கொரோனா வைரஸ்: தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,753ஆக உயர்வு - இன்றைய நிலவரம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 786 நபர்களில், 95 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

786 நபர்களில் 569 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.

தற்போது,சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 37 நாட்களாக தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'

மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் செயல்படும் 67 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 3,85,185மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 846 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128ஆக உயர்ந்துள்ளது என்றார்.தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், 5,349 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 4 நபர்கள் இறந்துள்ளார் என்றும் அதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது.

இன்று இறந்த நான்கு நபர்களும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நாள்பட்ட நோய்க்காக அவர்கள் சிகிச்சை எடுத்து வந்தனர் என்றும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: