"நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் குறித்த புரிதல் இல்லை" - பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் பேட்டி

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு, சந்தேகங்களுக்குப் பதிலளிப்பதைவிட மேலும் பல கேள்விகளையே எழுப்பியிருக்கிறது. அரசியலுக்கு வருவேன் என்ற தனது முந்தைய முடிவிலிருந்து அவர் பின்வாங்குகிறாரோ எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வாரம் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த ரஜினிகாந்த், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, நிர்வாகிகள் தெரிவித்த ஒரு கருத்தில் மட்டும் தனக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரிவித்தார். ரஜினி எந்தக் கருத்து தொடர்பாக அதிருப்தியடைந்தார் என்பது குறித்து ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வெளியான நிலையில், தனது நிலை குறித்து விளக்கமளிக்க வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.
வழக்கமாக தனது இல்லத்தின் வாயிலிலோ, தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திலோ செய்தியாளர்களைச் சந்திக்கும் ரஜினிகாந்த், இந்த முறை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையில் அவரது ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், அறிவிக்கப்பட்டதைப்போல சரியாக 10.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பைத் துவங்கினார் ரஜினி.
ஆனால், தான் பேசி முடித்ததும் செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் வெளியேறினார் ரஜினி. முடிவில், அவரது இந்த செய்தியாளர் சந்திப்பு அவரது அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, பல புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ரஜினி அரசியல் கட்சியைத் துவங்குவாரா என்ற பழைய சந்தேகத்தையும் தக்கவைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அவரது இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துகளிலேயே ரசிகர்களை மிகவும் அதிரவைத்த கருத்து, தான் முதலமைச்சராக விரும்பவில்லை; கட்சித் தலைவராக இருந்தபடி ஆட்சியில் ஒரு நேர்மையான, இளைஞரை அமர்த்துவேன் என்ற கருத்துதான். ரஜினி தனது சினிமாக்களிலும் சில மேடைகளிலும் அரசியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த ஆரம்பித்த காலத்திலிருந்தே, ரஜினிகாந்த் முதலமைச்சராக வந்தால், மிகச் சிறப்பான ஆட்சியைத் தருவார் என்று தொடர்ந்து பேசிவந்த ரசிகர்களை இந்தக் கருத்து அதிரவைத்திருக்கிறது.
ஹோட்டலுக்கு வெளியில் நின்றபடி, ரஜினி பேசியதை மொபைலில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள், "தலைவர் சொல்வதை மீறப்போவதில்லை. அவர் சொல்வதுதான் இறுதி முடிவு" என்றெல்லாம் சொன்னாலும் ஏமாற்றம் அவர்கள் முகத்தில் தெளிவாகத் தென்பட்டது.
"நீங்க தேர்தலில் வேலை பாருங்க, கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு போய்விடுங்கள். பிறகு அடுத்து நான் படம் ஏதும் நடித்தால் திரும்ப வாங்க என்று சொல்கிறார். இது ரசிகர்களால் ஏற்க முடியாத விஷயம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். ஆனால், மக்கள் மத்தியில் இது எடுபடக்கூடும்; தன்னைவிட சிறந்த ஒருவரை ஆட்சியில் அமர்த்த நினைக்கிறார் ரஜினி என அவர்கள் கருதக்கூடும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.
