கொரோனா வைரஸ்: திருப்பூருக்கு இன்னொரு தொழில் வாய்ப்பை தந்துள்ள நோய்த்தொற்று

- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அளவில் ஆடை தயாரிப்பில் முக்கிய நகரமாக உள்ள தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவ பாதுகாப்பு கவச உடை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தாக்குதல் காரணமாக ஆடை விற்பனைச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவ பாதுகாப்பு கவச உடைக்கான தேவை அதிகரித்திருப்பதால், பெரும்பாலான ஆடை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பிற்கு மாறியுள்ளனர்.
இதனால், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திருப்பூரைச் சேர்ந்த ஆடை உற்பத்தியாளர்கள்.
"உலகளவில் கொரோனா தாக்குதல் ஆரம்பித்த போதே ஆடை ஏற்றுமதி மற்றும் விற்பனை சரிவடைய துவங்கியது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் உற்பத்தி முற்றிலுமாக முடங்கிய நிலை ஏற்பட்டது. பணியாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான், மருத்துவப் பாதுகாப்பு கவச உடைக்கான தேவையும் அதிகரித்து வந்தது.
ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த எனது பணியாளர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு கவச உடை தயாரிப்புக்கான பயிற்சிகளை வழங்கி, உற்பத்தியை தொடங்கினோம். தற்போது, எனது நிறுவனத்தில் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

அடிப்படை பாதுகாப்பு கவச உடை முதல் மருத்துவர்களுக்கான பிரத்யேக கவச உடை என ஐந்து ரகங்களில் தயாரித்து வருகிறோம். இவை அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. ரூ.198 முதல் ரூ.450 வரையிலான விலை மதிப்பில் இவற்றை விற்பனை செய்து வருகிறோம்," என தெரிவிக்கிறார் உற்பத்தியாளர் மோகன்.
மருத்துவப் பாதுகாப்பு கவச உடையின் தேவையும் உற்பத்தியும் அதிகரித்திருப்பதால், கவச உடை தயாரிக்க பயன்படுத்தப்படும் Non-woven துணி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.
"நாள் ஒன்றுக்கு சுமார் மூவாயிரம் மருத்துவப் பாதுகாப்பு கவச உடைகள் எனது நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. Non-woven துணி வகையில் மட்டுமே மருத்துவப் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில், Non-woven துணியின் பற்றாக்குறை அதிகரிக்க துவங்கியுள்ளது. திருப்பூரில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே Non-woven துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
மும்பை, அகமதாபாத் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவு வரவழைக்கப்படுகிறது. இதன் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது. ரூ.2௦௦க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ Non-woven துணி, இப்போது ரூ.4௦௦ க்கு விற்கபடுகிறது.
இருந்தும் அதற்கான தேவையிருப்பதால் உற்பத்தியாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதன் விலை குறைக்கப்பட்டு, சர்வதேச போக்குவரத்து மீண்டும் துவங்கினால் உலக அளவில் மருத்துவப் பாதுகாப்பு கவச உடை தயாரிப்புச் சந்தையில் திருப்பூர் இடம்பிடிக்கும்," என கூறுகிறார் மோகன்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பரிசோதனையாளர்களுக்கான பாதுகாப்பு கவச உடையின் தரம் குறித்து ஆய்வு செய்து சான்றழிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஆடை உற்பத்தியாளர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர்.
"மருத்துவ குழுவினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகளின் தரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பாதுகாப்பு கவசத்திற்கான துணி உற்பத்தி மற்றும் பாதுகாப்பு உடை தயாரிப்பிற்கான அரசின் வழிமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்படும் துணி மற்றும் உடைகளை கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி சான்றிதழ்கள் பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது. மேலும், பாதுகாப்பு உடை தயாரிப்பில் உள்ள தரக்கட்டுப்பாடுகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. எனவே, முறையான பயிற்சியும், தரச்சான்று பெறுவதில் எளிய நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டால் திருப்பூரில் இருந்து உலகத் தரத்திலான மருத்துவப் பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்க முடியும்" என்கிறார்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.
முகக்கவசம் தயாரிப்பிலும் முன்னிலையில் உள்ள திருப்பூரில், ஆடைகளுக்கு ஏற்ப முகக்கவசம் அணிந்து கொள்ளும் வகையில் வண்ணமயமான முகக்கவசங்கள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் வரத் துவங்கிவுள்ளதாக கூறுகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் விஜயகுமார்.
"கொரோனாவின் தாக்கத்தால், நம் அனைவருக்கும் நோய்தொற்று குறித்த ஒருவிதமான பயம் உருவாகிவிட்டது. இதனால், குறைந்தது அடுத்த ஓர் ஆண்டிற்கு மக்கள் முகக்கவசங்களை அணிந்தே வெளியில் செல்வர். எனவே, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கவச உடைகளுக்கான தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். ஆடை விற்பனைச் சந்தையில் சறுக்கினாலும், பாதுகாப்பு கவச உடைகள் உற்பத்தியில் திருப்பூர் முன்னேறி வருகிறது" என்கிறார் இவர்.

"திருப்பூரில் வெகுசில மருத்துவ பாதுகாப்பு கவச உடை தயாரிப்பாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மொத்த உற்பத்தியாளர்களும் பாதுகாப்பு கவச உடை உற்பத்தியில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் உருவாக்கி வந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் துவக்கத்திலேயே ஆடை விற்பனைச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.
ஆனால், மருத்துவப் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பின் மூலம் இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் உருவாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. ஊரடங்கு முடிந்து, சர்வதேச கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், மருத்துவப் பாதுகாப்பு கவச உடைகள் சந்தையில் சீனாவுடன் போட்டியிடும் வகையில் திருப்பூர் சந்தை உயரும்" என நம்பிக்கை தெரிவிக்கிறார் விஜயகுமார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












