கிரெடிட், டெபிட் கார்ட் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு இன்று முதல் கட்டுப்பாடு

பட மூலாதாரம், PA Media
- எழுதியவர், கம்லேஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இதுவரை வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகியவற்றை வாங்கியவுடன் வாடிக்கையாளர்களால் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால் இனி புதிதாக வழங்கப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்து உடனடியாக ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.
இந்திய ரிசர்வ் வங்கி வகுத்த புதிய விதியின்படி 2020 மார்ச் 16 முதல் வழங்கப்படும் அனைத்து அட்டைகளும் ஆன்லைன் பரிவர்த்தனை வசதி முடக்கப்பட்டே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும்.
ஆன்லைன் வர்த்தக சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் இதற்கென தனியாக வங்கியை நாடி அனுமதி பெற வேண்டும்.
இனி வங்கிகளில் புதிதாக வழங்கப்படும் கார்டுகளில் இரண்டு சேவைகள் மட்டுமே வழங்கப்படும். நேரடியாக ஏ.டி.எம் யில் இருந்து பணம் எடுக்கலாம். இரண்டாவதாக விற்பனை நிலையங்களில் ஸ்வைப்பிங் கருவி மூலம் பணம் செலுத்தலாம்.
புதிய கார்டுகள் மட்டுமல்லாமல் இதுவரை தாங்கள் வைத்திருந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளாத அனைத்து கார்டுகளும் இனி ஆன்லைன் சேவைகளுக்கு முடக்கப்படும். அதாவது ஏற்கெனவே உள்ள கார்டுகள் மூலம் இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளாதவர்கள் இனி தங்கள் கார்டுகளில் ஆன்லைன் சேவை பெற வங்கிகளில் அனுமதி பெற வேண்டும்.
யார் வேண்டுமானாலும் தங்களின் கார்டுகளில் உள்ள ஆன்லைன் பரிவர்த்தனை சேவையை எப்போது வேண்டுமானாலும் முடக்கி கொள்ளலாம்.
இதுவரை தங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொண்டவர்கள் இனியும் தொடர்ந்து ஆன்லைன் சேவைகளை பெறலாம். அவர்கள் நினைத்த நேரத்தில் ஆன்லைன் சேவைகளை முடக்கவோ அல்லது மீண்டும் பெறவோ முடியும்.

பட மூலாதாரம், Getty Images
ஆன்லைன் சேவைகள் மேற்கொள்ளப்படும் கார்டுகளை இயக்கவோ அல்லது முடக்கவோ பல வழிகள் உள்ளன. இன்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங், ஐ.வி.ஆர் (குரல் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல்) மற்றும் 24 மணிநேர ஏ.டி.எம். ஆகியவையே இந்த வழிகள். இது தவிர வங்கி அலுவலகங்கள், கிளைகள் மூலமாகவும் கார்டுகளை இயக்கவோ, முடக்கவோ முடியும்.
ஏன் இந்த புதிய விதி அறிவிக்கப்பட்டது ?
இந்த புதிய விதிமுறைகள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 20ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளை பொறுத்தவரை 2019 மார்ச் 31ம் தேதி வரை இந்தியாவில் இதுவரை 92 கோடியே 50 லட்சம் டெபிட் கார்டுகள், 4 கோடியே 70 லட்சம் கிரடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. டெபிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்தும் முதல் நாடாக சீனா விளங்குகிறது.

பட மூலாதாரம், AFP
2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே 25 சதவீதம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன.
கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காகவே இந்த விதிகளை அறிவித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த புதிய விதிமுறைகள் மக்களுக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்கும்? பெரும்பாலும் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. எனவே இந்த புதிய விதிகள் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர் அபிநவ் கூறுகிறார்.
புதிய விதிகளால் என்ன பயன் ?
இது குறித்து நிபுணர் அபிநவ் கூறுகையில், ''தற்போதுள்ள நடைமுறைப்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள கார்டின் எண் மட்டுமே போதுமானதாக உள்ளது. விடுதி புக்கிங் செய்யவோ, விற்பனை நிலையங்களில் பணம் செலுத்தவோ கார்டில் உள்ள எண் போதும். கார்டு எண்ணை வைத்து அந்த வங்கி கணக்கு யாருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ''
பணப் பரிவர்த்தனை மோசடியில் ஈடுபடுபவர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி யை பெற்றே மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் தரவுகள் விற்கப்படுவதால் மோசடியில் ஈடுபடுபவர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் கார்டு எண் மற்றும் சிவிவி எண் வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படை தரவுகளை வைத்துக்கொண்டே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது பெரிய அளவிலான இந்தியர்கள் ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர், ஆனால் உண்மையில் பணத்தை செலுத்துவது மற்றும் திருப்பி எடுப்பது உள்ளிட்ட அடிப்படை பயன்பாடுகளை மட்டுமே மக்கள் கற்றுக்கொள்கின்றனர். இதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது என நிபுணர் அபிநவ் கூறுகிறார். ஆன்லைனில் பணப் பரிமாற்றம் குறித்து கூட முழு விழிப்புணர்வு இல்லதவர்கள் தான் பெரும்பாலும் பண மோசடிக்கு ஆளாகின்றனர்.
யாராவது தொலைபேசியில் அழைப்பு விடுத்து வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்களின் வங்கி தரவுகளை உடனே கூறுங்கள் , இல்லை என்றால் வங்கி கணக்கு செயலிழந்து விடும் என கூறினால், சிலர் அவர்களின் முழுத் தரவுகளையும் கூறுகின்றனர்.
தற்போது இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பது கடினமாகியுள்ளது.
எனவே தற்போது புதிதாக வழங்கப்படும் கார்டுகளில் ஆன்லைன் சேவை முடக்கப்பட்டால், மோசடியில் ஈடுபடுபவர்களால் கார்டு நம்பர் மற்றும் வங்கி கணக்கின் தரவுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட முடியாது.
ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு என்ன பயன் ?
இந்திய நாட்டில் ஏராளமான மக்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதன் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் சிலர் மட்டுமே. வயது முதியவர்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் சிலர் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்வதில்லை. எனவே கார்டுகளை முடக்குவதன் மூலம் முதியவர்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்கள் மோசடியில் இருந்து காப்பாற்றப்படலாம்.

பட மூலாதாரம், Thinkstock
மேலும் தொடர்ந்து ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் தங்களின் ஒரு கார்டில் மட்டும் ஆன்லைன் பரிவர்த்தனை சேவையை வைத்துக்கொண்டு, மற்றொரு கார்டில் முடக்கி விடலாம். எனவே உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தரவுகள் கசிந்தாலும் மோசடி நடைபெறாது.
ஆன்லைன் மோசடிகளைத் தவிர்ப்பது வங்கிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. 2018ல் இருந்து 2019ம் வரை மட்டும் 921 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் மோசடி வழக்குகளை ரிசர்வ் வங்கி பதிவு செய்துள்ளது.
எனவே இந்த புதிய விதிமுறைகளால் மக்கள் அஞ்சத் தேவையில்லை. இந்த புதிய திட்டத்தால் மக்கள் பாதுகாப்பாக ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