ஆனால், முதலமைச்சர் பதவியை ஒரு சி.இ.ஓ. பதவியாக ரஜினி கருதுவது குறித்த விமர்சனங்களும் இருக்கின்றன. மாநில முதலமைச்சர்கள் பல சமயங்களில் மத்திய அரசுக்கு எதிரான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் நிலையில், அந்தப் பதவியை ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியைப் போல கருதுவது ரஜினியின் புரிதலின்மையைக் காட்டுவதாகவே அவர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு அடுத்தபடியாக, யாருக்கெல்லாம் பதவியும் வாய்ப்புகளும் அளிக்கப்போகிறேன் என்ற ரஜினியின் பேச்சு. வயதானவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, 60 -65 சதவீத இடங்களை 50 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அளிக்கப்போவதாகவும் மீதமுள்ள இடங்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றோருக்கு அளிக்கப்போவதாகவும் அவர் கூறியிருப்பதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
"அதிகாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பதைப் போலவும் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள் குற்றவாளிகள் என்பதைப் போலவும் அவர் சொல்வது ஏன் என்பது புரியவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெரும்பாலும் அலுவலகத்தில் சொகுசாக பணியாற்றுபவர்கள். நெருக்கடி நேரத்தின்போது மட்டும் களத்திற்கு வருவார்கள். ஆனால், கீழ்மட்டத்தில் பணியாற்றும் அரசியல் கட்சியினர்தான் மக்களின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கின்றனர். இவர்களை எதிரெதிராக நிறுத்துகிறார் ரஜினி" என்கிறார் ராதாகிருஷ்ணன்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேர்மையாக, திறம்பட செயலாற்றக்கூடியவர்கள் என்ற எண்ணம் ரஜினிக்கு வலுவாக இருப்பதையே அவரது இந்தக் கருத்து சுட்டிக்காட்டுகிறது. ஆனால், 2014லிருந்து 2017க்குள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது 139 ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன என நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஜினிகாந்தின் அதிகாரிகள் மீதான பார்வை சிக்கலான ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
தனது கட்சி அமைப்பு குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகள்தான் எல்லாவற்றையும்விட அவரது ரசிகர்களை அதிகம் புண்படுத்தியிருக்கக்கூடும். ஒரு கட்சியில் சுமார் 60,000 பதவிகள் இருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினரையும் கணக்கில் கொண்டால், சுமார் 2,50,000 லட்சம் பேர் கட்சியின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்றும் அவர்களுக்காக ஊழல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் ரஜினி கூறியிருப்பது அவரது நீண்ட கால நிர்வாகிகளை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கும். உண்மையில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளில், கீழ்மட்ட நிர்வாகிகளில் இருந்து தலைமைக் கழகம் வரை இருக்கும் கட்சிப் பதவிகள் லட்சக்கணக்கானவை.
கட்சித் தொண்டர்களுக்கு உதவி செய்வது, அரசின் நலத் திட்ட உதவிகளை பெற்றுத் தருவது, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கச் செய்வது, தேர்தல் நேரங்களில் களப்பணி ஆற்றுவது ஆகியவற்றை இந்த பொறுப்பாளர்களே செய்கின்றனர். மக்களின் கருத்துகளையும் கட்சித் தலைமைக்கு கொண்டு செல்வதும் இவர்கள்தான். ஆனால், அவர்களை எதிர்காலத்தில் ஊழல் செய்யக்கூடியவர்களாக ரஜினி பார்ப்பது அவரது எதிர்கால கட்சிக் கனவுக்கு உகந்த ஒன்றாகத் தெரியவில்லை.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு வடிவத்தில் உட்கட்சித் தேர்தல் ஒன்றை நடத்துகின்றன. அதில் மேலே வருபவர்கள், பிறகு தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். பிறகு, சட்டமன்றத்திற்கு வருகிறார்கள். இப்படி படிப்படியான ஜனநாயக அமைப்பைப் புரிந்துகொள்ளாமல், தன் தேர்வின் அடிப்படையிலேயே சட்டமன்ற வேட்பாளர்கள், முதல்வர் என எல்லோரையும் நியமிக்க ரஜினி விரும்புவதைப் போலவே அவரது பேச்சு சுட்டிக்காட்டுகிறது.
மேலும் தனது பேச்சின் இடையில், ரஜினி போகிறபோக்கில் தெரிவித்த கருத்துகளில் பல தற்போதைய சூழலுக்கு பொருந்ததாவை. "எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். தலைவர் சொன்னா தொண்டருங்க கேக்கனும். தொண்டருங்க சொல்லி தலைவன் செய்யக்கூடாது" என்றார் ரஜினி. திராவிடக் கட்சிகளின் வெற்றியே, பிரச்சனைகள் என்ன என்பதை கீழ் மட்டத்திலிருந்து கேட்டு, புரிந்துகொண்டு அவற்றைத் தீர்த்ததுதான் என்கிறார் Dravidian Years புத்தகத்தை எழுதிய எஸ். நாராயணன். ஆனால், ரஜினியைப் பொறுத்தவரை ராஜாஜி பாணியில், தான் சொல்வதை எல்லோரும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறார்.

