பிரசவ வலியில் அவதிப்பட்ட நிறைமாத கர்ப்பிணி - பிரசவம் பார்த்த ஆட்டோ டிரைவர் சந்திரகுமார்

பிரசவ வலியில் அவதிப்பட்ட நிறைமாத கர்ப்பிணி - பிரசவம் பார்த்த எழுத்தாளர்

கோவையில் பிரசவ வலியோடு சாலையோரத்தில் துடித்துக்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு ஆட்டோ ஓட்டுநரும், பிரபல எழுத்தாளருமான சந்திரகுமார் பிரசவம் பார்த்து காப்பாற்றியுள்ளார்.

'ஆட்டோ சந்திரன்' என அழைக்கப்படும் சந்திரகுமார் கோவையில் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் எழுதிய 'லாக் அப்' எனும் நாவல், இயக்குநர் வெற்றிமாறனால், 'விசாரணை' எனும் திரைப்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளைப் பெற்றது.

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள துளசிலேஅவுட் ரயில்வே செக்போஸ்ட் அருகே கட்டட வேலை மற்றும் துப்புரவு பணிகளை செய்யும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இங்கு வசித்து வந்த இளம்பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை, வீட்டிலிருந்து தூக்கி வந்த ஆண்கள், ஆம்புலன்ஸ் வரும் வரை சாலையில் காத்திருந்துள்ளனர். அப்போது, பிரசவ வலி அதிகமாகி ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பிணிப் பெண் வலியில் துடித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த ஆட்டோஓட்டுநர் சந்திரகுமார், லாவகமாக குழந்தையை வெளியில் எடுத்து, அப்பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.

சாலையோரத்தில் பிரசவித்த பெண் மற்றும் அவரது குழந்தை என இருவரும் மருத்துவமனையில் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திரகுமார் பிரசவம் பார்க்கும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இதுகுறித்து அவர் பிபிசி யிடம் பேசுகையில், "வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சிங்காநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்தேன். அப்போது தான், புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கல்யாணசுந்தரனார் மன்றம் எதிரே பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருப்பதாக தகவல் வந்தது. நான் இருந்த இடத்திற்கு மிக அருகில் தான் மன்றம் இருந்தது. உடனடியாக அங்கு சென்ற பார்த்தபோது, கர்ப்பிணிப் பெண் வலியில் துடித்துக்கொண்டிருந்தார். எனது ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிடலாம் என நினைத்தோம். ஆனால், அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாகி, குழந்தை வெளியேவரத் துவங்கியது. அவரைச் சுற்றி பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் நின்று கொண்டிருந்தனர். 'ஆம்புலன்ஸ் வரும் வரை தாமதிக்க வேண்டாம், உடனடியாக பிரசவம் பாருங்கள்' என அங்கிருந்த பெண்களிடம் கூறினேன். ஆனால், யாரும் முன்வரவில்லை. அதனால், நானே பிரசவம் பார்த்துவிடலாம் என முடிவுசெய்தேன்" என தெரிவித்தார்.

"இதற்கு முன்னர் இரண்டு முறை பிரசவம் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. எனது ஆட்டோவிலேயே ஒருமுறை குழந்தை பிறந்துள்ளது. அதனால், எனக்கு பயமில்லை. அப்பெண்ணின் கனவரும், உறவினர்களும் சுற்றி நின்று கொண்டனர். பெண்ணின் அருகே அமர்ந்து, மெதுவாக குழந்தையை வெளியில் எடுத்தேன். வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண் ஓரளவுக்கு அமைதியானார். அடுத்த சில நிமிடங்களில், ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவர்களின் உதவியோடு தொப்புள்கொடியை துண்டித்தோம். உடனடியாக தாயையும், குழந்தையையும் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். சாலையோரத்தில் நடந்த இந்த பிரசவத்தை சுற்றி நின்று பலர் செல்போனில் படம் எடுத்தனர். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை." என நடந்தவற்றை பகிர்ந்து கொண்டார் சந்திரகுமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: