கொரோனா சமூக முடக்கம்: வண்டலூர் பூங்காவுக்கு நீங்கள் இப்படியாகவும் செல்லலாம் Coronavirus and Vandalur Zoo

வண்டலூர் பூங்காவுக்கு இணையத்தில் குவிந்த மக்கள்

பட மூலாதாரம், AAZP

கொரோனா தாக்கம் காரணமாகப் பலரும் வீடுகளில் இருப்பதால், சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இலவச இணையச் சுற்றுலாவைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இணையச் சுற்றுலாவைப் பார்ப்பதாகக் கூறும் அதிகாரிகள், தினமும் சிறப்புக் காட்சிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இணையச் சுற்றுலா வசதிகொண்ட ஒரே உயிரியல் பூங்கா அறிஞர் அண்ணா உயிரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கருப்பு மற்றும் வெள்ளை புலிக்குட்டிகளைக் காட்டும் ஒரு சிறப்புக் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகக் கூறிய உயரதிகாரி ஒருவர், இணையத்தில் விலங்குகளைப் பார்த்துவிட்டு பலரும் மின்னஞ்சல் மூலம் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் பூங்காவில் 1,500 விதமான விலங்குகள் உள்ளன. 14 கேமராக்கள் இந்த பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. இணையச் சுற்றுலாவில், புலிக்குட்டிகள், சிங்கம், காண்டாமிருகம், யானை, வெள்ளைப்புலிகள், முதலை, சிம்பான்ஸீ குரங்கு உள்ளிட்ட விலங்குகளை மக்கள் விருப்பத்தோடு கண்டுகளிக்கிறார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். அறிஞர் அண்ணா பூங்காவின் இணையப் பக்கத்தில், மார்ச் 19ம் தேதி 12,490 பார்த்த எண்ணிக்கை 29ம் தேதி மார்ச் மாதம் 65,601ஆக அதிகரித்துள்ளது.

வண்டலூர் பூங்காவுக்கு இணையத்தில் குவிந்த மக்கள்

பட மூலாதாரம், AAZP

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு நாடுகள், சௌதி அரேபியா, சிங்கப்பூர், ஒமன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் அதிகமாக காட்சிகளைப் பார்க்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

''கொரோனா தாக்கத்தைக் குறைப்பதற்காக 21 நாட்கள் வீட்டில் இருக்கவேண்டும் என இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பல நாடுகளிலும் இதேபோல ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. வீட்டிலிருந்தபடியே பொழுதுபோக்கில் ஈடுபடுவது என்பது சிலருக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள இணையச் சுற்றுலாவில் உங்களுக்குப் பிடித்த விலங்கு என்ன செய்துகொண்டிருக்கிறது, அதன் இயல்பு என்ன, என்ன சாப்பிடும், எப்படி ஒரு நாளை கழிக்கும் என நேரலையாகப் பார்க்கமுடியும். இந்த பூங்காவில் உள்ள எல்லா இடங்களையும் நேரலையில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம்,''என்கிறார் அந்த அதிகாரி.

''இணையம் மூலமாகப் பார்ப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான விலங்கு ஒன்றை பணம் செலுத்தித் தத்தெடுக்கலாம். அந்த விலங்கின் உடல்நலன் எப்படி இருக்கிறது என எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகக் கேட்டறிந்து தொடர்பில் இருக்கலாம்,'' என்கிறார்.

வண்டலூர் பூங்காவுக்கு இணையத்தில் குவிந்த மக்கள்

பட மூலாதாரம், AAZP

வெயில் காலம் தொடங்கவுள்ளதால், விலங்குகளுக்கு விருப்பமான பழங்கள், காய்கறிகள் அதிகளவில் அளிக்கப்படுகிறது என்றும் கொரோனா தாக்கம் காரணமாக பணியாளர்களின் உடல்நலனில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். ''கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுப் பொருட்கள் வந்துசேர்வதில் தாமதம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம் . அதேநேரம் அவற்றைச் சோதனை செய்கிறோம். பூங்காவின் மருத்துவர்கள் அவ்வப்போது விலங்குகளின் உடல்நலன் குறித்து ஆய்வு செய்கிறார்கள். பூங்காவில் கிருமிநாசினி தெளிக்கிறோம். கையுறைகளை பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்,''என்றும் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: