நரேந்திர மோதி அரசு முன்பு விமர்சித்த MNREGA திட்டத்தை இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறதா?

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் துவக்கத்தில் கடுமையாக விமர்சித்தார் பிரதமர் நரேந்திர மோதி. ஆனால், தற்போது மத்திய அரசு அத்திட்டத்தையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்கத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா, இல்லையா என்பது குறித்து பேசிய அவர், "இந்தத் திட்டத்தை நான் கலைத்துவிடுவேன் என நினைக்கிறீர்களா? என்னுடைய அரசியல் அறிவு அதை அனுமதிக்கவில்லை. 60 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்பதில் தோல்வியடைந்ததன் வாழும் உதாரணமாக இந்தத் திட்டம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார காலகட்டத்திலிருந்தே தொடர்ச்சியாக இந்தத் திட்டத்தை விமர்சித்துவந்தார் நரேந்திர மோதி. ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த விமர்சனம் தொடர்ந்த நிலையில், 2014 அக்டோபரில் ஜான் த்ரே உள்ளிட்ட இந்தியாவின் 28 முன்னணி பொருளாதார நிபுணர்கள் பிரமதர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்தக் கடிதத்தில் இந்தத் திட்டத்தை நீக்கக்கூடாது; நீர்த்துப்போகச் செய்யக்கூடாது எனக் கோரியிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோதி இந்தத் திட்டம் குறித்து எதிர்மறையான கருத்துக்களையே வெளியிட்டுவந்தாலும் தேசிய ஜனநாயக் கூட்டணியின் நிதிநிலை அறிக்கையில், இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2013 - 14ஆம் ஆண்டு நிதி அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கு 33,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2015-16ல் அதாவது பிரதமர் இந்தத் திட்டத்தை விமர்சித்த அதே ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 34,699 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து 2016-17ல் 38,500 கோடியும் 17-18ல் 48,000 கோடியும் 18-19ல் 55,000 கோடியும் 2019-20 பட்ஜெட்டில் 60,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சில ஆண்டுகளில், இத்திட்டத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கியதைவிட கூடுதலாக செலவழிக்கப்பட்டது. 2018-19ல் இந்தத் திட்டத்திற்காக 55,000 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 61,084 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அதேபோல, 2019-20ல் இந்தத் திட்டத்திற்கென 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 71002 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டும் (20-21)பட்ஜெட்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கென 61500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாவின் காரணமாக, இப்போது இந்தத் திட்டத்திற்கு 40,000 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பின்னணி

2004ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்த பிறகு, 2005ஆம் ஆண்டில் ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. விவசாயப் பணிகள் இல்லாத காலகட்டத்தில், அவர்கள் வேறு இடங்களுக்கு வேலைதேடி செல்வதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டது.

கோப்புப்படம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வளங்களைப் பிரித்தளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம். "1950களில் இருந்து இந்தியப் பொருளாதாரம் எப்படி இருந்தது என்றால், 'வளர்ச்சி மற்றும் பலன்களை பரவலாக்குதல்' என்பதைத்தான் அடிப்படையாக வைத்திருந்தது. அதாவது பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும்; அதன் பலன் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதுதான் இந்திய அரசின் அடிப்படைப் பொருளாதாரத் தத்துவமாக இருந்தது. 1991க்குப் பிறகு வளர்ச்சி விகிதம் அதிகமானாலும் பலன்கள் சென்று சேரவில்லை.

இந்த நிலையில்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நேரடியாக இதில் தலையிட முடிவுசெய்தது. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எங்கேயுமே வேலை கிடைக்காதவர்கள், அரசிடம் பதிவுசெய்துகொண்டால், நூறு நாட்கள் வேலை என்பது குறைந்த பட்சக் கூலியுடன் தரப்படும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. வளர்ச்சியின் பலனை எல்லோருக்கும் தருவதென்பது இயலவில்லை; ஆகவே இதனை ஒரு உரிமையாக மாற்றுகிறோம் என அரசு அறிவித்தது" என்கிறார் அவர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 27,48,94,668 பேர் பதிவுசெய்துள்ளனர். இதில் 11,86,82,898 பேர் 'ஆக்டிவாக' உள்ளனர். இப்படி ஆக்டிவாக உள்ள தொழிலாளர்களின் சதவீதம் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இதற்கு முன்பாக வேலைக்கு உணவு திட்டம் போன்றவை இந்தியாவில் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் ஒரு உரிமையாக கோரிப்பெறக்கூடியவையல்ல. ஆனால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அப்படி உரிமையாக பெறக்கூடிய திட்டம்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இந்தியாவில் கொரோனா பரவலின் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய நிதியமைச்சர் பல்வேறு பொருளாதார ஊக்கத் திட்டங்களை அறிவித்தார். அதில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதலாக 40,000 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

ஆகவே, துவக்கத்தில் இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்தாலும், நாட்கள் செல்லச்செல்ல மிக முக்கியமான திட்டம் என்பதை நரேந்திர மோதி அரசு புரிந்துகொண்டதாகவே தெரிகிறது.

"இந்த அரசு இந்தத் திட்டத்தைக் கைவிடவே நினைத்தது. நிதி ஒதுக்கீடு அதிகரிப்பதைவைத்து, இதனை பா.ஜ.க. அரசு ஆதரிப்பதாகச் சொல்ல முடியாது. கடந்த ஆண்டு நிலுவைத் தொகையும் சேர்த்துக்கூட இந்த ஆண்டு ஒதுக்கப்படும். அதனையும் கணக்கில்கொள்ள வேண்டும்" என்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.

கோப்புப்படம்

2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த நேரத்தில், இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் அல்லாமல், மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் மட்டும் செயல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தவிர, 2016ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்த இந்தத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்தது.

இருந்தபோதும் 2019 ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எப்போதும் இருக்கவேண்டுமென நான் நினைக்கவில்லை. இது ஏழைகளுக்கான திட்டம். அரசு ஏழ்மையை ஒழிக்க விரும்புகிறது" என்று குறிப்பிட்டார்.

ஆனால், இப்போது நாடு முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிவரும் நிலையில், இந்தத் திட்டத் திட்டத்திற்கான தேவை வெகுவாகவே அதிகரித்திருக்கிறது.

"இருந்தபோதும் இதன் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் உணர மாட்டார்கள். உணர்ந்திருந்தால் இத்தனை பேரை நடக்கவிட்டிருக்க மாட்டார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்தோடுதான் செயல்படுத்துகிறார்கள்" என்கிறார் ஜெயரஞ்சன்.

இந்தத் திட்டத்திற்கான தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருப்பதாகவும், வேலை கேட்போர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் பொருளாதார அறிஞர் ஜான் த்ரேஸ். "எவ்வளவு பேர் வேலை கேட்கிறார்களோ, அவ்வளவு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். இது வாழ்வா, சாவா என்ற விவகாரம்" என்கிறார் ஜான் த்ரேஸ்.

நாற்பதாயிரம் கோடியை கூடுதலாக ஒதுக்கியிருப்பதைப் பார்த்தால், மத்திய அரசும் தான் முன்பு கடுமையாக விமர்சித்த திட்டத்தையே இந்தச் சூழலில் பெரிதும் சார்ந்திருக்க முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: