ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை வீழ்த்திய அலிபாபா - எப்படி?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு பின்னடைவு
உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியால் ஆசிய பணக்காரா்கள் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் அதிபா் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
ஈகியூப் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸா்ஸ் நிறுவனத்தினை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
"'ஒபெக்' கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைக்கப் போவதாக ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்தது. இது, சா்வதேச சந்தையில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே கடந்த திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12 சதவீதம் சரிந்தது. இதனால், முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 580 கோடி டாலா் குறைந்தது. இதையடுத்து, அவா் ஆசிய பணக்காரா்கள் பட்டியிலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அம்பானியை விட 260 கோடி டாலா் கூடுதல் சொத்து மதிப்பைக் கொண்டு 4,450 கோடி டாலா் செல்வ வளத்துடன் அலிபாபா நிறுவனா் ஜாக் மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் என்று ப்ளூம்பொ்க் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அம்பானிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு தற்காலிகமானதே. ஏனெனில், அவா் மிகவும் வலுவான வா்த்தக கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளாா். இதைத் தவிர, அவரது தொலைத் தொடா்பு வா்த்தகமும் நல்ல முன்னேற்றம் கண்டு லாபம் கொழிக்கத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஆசிய பணக்காரா் பட்டியலில் முதலிடத்தை அவர் விரைவில் மீண்டும் பிடிப்பாா் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது" என்று அச்செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ் திசை: "கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பறவைக் காய்ச்சல் அபாயம்"

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் - கேரள மாநில எல்லைகளில் 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 26 சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
தமிழகத்தில் நுழையும் இதர வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்குள் நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால் நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கொண்ட மொத்தம் 1,061 அதி விரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்குத் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.
மேலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய நோய் கட்டுப்பாட்டு அறை கோயம்புத்தூர், கால்நடை பன்முக மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையை 0422-2397614 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்."
என்று இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினத்தந்தி: "தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகாது"

பட மூலாதாரம், Getty Images
வருவாய்க்கு விதிக்கப்படும் டி.டி.எஸ். வரியை ரத்து செய்ய வலியுறுத்தும் விதமாக வருகிற 27ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தமிழ்த் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில், "படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீதம் டி.டி.எஸ். வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வருகிற 27-ந்தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை வாங்கி வினியோகிப்பதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் டி.டி.எஸ். வரியை நீக்கும் வரை நடை முறையில் இருக்கும்" என்று தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது இச் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மாஸ்டர்': இணைத் தயாரிப்பாளர் வீட்டில் சோதனை

பட மூலாதாரம், XB Creations
'மாஸ்டர்' திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
நடிகர் விஜய், 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன நிர்வாகிகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்கள், பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்நிலையில், விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக விவரிக்கிரது இச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












