தமிழகத்தில் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா: ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை

பட மூலாதாரம், ARUN SANKAR / getty images

தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று தொற்று உறுதியான 174 பேரில் மூன்றரை, நான்கு மற்றும் ஆறு வயதாகும் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் பிறந்து 14 நாட்களே ஆன, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தையும் அடக்கம்.

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில், தொடர்ந்து ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 2,757 நபர்களில் 1,828 பேர் ஆண்கள் என்றும், 928 பேர் பெண்கள் என்றும் ஒருவர் திருநங்கை என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 13-60 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

கொரோனா தாக்கத்தால் ஒருவர் இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இன்று (மே 2) 29 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,341-ஐ தொட்டுள்ளது.

தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்துவருவதால், தமிழகத்தில் மொத்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையான 2,757 நபர்களில், 1,257 நபர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்

நோய் தொற்றை குறைக்க தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதுவரை, 35,418 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கண்காணிப்பில் 40 நபர்கள் உள்ளனர்.

இதுவரை 1,39,490 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இன்று (மே 2) 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: