டெல்லியில் ஐந்து ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய பூகம்பம் நிகழப் போகிறதா?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
    • பதவி, பிபிசி இந்தி

ஏப்ரல் 12ல் இருந்து மே 3ஆம் தேதிக்குள் மட்டும் டெல்லி மற்றும் என்சிஆர் எனப்படும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 7 முறை நிலநடுக்கம் மற்றும் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கங்களை கண்காணிக்கும் தேசிய மையம் பதிவு செய்துள்ளது.

இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் நான்கு புள்ளிகளுக்கு மேல் இல்லை. 5 புள்ளிகளுக்குள் இருந்தால், அந்த நிலநடுக்கங்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவே.

இந்நிலையில் இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.

முதல் கேள்வி. டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள என்சிஆர் பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது ஏன்? இரண்டாவது இதுகுறித்து நாம் எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டியுள்ளதா?

அதற்கு முன்னதாக இந்தியாவில் நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் 59 சதவீத நிலப்பகுதி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள பகுதியாக புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மற்ற நாடுகளை போலவே இந்தியாவிலும் இது மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், எங்கு குறைவு என்பது பூமியின் உள் அடுக்குகளின் புவியியல் இயக்கங்களை சார்ந்து பிரிக்கப்படுகிறது.

இது ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. மண்டலம் 1ல் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மண்டலம் 5ல் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய பூகம்பம் டெல்லியில் நிகழப் போகிறதா?

பட மூலாதாரம், Hindustan Times

டெல்லி - என்சிஆர் பகுதி நான்காவது மண்டலத்தில் இருக்கிறது. இதனால்தான் அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகிறது.

இதுவே மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரூ போன்ற பெரிய நகரங்கள் 3வது மண்டலத்தில் வருகிறது. அதோடு, டெல்லி இமயமலைக்கு அருகில் இருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

மிகப்பெரிய நிலநடுக்கத்தை டெல்லி தாங்குமா?

டெல்லியின் பல கட்டடங்கள் பெரிய நிலநடுக்கத்தை தாங்கும் நிலையில் இல்லை என்கிறார் இந்திய கட்டமைப்பு பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மகேஷ் தன்டன்.

"சராசரி அளவிலான நிலநடுக்கத்தை விட பெரிய அளவிலான நிலநடுக்கம் டெல்லியில் ஏற்பட்டால், அங்குள்ள 70-80% கட்டடங்கள் அதனை தாங்கும் நிலையில் இல்லை என கணக்கிடப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த பல தசாப்தங்களில் யமுனை நதிக்கரையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகளவிலான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அதனை கட்டுவதற்கு முன் மண் பரிசோதனை செய்யப்படவில்லை" என்று அவர் தெரிவிக்கிறார்.

டெல்லி என்சிஆர் பகுதியில் இருக்கும் அடர்த்தியான மக்கள் தொகையும் ஒரு முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அங்கிருக்கும் லட்சக்கணக்கான கட்டடங்களில் 1.5 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்கின்றனர். அதோடு அங்கிருக்கும் பல கட்டடங்கள் பல தசாப்தங்கள் பழமையானவை ஆகும்.

வட இந்தியா மற்றும் டெல்லியில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் அதிர்வுகள் தொடர்ந்து இருக்கும் என்று கூறும் புவியியலாளர்கள், அடுத்த 5 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

டெல்லிக்கு அருகில் உள்ள பானிபட்டின் கீழ் இருக்கும் fault line காரணமாக, மிக்பெரிய அளவிலான பூகம்பம் வருவதை தவிர்க்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

மிகப்பெரிய பாறைகளின் தொடர்ச்சி விட்டுப்போயிருப்பது, அல்லது தவறாக இடம் பெயர்ந்திருப்பதை புவியியல் ரீதியாக fault line என்று கூறுவார்கள்.

ஆனால், மிக்பெரிய அளவிலான பூகம்பம் எங்கு, எப்போது, எந்த அளவிற்கு நிகழும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்கிறார் வாடியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹிமாலயன் டெக்னாலஜியின் தலைமை புவியியலாளர் கல்சந்த ஜெயின்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தற்போது டெல்லி என்சிஆர் பகுதியில் ஏற்படும் சிறு நில அதிர்வுகள், பெரிய நிலநடுக்கத்திற்கான காரணியாக அமையலாம் என்றும் அவர் கூறுகிறார்.

மற்றொரு முக்கிய விஷயம், பெரிய அளவிலான பூகம்பம் ஏற்பட்டால், நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இருந்து அதனை சுற்றியுள்ள 250–350 கிலோ மீட்டர் பரப்பளவில் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உதாரணமாக 2001 குஜராத் புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 300 கிலோ மீட்டர் தாண்டி இருந்த அகமதாபாத்திலும் பேரழிவை ஏற்படுத்தியது.

டெல்லியில் இதற்கு முன்பு பெரிய அளவிலான பூகம்பம் ஏற்பட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால், 1720ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அது ரிக்டர் அளவில் 6.5 - 7ஆக பதிவாகி இருக்கிறது. அப்போது இந்த நிலநடுக்கம் டெல்லியில் மிக்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது

நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவை டெல்லி எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா என்பதுதான் தற்போதைய கேள்வி.

இந்தியா இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதில் முன்பைவிட தற்போது முன்னேறி இருப்பதாக கூறுகிறார் SAARC பேரழிவு நிர்வாக மேலாண்மை மையத்தின் இயக்குநர் பேராசிரியர் சந்தோஷ் குமார்.

"இது ஒரு கணக்கீடுதான். டெல்லியில் உள்ள பல இடங்களின் கட்டடங்கள் ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றன. ஆனால், அதே சமயத்தில் பல பகுதிகள் பாதுகாப்பாக இருக்கின்றன. அனைவரும் ஆபத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கட்டட விதிமுறைகளை மீறாது இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: