 5,500 பேர் மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 40 ஆயிரம் பேருடன் இவர்களும் தங்களது வழக்கமான பணிக்குத் திரும்ப அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்தை சிங்கப்பூரும் இனி பயன்படுத்த உள்ளது. எனினும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியே தற்போது வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்து பல்வேறு சோதனைகளுக்குப் பின் நோயாளிகளுக்கு பலன் தரக்கூடியது என்பது உறுதி செய்யப்பட்டதாக அந்த ஆணையம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












