ஆர்சனிகம் ஆல்பம் - 30 சி: தமிழக அரசால் வழங்கப்படும் ஹோமியோபதி மருந்து கொரோனா தடுப்புக்கு உதவுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை அளிக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த ஆர்சனிகம் ஆல்பம் 30 சி கொரோனாவுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது?
சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் பூவேந்தன் என்பவர் கொரோனோ தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை, கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, இந்த மருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தரப்படுவதாகத் தெரிவித்தது.
இதற்கான அரசாணையின் பிரதிகளும் அளிக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இது தொடர்பான அரசாணையில், இந்த ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டுமெனக் கூறப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் அலோபதி மருத்துவத்தின் அடிப்படையிலான மருந்துகளோடு, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, யுனானி முறையிலான மருந்துகளும் ஹோமியோபதி அடிப்படையிலான மருந்துகளும் சிகிச்சையின் ஒரு பகுதியாகவும் தடுப்பு நடவடிக்கையாகவும் அளிக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பான பரிந்துரைகளை இந்தியாவில் மாற்று மருத்துவத்திற்கான அமைச்சகமான ஆயுஷ் ஜனவரி 29ஆம் தேதியன்று வெளியிட்டிருக்கிறது. இதில் ஹோமியோபதி பிரிவில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை ஒரு தடுப்பு மருந்தாக சாப்பிடலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
"ஹோமியோபதி ஆய்வாளர்கள் கொரோனோ நோய்த் தடுப்புக்கு 'ஆர்சனிகம் ஆல்பம்' மருந்து உதவும் என ஆயுஷ் அமைச்சகத்திடம் பரிந்துரைத்தார்கள். ஆயுஷ் அமைச்சகம் அந்தப் பரிந்துரையை மாநில அரசுகளுக்கு அனுப்பியது. மாநில அரசுகளும் இதற்கான ஆணைகளை வெளியிட்டிருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஆர். ஞானசம்பந்தன்.

ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையைப் பொறுத்தவரை, வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்கு இந்த மருந்தை சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மீண்டும் சாப்பிடலாம். இந்த மருந்தைப் பொறுத்தவரை, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆரோக்கியமாக இருப்பவர்களும் வேறு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களும் சாப்பிடலாம்; எவ்வித பக்கவிளைவும் இல்லாத மருந்து. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என்கிறார் ஞானசம்பந்தன்.
ஹோமியோபதியின் தத்துவத்தின்படி, மிகவும் நீர்த்துப்போன ஒரு மருந்தை நாம் உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. ஆர்சனிகம் என்பது, மிகவும் நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஆர்சனிக் ட்ரையாக்ஸைட். இப்போது ஆயுஷ் அமைச்சகம் 30 C என்ற அளவில் இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்கிறது. 30 C அளவுக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்ட மருந்தில் ஆர்சனிக் துளியும் இருக்காது.
இதற்கு முன்பாக ஆர்சனிகம் ஆல்பம் பல நோய்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக, சோரியாசிஸ், விடிலிகோ போன்ற தோல் நோய்களுக்கு நோய்களுக்கு கொடுக்கப்பட்டிற்குக்கிறது. மேலும், ஆஸ்த்மாவிற்கும் இந்த மருந்தை ஹோமியோபதி மருத்துவர்கள் கொடுத்துவந்தார்கள்.

இந்த மருந்தை ஒருவர் கடைகளுக்குச் சென்று தாமாகவே வாங்கி சாப்பிடலாமா? "சாப்பிடலாம்" என்கிறார் மருத்துவர் ஞானசம்பந்தன்.
இந்த மருந்தைப் பரிந்துரைத்து ஆயுஷ் அமைச்சகம் செய்திக் குறிப்பை வெளியிட்டதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஸ்ரீபாத் நாயக், இந்த மருந்தை ஒரு தடுப்பு மருந்தாகத்தான் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைக்குப் பிறகு, இந்த மருந்தின் விற்பனை கடுமையாக உயர்ந்தது. இந்த மருந்தின் விலையும் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபட்டது. "30 ரூபாயிலிருந்து 200 ரூபாய்வரைகூட விற்கிறார்கள்" என்கிறார் ஞானசம்பந்தன்.
இப்போது தமிழ்நாடு அரசு, ஹோமியோபதி கவுன்சிலுடன் இணைந்து ஆங்காங்கே இந்த மருந்தை விநியோகம் செய்துவருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












