தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கு - அரசு அறிவித்துள்ள தளர்வுகள் என்ன?

ஊரடங்கு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு நீடித்த ஊரடங்கை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தனியாகவும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் செயல்படுவதில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தடைகள் பின்பற்றப்படும் என்றும் வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், தங்கும் விடுதிகள் போன்றவை இயங்க தடை நீடிக்கவேண்டும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி எடுக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிமுறைகளின்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை: தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, புதிதாக கொண்டுவரப்பட்ட தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைபாடுகள் இல்லாமல், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என்று கண்டறியப்பட்ட பகுதிகள் தவிர பிற எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.

நோய் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார் போல தளர்வுகளை அனுமதித்துள்ளது. இதன்படி, சிவப்பு மாவட்ட பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

எனவே, நோய் தடுப்பு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The lockdown will now last until May 17.

பட மூலாதாரம், Getty Images

சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை. எனவே, இந்த தளர்வுகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற பகுதிகளில், கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் / மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது இருபது நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நோய் தொற்றால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படாத இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

Banner image reading 'more about coronavirus'

அனைத்து தனிக் கடைகள் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளுக்கு தனியாக வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Banner image reading 'more about coronavirus'
Banner

மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளை பொறுத்தவரை, 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றம் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.

15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்):

தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

மின்னணு வன்பொருள் உற்பத்தி:

மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் மே 17வரை ஊரடங்கு நீடிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images

நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகள்

நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகள்பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.

நகர்ப்புறங்களில்வணிக நிறுவனங்கள்

மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினை பின்பற்றியும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

கண்காணிக்கப்படும்ஊரடங்கு

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பது கண்காணிக்கப்படும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம் என அரசு அறிவித்துள்ளது. அந்த வாகனங்களில் பயணிக்கும்போது, 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புர தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: