இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் எதிர்காலம் என்ன? - நிதித்துறை இணைஅமைச்சரின் விரிவான விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தமா?"
2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் கூறினார்.
மக்களவையில், அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திவிட்டதா? 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.கள் மூலம் வினியோகிக்கக் கூடாது என்று பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் எழுத்து மூலம் பதில் அளித்து கூறியதாவது:-
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், விரும்பும் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் அதிகமாக விடவேண்டும் என்ற அடிப்படையிலும் குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆலோசனையை பெற்று மத்திய அரசு முடிவு செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதுவரை ரூ.7.40 லட்சம் கோடி மதிப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.5.49 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்திலும், ரூ.93 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கி இருப்பாகவும் உள்ளது.
மார்ச் 5-ந் தேதி நிலவரப்படி ரூ.1.96 லட்சம் கோடி மதிப்புக்கு 100 ரூபாய் நோட்டுகளும், ரூ.42,784.20 கோடி மதிப்புக்கு 50 ரூபாய் நோட்டுகளும், ரூ.16,619.60 கோடி மதிப்புக்கு 20 ரூபாய் நோட்டுகளும், ரூ.30,510.79 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன.
பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி, கிழிந்த நோட்டுகளை மாற்றுவது, இருப்பு தேவை ஆகியவைகளுக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது.
2019-20-ம் நிதி ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது தொடர்பாக அச்சகங்களுக்கு எந்த விண்ணப்பமும் முன்வைக்கப்படவில்லை. ஆனாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை சந்திப்பதால் 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கு மட்டும் 500, 200 ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கு ஏற்றவாறு ஏ.டி.எம். எந்திரங்களை மறுகட்டமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தினத்தந்தி நாளிதழ் இவ்வாறாக விவரிக்கிறது.

தினமணி: "தமிழக மீனவர் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு"

தமிழக மீனவா்களின் மீன்பிடி உரிமை தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீா்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
சென்னை உயா்நீதிமன்றத்தில், மீனவா்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சாா்பில் பீட்டா் ராயன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவது குறித்து சா்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.300 கோடி நிதி எந்த வகையில் செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை மீன்வளத் துறை இயக்குநா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மீன்வளத் துறை இயக்குநா் ஜி.எஸ்.சமீரன் நேரில் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தாா்.
அதில், தமிழக மீனவா்களின் மீன்பிடி உரிமை தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீா்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மத்திய அரசும் தமிழக அரசும் மீனவா்களின் நலனைக் காக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 3,339 தமிழக மீனவா்களில் 3,325 போ் மீட்கப்பட்டுள்ளனா். கடந்த மாா்ச் 10-ஆம் தேதி நிலவரப்படி 3 மீனவா்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளனா். மீட்கப்பட்ட 11 மீனவா்கள் விரைவில் தாயகம் திரும்ப உள்ளனா்.
மேலும், கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்தபின்னா் தமிழக மீனவா்கள் மீதான துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக்கைகள் உள்ளிட்டவை வெகுவாக குறைந்துவிட்டன.
மேலும் இலங்கை கடற்படையால் கைதாகும் தமிழக மீனவா்களின் குடும்பங்களுக்கு தினசரி வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.50-லிருந்து ரூ.250 ஆக உயா்த்தி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 1,750 குடும்பங்களுக்கு ரூ.1.77 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாயமான மீனவா்களின் குடும்பங்களுக்கு அன்றாட உதவித்தொகையாக மொத்தம் ரூ.1.46 கோடி வழங்கப்பட்டுள்ளது. நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று ரூ.300 கோடி வழங்கியுள்ளது. இதன்மூலம், 750 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு மானியத்துடன் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், ரூ.8 லட்சம், மீனவா்களின் பங்களிப்பாகவும், எஞ்சியத் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசும் நிதியுதவியாக அளித்துள்ளன. தமிழக மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆக்கப்பூா்வமான பல்வேறு நடவடிக்கைகளை மீன்வளத்துறை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போன்று மத்திய மீன்வளத்துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

இந்து தமிழ் திசை: "சர்வதேச நீதிமன்றத்தில் நிர்பயா வழக்கு"

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால் வரை மார்ச் 20-ம் தேதி காலை தூக்கிலிட நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் குற்றவாளி களில் ஒருவரான முகேஷ் சிங், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது முந்தைய வழக்கறிஞர் என்னை தவறாக வழி நடத்தியதால் நான் சட்ட நிவாரணம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் திரும்பவும் வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் அக் ஷய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட கோரி சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டுள்ளனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "ம.பி.யில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு"

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வா் கமல்நாத்துக்கு ஆளுநா் லால்ஜி டாண்டன் கெடு விதித்துள்ளாா் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வா் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அண்மையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 போ் பதவியை ராஜிநாமா செய்தனா். இதையடுத்து, கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, ஆட்சியைப் பிடிக்க பாஜக முனைப்பு காட்டியது. பேரவையில் கமல்நாத் திங்கள்கிழமை (மாா்ச் 16) நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்ள வேண்டும் என்று ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆளுநா் உரை முடிந்தவுடன் பேசிய பேரவை விவகாரத் துறை அமைச்சா் கோவிந்த் சிங், 'உலக அளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான், கேரளம், ஒடிஸா, சத்தீஸ்கா், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல மத்தியப் பிரதேச சட்டப் பேரவையும் வரும் 26-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது' என்றாா்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வா் கமல்நாத்துக்கு ஆளுநா் லால்ஜி டாண்டன் கெடு விதித்துள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