பட மூலாதாரம், RAJINIKANTH/TWITTER
மக்கள் தொகையில் ஐம்பது சதவீதமாக உள்ள பெண்களில் 20 சதவீதம் பேருக்குத்தான் தாங்கள் எப்படி வாக்களிக்கிறோம் என்பது தெரியுமென்றும் மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு தெரியாது என்றும் கூறினார் ரஜினி. உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் 30 சதவீதம் பேர் வாக்களிக்கும்விதம் குறித்தே கேள்வியெழுப்புகிறார் ரஜினி. ஆனால், ஆண்கள் குறித்து அவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் ஏதும் இல்லை. ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியில் காத்திருந்த ரசிகர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு (அல்லது இல்லை) என்பது இந்தப் பின்னணியில் கவனிக்க வேண்டிய ஒன்று.
தவிர, அரசியலுக்கு வர விரும்புவதாகச் சொல்லும் ரஜனி, தான் வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்பதை இப்போதுவரை சொல்லவில்லை. திராவிடக் கட்சிகளை வீழ்த்தப்போவதாக மட்டும் சொல்கிறார். அவற்றைத் தூக்கியெறியும் அளவுக்கு அவை செய்த தவறுகளை ரஜினி சுட்டிக்காட்டவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சியைவிட, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை, ஓய்வுபெற்ற அதிகாரிகளை வைத்து நடக்கப்போகும் தன்னுடைய ஆட்சி எந்தவிதத்தில் மேம்பட்டிருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இறுதியாக, தான் அரசியலுக்கு வருவது குறித்து முடிந்த முடிவாக எதையும் ரஜினி அறிவிக்கவில்லை. தான் வரவேண்டுமென ஒரு எழுச்சி ஏற்பட்டால் கண்டிப்பாக வருவேன் என ஒலிவாங்கியின் மேஜையைத் தட்டிச் சொன்னார் ரஜினி. அந்த எழுச்சியை ஏற்படுத்த பத்திரிகையாளர்கள் உதவவேண்டும்; மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், கட்சிப் பதவிகள், வாய்ப்புகள் குறித்து அறிவித்ததைத் தவிர, எடுத்துச் சொல்வதற்கான கொள்கைகளாக அவர் எதையும் முன்வைக்கவில்லை.
தன்னுடைய பேச்சின்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டுப் பேசிய ரஜினி, அவர் தனக்கு மிகவும் பிடித்த தலைவர் என்றார். "மக்களிடம் செல், மக்களோடு வாழ்ந்திரு, மக்களிடம் கற்றுக்கொள், மக்களை நேசி, மக்கள் பணியாற்று, மக்களோடு திட்டமிடு" என்றார் சி.என். அண்ணாதுரை.
ஆனால், ரஜினி அதிகபட்சமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அரசியல் விமர்சகர்களிடம் கற்றுக்கொள்கிறார். தான் திட்டமிடுவதை தன் ரசிகர்கள் ஏற்க வேண்டுமென்கிறார். மக்கள் பணியாற்ற இளைஞர்களை அனுப்புவேன் என்கிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதம், மீண்டும் துவங்கிய புள்ளிக்கே வந்திருக்கிறது.
பிற செய்திகள்:
- ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா, வெறிச்சோடும் நகரங்கள், ரத்தாகும் நிகழ்வுகள் - என்ன நடக்கிறது உலகில்?
- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் முதல் உயிரிழப்பு; நடந்தது என்ன? - சுகாதாரத்துறை விளக்கம்
- இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி - இராக்கில் தொடரும் மோதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












